Dec 07, 2021
தமிழகம்

டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்-ஆயுர்வேத மருத்துவர் வேண்டுகோள்

ஜோலார்பேட்டை : டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று ஆயுர்வேத மருத்துவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மக்களை தேடி மருத்துவம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடந்தது. ஆயுர்வேத மருத்துவர் ஜெய்கணேஷ் தலைமை தாங்கினார். அப்போது, அவர் பேசியதாவது:

டெங்கு காய்ச்சல் கொசுக்கள் மூலமாக பரவும். அதனால், சுற்றுப்புறத்தை எப்போதும் நாம் தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் ஆங்காங்கே மழைநீர் கழிவுநீருடன் கலந்து கொசுக்கள் உற்பத்தியாகும். குடியிருப்புகளில் அருகே இருக்கும் பழைய பொருட்கள், கழிவுகள் குப்பைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்த வேண்டும். இதனால், அதிகளவில் கொசு உற்பத்தியாவதை தவிர்த்து டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்கலாம்.

சுகாதாரத்துறை சார்பில் கிராமங்களில் மக்களை தேடி மருத்துவம் என்ற மருத்துவ முகாம் மூலம் பொதுமக்களுக்கு நேரடியாக சென்று மருத்துவ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ரயில்வே நிலைய ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், பங்கேற்றவர்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது.