Jul 26, 2021
தமிழகம்

பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்கும் குழு விபரத்தை வெப்சைட்டில் வெளியிட வழக்கு

மதுரை: பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்கும் குழுவின் விபரத்தை வெப்சைட்டில் வெளியிடக் கோரிய மனுவின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வக்கீல் அமலா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: பணிபுரியும் இடங்களில் பாலியல் ரீதியாக பெண்கள் பலர் துன்புறுத்தப்படுகின்றனர். இதற்காக பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை கண்காணிக்க உள் புகார் குழு மற்றும் உள்ளூர் புகார் குழு அமைக்க வேண்டுமென உத்தரவிடப்பட்டது. இந்தியாவில் 29 சதவீத மாவட்டங்களில் தான் உள்ளூர் புகார் குழு அமைக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டில் 32 மாவட்டங்களிலும் செயல்படும் உள்ளூர் புகார் குழு முறையாக செயல்படவில்லை. 70 சதவீத பெண்கள், தங்களுக்கு எதிரான குற்றத்தை வெளியில் சொல்வதில்லை.

எனவே, பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்கும் சட்டங்களில் உள்ள குறைபாடுகளை மதிப்பீடு செய்ய நிபுணர் குழு அமைக்கவும், அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் விளம்பரப்படுத்தவும், பெண்களுக்கு பயிற்சி பட்டறை அளிக்கவும், உள் புகார் குழு மற்றும் உள்ளூர் புகார் குழுவை மாநில அளவில் தணிக்கை செய்யவும், புகார் அளிக்க வேண்டிய குழு உறுப்பினர்கள் பெயர் பட்டியல், தொலைபேசி எண்கள், மற்றும் மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றை இணையதளத்தில் பதிவேற்றவும், பெண்களுக்கு எதிராக எத்தனை குற்றங்கள் பதிவாகியுள்ளன, அதன் மீதான நடவடிக்கை குறித்து தெரியப்படுத்தவும், கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அனைவரும் அறிந்திடும் வகையில் தெரியப்படுத்தவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர், பொதுவாக குறிப்பிடாமல் குறிப்பிட்ட கூடுதல் விபரங்களுடன் கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.