Oct 23, 2021
தமிழகம்

போலி ஆவணம் மூலம் ரூ.50 லட்சம் நில மோசடி பரமக்குடி சார் பதிவாளர் உள்பட 6 பேர் மீது வழக்கு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியை சேர்ந்தவர் சசிகலா. இவர் அப்பகுதியில் உள்ள 1,221 சதுரஅடி நிலம் மற்றும் அதில் உள்ள வீட்டை வசந்தி என்பவரிடமிருந்து கடந்த 2005, ஜூன் 22ல் கிரயம் பெற்றுள்ளார்.  தொடர்ந்து அனுபவம் செய்து வரும் ரூ.50 லட்சம் மதிப்பிலான இந்நிலத்திற்கு சசிகலா பட்டா மாற்றம் செய்யவில்லை. அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சிலர், இந்நிலத்தை போலி ஆவணம் மூலம்  பரமக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தில் கிரயப் பத்திரம் பதிவு செய்தனர்.

ரூ.50 லட்சம் மதிப்பிலான தனது நிலத்தை மோசடி செய்ததாக பரமக்குடி பாண்டியம்மாள், ஞானசேகரன், திருப்புவனம் சரஸ்வதி, எமனேஸ்வரம் குபேந்திரன், தெற்கு கோட்டையூர் மகேஸ்வரி மற்றும் பரமக்குடி சார் பதிவாளர் ஆகியோர் மீது ராமநாதபுரம் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசில் சசிகலா ஏற்கனவே புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் சார் பதிவாளர், 3 பெண்கள் உள்பட 6 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.