Jun 18, 2021
விமர்சனம்

கன்னி மாடம் - விமர்சனம்

சாதி வன்முறைகளுக்கு எதிரான படங்களில் ஒன்று, கன்னி மாடம். மகள் வேறொரு சாதி பையனை காதலித்து மணந்தாள் என்பதற்காக இருவரையும் வெட்டி கொன்றுவிட்டு சென்னையிலுள்ள ஜெயிலுக்கு செல்கிறார் கஜராஜ். அவரை கவனித்துக்கொள்ள, சென்னைக்கு வந்து ஆட்டோ ஓட்டுகிறார் மகன் ஸ்ரீராம் கார்த்திக். அப்போது சாதி மாறி திருமணம் செய்துகொண்ட விஷ்ணு ராமசாமியும், சாயா தேவியும் உயிருக்கு பயந்து சென்னைக்கு வருகின்றனர். அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார், ஸ்ரீராம் கார்த்திக்.

இதற்கிடையே, திடீர் விபத்தில் விஷ்ணு  ராமசாமி மரணம் அடைகிறார். இதனால் தனித்து விடப்பட்ட சாயாதேவியை பாதுகாக்க வேண்டிய பெரிய பொறுப்பு ஸ்ரீராம் கார்த்திக்கிற்கு வந்து சேருகிறது. இருவரும் கணவன், மனைவி என்று பொய் சொல்லி வாடகை வீட்டில் தங்குகின்றனர். சாயாதேவியை ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து பாதுகாக்கிறார், ஸ்ரீராம் கார்த்திக். அப்போது பரோலில் வெளியே வரும் கஜராஜை, சாயாதேவி இருக்கும் வீட்டில் விட்டுவிட்டு செல்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். பிறகு என்ன நடக்கிறது என்பது மீதி கதை.

முதல் படத்திலேயே சாதி வெறியை கையிலெடுத்து, அதை மிக அழுத்தமாக பதிவு செய்து, ரசிகர்கள் எதிர்பார்க்காத மாறுபட்ட முடிவை கொடுத்து கவனத்தை ஈர்த்துள்ளார், நடிகர் போஸ் வெங்கட். நகர்ப்புறங்களில் நடுரோட்டில் நடக்கும் படுகொலைகளுக்கு பின்னால் இருக்கும் கொடூரத்தை, உண்மைக்கு நெருக்கமாக இருந்து படமாக்கி இருக்கிறார். கனமான கேரக்டரை பொறுப்புடனும், நிறைவுடனும் செய்து இருக்கிறார் ஸ்ரீராம் கார்த்திக். அவருடைய நண்பராக வரும் ஆடுகளம் முருகதாஸ், அவ்வப்போது சிரிக்க வைக்கிறார். ஸ்ரீராம் கார்த்திக்கை ஒருதலையாய்க் காதலிக்கும் ஆட்டோ டிரைவர் வலீனா பிரின்ஸ், இயல்பான நடிப்பில் கவனிக்க வைக்கிறார்.

இது முதல் படமா என்று ஆச்சரியப்பட வைக்கிறார், சாயாதேவி. தன் காதலனுடன் வீட்டை விட்டு ஓடிவந்த ஒரு பெண்ணின் கவலையையும், பயத்தையும் அப்படியே முகத்தில் தேக்கி வைத்துள்ளார். ‘வளர்ந்த வீட்டை விட்டுட்டு ஓடிப்போன பெண்ணை, ஓடுகாலின்னு சொல்வாங்க. நாம் வாழ்ந்து ஜெயித்து அதை மாத்தியாகணும்’ என்று தன் காதலனிடம் கலங்கி நிற்கும்போதும், ஸ்ரீராம் கார்த்திக் செய்கின்ற உதவிகளை மறுக்கவும் முடியாமல், ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் தவிக்கும் காட்சியிலும் முதிர்ந்த நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது காதலன் விஷ்ணு ராமசாமி, ஸ்கொயர் ஸ்டார் சூப்பர் குட் சுப்பிரமணி, கவுன்சிலர் பிரியங்கா ரோபோ சங்கர், கஜராஜ் தங்கள் பங்கை சரியாக செய்துள்ளனர்.  

இனியன் ஜே.ஹாரிஸ் ஒளிப்பதிவு, தரம். ஹரி சாய் வழங்கிய பின்னணி இசை பரவாயில்லை. பாடல்களில், பழைய பாடல்களின் சாயல்.
சகோதரியையும், அவள் கணவரையும் கொன்ற தன் தந்தையை ஸ்ரீராம் கார்த்திக் ஏன் தட்டிக் கேட்கவில்லை? பரோலில் விடுதலையாகி வெளியே வரும் தந்தையை எதற்காக சாயாதேவி இருக்கும் வீட்டுக்கு அழைத்து வர வேண்டும்? தன் கிராமத்தில் மிகவும் வசதியான வீட்டில் வாழ்ந்த ஸ்ரீராம் கார்த்திக், நகரத்தில் ஏன் ஆட்டோ ஓட்ட வேண்டும்? இந்த கேள்விகள் எழுந்தாலும், கன்னி மாடம் நல்ல முயற்சி.