Oct 23, 2021
தமிழகம்

தனியார் மண்டபத்தில் மின் பெட்டி வெடித்ததால் திருமண நிகழ்ச்சியில் பயங்கர தீவிபத்து: உறவினர்கள் திடீர் சாலை மறியல்

பெரம்பூர்: எருக்கஞ்சேரியில் தனியார் மண்டபத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், மின் பெட்டி வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில், மணமகள் மயங்கி விழுந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பெரம்பூரை சேர்ந்த விஜய் என்பவருக்கும், கொருக்குப்பேட்டையை சேர்ந்த ஹேமமாலினி என்பவருக்கும் நேற்று முன்தினம் காலை கீழ்ப்பாக்கத்தில் உள்ள கோயிலில்  திருமணம் நடந்தது. அதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு வியாசர்பாடி, எருக்கஞ்சேரியில் உள்ள தனியார் மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், இரு குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 400 பேர் பங்கேற்றனர்.  

நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது இரவு 8 மணிக்கு மண்டபத்தில் உள்ள மின் பெட்டி பயங்கர சத்தத்துடன் திடீரென வெடித்து சிதறியது. தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால், நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் அலறியடித்துக் கொண்டு மண்டபத்தை விட்டு வெளியே ஓட்டம் பிடித்தனர். புகை மூட்டம் மற்றும் நெரிசலில் சிக்கி மணப்பெண், அவரது தாயார் மயங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும், தீயில் சிக்கி ஒருவர் காயமடைந்தார். அவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுபற்றி மண்டபத்தின் உரிமையாளரிடம் முறையிட்டபோது, அவர் அலட்சியமாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதனால், அத்திரமடைந்த திருமண விட்டார் மண்டப உரிமையாளரை கைது செய்ய கோரி எருக்கஞ்சேரி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எம்.கே.பி.நகர் சரக உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையிலான போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். அதை ஏற்காத அவர்கள் தொடர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர். இதனால் போலீசாருக்கும், திருமண வீட்டாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் மணமகனின் தந்தைக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்ததன் பேரில் மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டது தெரிந்தது. இதுதொடர்பாக, தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.