Jun 18, 2021
விமர்சனம்

பேட் பாய்ஸ் ஃபார் லைஃப் - விமர்சனம்

கொலம்பியா பிக்சர்ஸ் தயாரிப்பில் சோனி வெளியீட்டில் அடில்&பிலால் ரெட்டை இயக்குநர்களின் இயக்கத்தில் வில் ஸ்மித், மார்டின் லாரன்ஸ், வனேஸா ஹட்ஜென்ஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘பேட் பாய்ஸ் : ஃபார் லைப்’. 25 வருட நாஸ்டால்ஜியா நினைவுகளைத் தட்டிப் பார்க்கும் பொருட்டு 2020ல் வெளியாகியிருக்கிறது. மெக்சிகோ நாட்டின் மிகப்பெரும் போதை மருந்துக் கடத்தல் காரன் இருபது வருடங்களுக்கு முன்பு டிடெக்டிவ் மைக் யுஜீன் குழு நடத்திய(வில் ஸ்மித்) ஆபரேஷனால் கொல்லப்படுகிறான்.

அதற்கு பழிவாங்கும் விதமாக அவனது மனைவி ரீடாவும்(பாலோ நானெஸ்) மகனும் களம் இறங்குகிறார்கள். குறிப்பாக மைக்கேல் யுஜீன் மீது மன்னிக்க முடியாத கோபத்தில் இருக்கிறார் ரீடா. இவ்வேளையில் டிடெக்டிவ் ரெட்டையரான ‘பேட் பாய்ஸ்‘ குழுவில் ஒருவரான மார்கஸ் மைல்ஸ்(மார்டின் லாரென்ஸ்) வயது காரணமாக பணி ஓய்வு பெறலாம் என முடிவெடுக்கிறார்கள். பணி ஓய்வு முழுமனதோடு ஏற்றுக் கொண்டு அந்த வாழ்வை வாழ வேண்டி அத்தனையும் செய்கிறார்.

ஆனால் மைக்கை பொருத்தவரை பேட் பாய்ஸ்க்கு எப்போதும் ஓய்வு கிடையாது ‘பேட் பாய்ஸ் பார் லைஃப்‘ என தன் நண்பனை கட்டாயப்படுத்துகிறார் ஆனால் மார்க்கஸ் ஒரே முடிவாக இனி தன் வாழ்க்கை குடும்பம் ஓய்வு இது தான் என முடிவெடுக்கிறார். இந்த வேளையில்தான் திடீரென ஒரு மர்ம நபரால் மைக் சரமாரியாக நடு ரோட்டில் சுடப்பட களத்தில் குதிக்கிறது ‘பேட் பாய்ஸ்‘ குழு. முடிவு என்ன என்பது பரபர ஆக்‌ஷன். இருபதுகளில் மகன் ஒருவர் இருக்கிறார் என்று சொன்னால் யாரும் நம்ப முடியாத அளவிற்கு வில் ஸ்மித் இப்போதும் 90களில் பார்த்த அதே நடை உடை ஸ்டைல் என மாஸ் காட்டுகிறார்.

ஆக்‌ஷன் காட்சிகள், சென்டிமென்ட் என ஸ்மித் ஹேண்ட்சம் பாய் லுக்கில் இருப்பது இப்போதும் ஆச்சர்யமே. மார்ட்டின் லாரன்ஸ்... பேட் பாய்ஸ் படங்களின் சீரிஸ் என்றாலே காமெடிக்கு நான் கேரண்டி என காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம். முக்கியமாக அவர் செய்யும் குறும்புகளும் , அப்பாவியாக காரை இழந்து மனைவிக்காக பயந்து நிற்பதுமாக நம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறார். ’பேட் பாய்ஸ்’ இனி பாய்ஸ் இல்ல’ என சீரியஸாக முகத்தை வைத்துக்கொண்டு மார்ட்டின் சொல்லும் போது நமக்கு குபீர் என சிரிப்பு வந்துவிடுகிறது.

படத்திற்கு அடுத்த கவர்ச்சி எலிமென்ட் வனேஸா ஹட்ஜென்ஸ், உயரமான ஆக்‌ஷன் குயின். டாம் பாய் தோற்றம் ஏனோ அவருக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளிலும் மாஸ். காமெடி, ஆக்‌ஷன், குடும்பம், வேலை, சென்டிமென்ட் என அத்தனையையும் சரிவர கலந்து ஹாலிவுட் படம் பார்க்காத மக்களையும் கூட ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்‘ நிச்சயம் திருப்தி படுத்தும். என்ன படம் நெடுக யோசிக்காமல் வந்து விழுகிறது கெட்ட வார்த்தைகள்.

அதைத் தவிர்த்தால் பிறகென்னா பேட் பாய்ஸ் தலைப்பு. என்பதால் இட்ஸ் ஓகே பாஸ். ராபர்ட் ஹேவாரெட்  ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்து எனில் லோர்னே பால்ஃபி பின்னணி இசை காதுகளுக்கு டபுள் விருந்து. அதிலும் சண்டைக்காட்சிகள், மெக்ஸிகோ பார்ட் என நம்மைக் கடத்திச் சென்றுவிடுகிறார்கள் இருவரும். மொத்தத்தில் ‘பேட் பாய்ஸ்‘ பாகங்களின் ரசிகர்களுக்கு மட்டுமல்ல பொதுவான பார்வையாளர்களுக்கும் ‘பேட் பாய்ஸ் ஃபார் லைஃப்‘ நிச்சயம் சிறப்பான பொழுதுபோக்குப் படமாக இருக்கும்.