Jul 26, 2021
தமிழகம்

கூட்டுறவு சங்க விவகாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க உத்தரவு

மதுரை: திருச்சி அன்பில் கூட்டுறவு கடன் சங்க தலைவர் அருண் நேரு, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘தமிழ்நாட்டிலுள்ள கூட்டுறவு சங்கங்களை கலைத்து விட்டு புதிதாக தேர்தல் நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கூட்டுறவு சங்கங்கள் லாபத்துடன், நல்ல நிலையில் இயங்கி வருகின்றன. தன்னாட்சி அமைப்பான இவற்றின் நிர்வாகத்திற்கு சட்டங்கள், விதிகள் உள்ளன. கடந்த 2018ல் தேர்வு செய்யப்பட்ட கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு வரை உள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்களை கலைத்து புதிதாக தேர்தல் நடத்த தடை விதிக்க வேண்டும். கூட்டுறவு சங்க நிர்வாகிகளின் பணிக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ், கூட்டுறவு சங்க விவகாரத்தில் தற்போதைய நிலை நீடிக்க வேண்டுமெனவும் மனுவிற்கு கூட்டுறவுத்துறை முதன்மை செயலர் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆகியோர் பதிலளிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.