Mar 22, 2023
தமிழகம்

50 ஆண்டுகள் வாழும் அறிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டதாக தகவல்

ஈரோடு: 50 ஆண்டுகள் வாழும் அரிய வகை பறவை இனமான மலை இருவாச்சி அந்தியூர் அருகே உள்ள நீர்நிலைகளில் காணப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டம் வனசரகத்திற்கு உட்பட்ட நீர்நிலை பகுதிகளில் வனத்துறை சார்பில் நேற்று ஒரு நாள் பறவைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது. இந்த பணியின் போது 50 நீர்நிலை பறவையினங்களும் 36 பொது பறவை இனங்கள் என மொத்தம் 86 பறவை இனங்கள் கண்டறியப்பட்டன. இதில் ஐரோப்பிய கண்டத்தில் இருந்து இந்தியாவிற்கு வலசைவரும் பறவை இனங்களில் ஒன்றான யூரோப்பியன் விஈடர் பறவை காணப்பட்டது.

பூச்சிகளை மட்டுமே உண்ணும் பறவையான இது தமிழில் பஞ்சுருட்டான் என அழைக்கப்படுகிறது. இதே போல இருவாச்சி குடும்பத்தை சேர்ந்த மிக அரிதாக தென்படும் மலை இருவாச்சி பறவையும் தென்பட்டுள்ளது. ஏறத்தாழ 50 ஆண்டுகாலம் வாழும் இந்த பறவை உருவ அமைப்பில் பெரிதாக இருப்பதுடன் நீளமான வளைந்த அலகையும் கொண்டிருக்கும் என்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.