Mar 22, 2023
தமிழகம்

பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றிருந்தும் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடிய ஏலகிரி மலை

ஏலகிரி: பொழுதுபோக்கு அம்சங்கள் பல இருந்தும் ஏலகிரி மலையில் சுற்றுலா தளங்களில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டில் சிறந்த சுற்றுலா தளங்களில் ஒன்றாக  வளர்ச்சியுற்ற சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது. ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் இந்த ஏலகிரி மலையில் முக்கிய சுற்றுலா தளங்களான  இயற்கை பூங்கா, படகுஇல்லம், சிறுவர் பூங்கா, பண்டேரா பார்க், மங்கலம் சுவாமிமலை மலையேற்றம், செல்பி பார்க், கதவ நாச்சி அம்மன் திருக்கோவில், மங்களம் தாமரைக் குளம், இயற்கை மூலிகை பண்ணை, பப்ஜி விளையாட்டு தளம், உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தளங்கள் உள்ளன.

இங்கு வார இறுதியில் விடுமுறை நாட்களில் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலத்தினை கண்டு ரசித்து பொழுது போக்கி செல்கின்றனர். இந்த மலை ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்று சிறந்த சுற்றுலா தளமாக விளங்குவதால் இங்கு வெளிநாடு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா, கர்நாடகா, ஆந்திரா, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், தமிழ்நாட்டில் வெவ்வேறு பகுதிகளில் இருந்தும், குடும்பத்தோடும், நண்பர்களோடும், அனைத்து சுற்றுலா தளங்களையும்  பார்த்து செல்கின்றனர். இத்தகைய பொழுதுபோக்கு அம்சங்கள் பல இருந்தபோதிலும் கடந்த வாரத்தில்  விடுமுறை தினம் இல்லாததால் ஏலகிரி மலைக்குச் சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக உள்ளது.  இதனால் சுற்றுலா தளங்கள் அனைத்தும் வெறிச்சோடி காணப்படுகிறது. வியாபாரிகளும் வருவாயின்றி தவித்து வருகின்றனர்.