Jun 20, 2021
தொழில்நுட்பம்

இந்தியா சொந்தமாக உருவாக்குகிறது வாட்ஸ் அப்புக்கு பதிலாக வருகிறது 2 புதிய செயலி

புதுடெல்லி: வாட்ஸ்அப், பேஸ்புக், கூகுள், டிவிட்டர் போன்ற பெரும் இணையதள தொழில்நுட்ப நிறுவனங்களினால், தனிநபர் தகவல் திருடப்படுவதாக, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிலும் குறிப்பாக இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட பல்வேறு நாடுகள் சமீப காலமாக இந்நிறுவனங்களின் பிரதிநிதிகளை அழைத்து, தங்களின் நாட்டின் சட்டம், கொள்கைக்கு ஏற்ப நடக்கும்படி எச்சரித்துள்ளன. இந்நிலையில், வாட்ஸ்அப் போன்று இந்தியாவிற்கான சொந்த செயலி வடிவமைக்கப்பட்டு வருவதாக மத்திய மின்னணு, தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், வாட்ஸ்அப் போன்றே, ‘சம்வத்’, (உரையாடல்), ‘சந்தேஷ்’ (செய்தி) என்ற பெயரில் 2 புதிய செயலிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒன்று, அரசு ஊழியர்களுக்கான பிரத்யேக தளமாக இருக்கும்.  மற்றொன்று, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். . இதற்கான பணிகள் நிறைவடைந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி இவற்றை நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். சந்தேஷ் செயலி, நீலம், வெள்ளை நிறத்தில் அசோக சக்கரத்தை கொண்டதாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. தற்போது, சோதனை முறையில், ஆப்பிள் ஸ்டோரில் சிலருக்கு மட்டும் செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.