Jul 07, 2022
ஸ்பெஷல்

தமிழகத்தின் அடையாளம் தந்தை பெரியார்

ஈ.வெ.ராமசாமி எனும் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் ஈரோட்டில் 1879ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி பிறந்தார். தன் வாழ்நாளில் கடைசி நிமிடம் வரை சமூகத்தின் அடித்தட்டு மக்களின் உயர்வுக்காவே பாடுபட்டவர். சமூக நீதி, பெண்ணுரிமை, மூட நம்பிக்கை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, சமதர்ம சமத்துவ சிந்தனை வளர்ச்சி என தான் கொண்ட கொள்கைகளை கடைசி வரை பின்பற்றியதோடு மானிட பற்றோடு வாழ்ந்து காட்டியவர் தந்தை பெரியார். செல்வச்செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்த பெரியார் எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து காட்டியதோடு தன்னுடைய சொத்துக்களையும் மக்களுக்காகவே அர்ப்பணித்தவர். கேரளாவில் வைக்கம் என்னும் ஊரில் 1924ம் ஆண்டு கோயிலுக்குள் நுழையவும், கோயில் வீதியில் நடக்கவும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அந்த தடையை எதிர்த்து நடந்த போராட்டத்தில் தந்தை பெரியார் கலந்து கொண்டு சிறை சென்றார். இந்த போராட்டதிற்கு பிறகு பெரியார் “வைக்கம் வீரர்” என அழைக்கப்பட்டார். 1925ம் ஆண்டு சமூகத்தில் உள்ள மூடபழக்க வழக்கங்களை அகற்ற வேண்டும் என ‘சுயமரியாதை இயக்கம்’தொடங்கி மக்களிடைய விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

விதவை மறுமண உரிமை, பெண்களுக்கு சொத்துரிமை, பெண்களுக்கு கல்வி உரிமை, சொத்துரிமை, வேலைவாய்ப்பு உரிமை என பெண்ணுரிமைக்காக குரல் கொடுத்ததால் 1938ம் ஆண்டு நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் பெரியார் என்ற சிறப்பு பெயர் வழங்கப்பட்டது. பகுத்தறிவு பகலவன், வைக்கம் வீரர் என பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தாலும் பெண்கள் மாநாட்டில் சூட்டப்பட்ட பெரியார் என்ற பெயர் தான் அன்று முதல் இன்று வரை நிலைத்து நிற்கின்றது. பெரியாரின் சேவைகள், பணிகளை பாராட்டி ஐ.நா.வின் யுனெஸ்கோ மன்றம் 1970ம் ஆண்டில் சிறப்பு விருது வழங்கி கவுரவப்படுத்தியது. அன்றைய தமிழ்நாடு முதல்வர் கலைஞர் தலைமையில் நடந்த விழாவில் ஒன்றிய கல்வியமைச்சர் டாக்டர் திரிகுணசென் விருதினை வழங்கி சிறப்பித்தார். தந்தை பெரியார் தன் வாழ்நாளில் சுற்றுப்பயணம் செய்தது 8200 நாட்கள் ஆகும்.

இதில் வெளிநாட்டில் மட்டும் 392 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பிரசாரம் செய்த பொதுக்கூட்டங்களின் எண்ணிக்கை 10 ஆயிரத்து 700. சொற்பொழிவு ஆற்றியது 21,400 மணி நேரம். அவர் பயணம் செய்த தொலைவு 13 லட்சத்து 19 ஆயிரத்து 662 கிலோ மீட்டர் ஆகும். தமிழ் மொழிக்காகவும், திராவிட இனத்திற்காகவும் தன் வாழ்நாளை ஒப்படைத்தவர்.  தந்தை பெரியார் மறைந்து ஏறக்குறைய அரை நூற்றாண்டுகளை நெருங்கி வரும் நிலையிலும் இன்றைக்கும் அவரது கொள்கைகள், கருத்துக்கள் இச்சமுதாயத்திற்கு தேவையானதாகவே இருந்து கொண்டுள்ளது. திராவிட இயக்கத்திற்கு விதை விதைத்தவர் தந்தை பெரியார். அதை பாதுகாத்தவர் பேரறிஞர் அண்ணா. மரமாக வளர்த்தவர் கலைஞர். மரத்தை பாராமரித்து பாதுகாத்து வளர்த்தெடுக்கும் பணியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கொண்டுள்ளார். சமூக நீதியை காக்க தன் வாழ்நாளினை ஒப்படைத்த பெரியாரின் பிறந்த நாளை சமூக நீதிநாளாக கொண்டாடப்படும் என்று தமிழக சட்டமன்றத்தில் அறிவித்து பெருமை சேர்த்துள்ளார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்.

எல்லாவற்றிக்கும் மேலாக தந்தை பெரியார் கண்ட கனவான அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அறிவிப்பு இன்றைய தமிழக முதல்வரால் நனவாகி உள்ளது. “பெரியார் தனிமனிதரல்ல ஒரு சகாப்தம்” என்றார் அண்ணா. தமிழர்களின் அடையாளத்தையும், சுய மரியாதையையும் மீட்பதற்கு மட்டுமல்ல, சனாதன சக்திகளிடமிருந்து காப்பாற்றவும் பெரியாரின் கொள்கைகளும், கருத்துக்களும் நமக்கு தேவைப்படுகின்றது. எனவே தான் தமிழகத்தின் “ஐகான்” எனப்படுகின்றார் பெரியார். தமிழர்கள் இன்று தலை நிமிர்ந்து சமத்துவத்தோடும், பகுத்தறிவோடும் வாழ்கிறார்கள் என்றால் அதில் தந்தை பெரியாரின் பணி மிகப்பெரியது. பெரியார் அறிவு புரட்சியாளர் மட்டுல்ல, மாபெரும் சிந்தனையாளர். பெரியார் இன்றல்ல நாளை அல்ல. என்றைக்கும் பெரியார் தேவைப்படுகின்றார். பெரியாரின் 143ம் ஆண்டு பிறந்தநாளான இன்று நம் அனைவரும் சமூக நீதிநாள் உறுதிமொழியை எடுத்துக்கொள்வோம்.