Sep 19, 2021
தமிழகம்

கடந்த மே மாதம் வரையான அதிமுக ஆட்சியில் டெங்கு காய்ச்சலால் அதிகம் பாதித்த மாநிலம் தமிழகம்: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

நாகர்கோவில்: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போது கட்டுக்குள் வந்துள்ளது. முதல் அலையை தொடர்ந்து இரண்டாவது அலையும் முடிவுக்கு வந்துள்ளது. மூன்றாவது அலையின் தாக்கம் காணப்படும் என்று மருத்துவ துறை நிபுணர்கள் கூறி வருகின்றனர். அதை தடுப்பதற்கான முன்னேற்பாடுகளிலும் அரசு நிர்வாகங்கள் முடுக்கிவிடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தென்மேற்கு பருவமழைக்காலங்களில் ஏற்படும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு இந்த ஆண்டு முன்னதாகவே தமிழகத்தில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மே 31ம் தேதி வரை தமிழகத்தில் 2008 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

டெங்கு மரணம் இல்லை என்று ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்களில் தெரிவித்துள்ளது. இதே காலகட்டத்தில் கேரளாவில் 904 பேரும், கர்நாடகாவில் 903 பேரும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமான ஆய்வில் டெங்கு காய்ச்சல்  அதிகம் பாதித்த மாநிலமாக தமிழகம் உள்ளது. நாடு முழுவதும் கடந்த மே 31ம் தேதி வரை 6837 பேர் மட்டுமே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு அதிகப்படியாக 23,294 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  65 பேர் மரணம் அடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது டெங்கு காய்ச்சலை தடுக்கும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை பணியாளர்கள் தீவிரமாக செயலாற்றி வருகின்றனர்.