May 09, 2021
தமிழகம்

சில்லரை கேட்டபோது வாக்குவாதம் அரசு பஸ்சில் முதியவரை தாக்கிய கண்டக்டர் சஸ்பெண்ட்

ஈரோடு: ஈரோட்டில் அரசு பஸ்சில் முதியவரை தாக்கிய கண்டக்டரை தற்காலிக  பணியிடை நீக்கம் செய்து அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் நடவடிக்கை  எடுத்துள்ளார். ஈரோடு மாவட்டம் சித்தோடு தெலுங்கு செட்டியார் வீதியை  சேர்ந்தவர் கணேசன் (73). காய்கறி வியாபாரி. கணேசன் நேற்று முன்தினம்  அதிகாலை சித்தோட்டில், இருந்து ஈரோடு மார்க்கெட்டில் காய்கறி  வாங்குவதற்காக, அவ்வழியாக வந்த அரசு பஸ்சில் ஏறினார். அவரிடம் பஸ் கண்டக்டர்  குமார் (34) சில்லரை தரும்படி கேட்டுள்ளார். இதில், இருவருக்கும்  வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  அப்போது, கணேசனை கண்டக்டர் குமார் கைகளால்  தாக்கி, ஒருமையில் தகாத வார்த்தைகளால் திட்டினார். பஸ்சில் இருந்து  கீழே இறங்குமாறு கூறினர். இதற்கிடையில் பஸ், ஈரோடு பஸ் ஸ்டாண்டை  வந்தடைந்தது.

பஸ்சில் முதியவரை தாக்கி, ஒருமையில் பேசியதை பஸ்சில்  பயணித்த ஒரு பயணி வீடியோ எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம்  செய்தார். இந்நிலையில், முதியவரை தாக்கி, ஒருமையில் தகாத வார்த்தைகளால்  பேசிய கண்டக்டர் குமார் நேற்று தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனை அரசு போக்குவரத்து கழக ஈரோடு மண்டல பொது மேலாளர் கணபதி உறுதி  செய்தார். இதில் பாதிக்கப்பட்ட கணேசன் சித்தோடு போலீஸ் ஸ்டேஷனில் புகார்  அளித்ததன்பேரில், போலீசாரும் விசாரணை செய்து வருகின்றனர்.