Sep 30, 2022
விமர்சனம்

சக்ரா - விமர்சனம்

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி தயாரிப்பில் எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரதா ஸ்ரீநாத், கே.ஆர்.விஜயா, ரோபோ ஷங்கர், மற்றும் பலர் நடித்திருக்கும் படம் ‘சக்ரா’.

இந்திய சுதந்திர தினம் பரபரப்பான கொடியேற்றம், போலீஸ் பாதுகாப்பு என நகரமே செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அவ்வேளையில் போலீஸ் புகார் அறைக்கு ஒரு அழைப்பு வருகிறது. ‘கத்தி முனையில் எங்கள் வீட்டில் திருட்டு நடந்திருக்கிறது’ எனச் சொல்லி வந்த அந்த அழைப்பு துண்டிப்பதற்குள் மேலும் சில அவசர அழைப்புகள் அதே புகார், ‘இரு முகமூடிக் கொள்ளையர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து எங்களை மிரட்டி பணம், நகை அனைத்தையையும் கொள்ளையடித்துவிட்டனர்’. அந்த ஏரியா காவல் அதிகாரிகளுக்கு தகவல் பறக்க அனைவரும் களத்தில் இறங்குகின்றனர். ஆனால் அதற்குள் திருடர்கள் சுமார் 49 வீடுகளில் கைவரிசையக் காட்டித் தப்பிச் செல்கிறார்கள். இதனைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு துணை ஆணையர் காயத்ரியிடம்(ஷ்ரதா ஸ்ரீநாத்) வருகிறது. விசாரணையில் 49 அல்ல 50 வீடுகள் அதில் ஒன்று தன் முன்னால் காதலன் சந்துருவின்(விஷால்) வீடும் அடக்கம் எனத் தெரியவருகிறது.

மேலும் சந்துருவின் அப்பா முன்னால் ராணுவ அதிகாரியாக பணி செய்து அஷோக சக்ரா விருது வாங்கியவர். அவரைத் தொடர்ந்து அவரது மகன் சந்துருவும் ராணுவத்தில் பெரிய பொறுப்பில் இருக்கிறார். மேலும் தன் தந்தையின் அசோக சக்ரா விருதை உயிரினும் மேலாக பாதுகாத்து வருகிறார். அதுவும் நடந்தத் திருட்டில் காணாமல் போக காயத்ரி மற்றும் குழுவுடன் சந்துருவும் இணைந்துகொள்கிறார். திருடர்களை பிடிக்க மொத்த போலீஸ் குழுவும் உடன் சந்துருவும் இறங்கி ஒவ்வொரு முடிச்சாக அவிழ்க்கிறார்கள். முடிவு என்ன என்பது மீதிக் கதை.

எந்த மாஸ் மசாலா அறிமுக பாடல்களோ , பஞ்ச் டயலாக்குகளோ இல்லாமல் என்ட்ரி கொடுக்கும் விஷால் படம் முழுக்க அந்த கெத்தையும் விடாமல் மெயின்டெயிண்ட் செய்திருக்கிறார். ராணுவ அதிகாரிக்கான மிடுக்கிலும் மிளிர்கிறார். மேலும் படத்தில் காதல் செய்வதற்கான காட்சிகள் வைக்கக் கூடிய இடங்கள் நிறைய இருப்பினும் பெரிதாக டூயட் அல்லது, ரொமான்ஸ் என இல்லாமல் கதைக்கு அதீத முக்கியத் துவம் கொடுத்தமைக்கு பாராட்டுகள். ஷ்ரதா ஸ்ரீநாத் போலீஸ் கெட்டப்பில், ஆக்‌ஷன் அதிரடி என கலக்கியிருக்கிறார். வழக்கமான நாயகி நானல்ல என படத்திற்கு படம் வித்யாசம் காட்டும் ஷ்ரதா இந்தப் படத்திலும் அதை கடைபிடித்திருக்கிறார். படத்தின் இன்னொரு ஸ்பெஷல் ரெஜினா அவரது பாத்திரம் நிச்சயம் பலரையும் ஈர்க்கும். மேலும் அவரது ஸ்டைல், ஆக்‌ஷன் என புது ரெஜினாவை இந்தப் படத்தில் பார்க்கலாம்.

ரோபோ சங்கர் காமெடிக்கும் மட்டுமின்றி கதைக்கும் கொஞ்சம் பயன்பட்டிருக்கிறார். இருப்பினும் இங்கே நான் காமெடி செய்தே திருவேன் தருணங்களை எதிர்காலத்தில் தவிர்த்தால் நலம். படத்தின் ஆச்சர்யமான இடைவேளை, விறுவிறு திரைக்கதை, திருடர்களின்  நவீன திட்டங்கள் என இயக்குநர் நல்ல திரில்லர் பேக்கேஜாகக் கொடுத்திருக்கிறார். மேலும் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் ஹீரோயிஸமான காட்சிகளுக்கும் பஞ்சமில்லாமல் செல்கிறது. சில இடங்களில் லாஜிக்தான் சற்று தொங்குகிறது. குறிப்பாக ஒரு ராணுவ அதிகாரி காவல் துறை விசாரணையில் இவ்வளவு நுழைய முடியுமா. மேலும் காவல் துறைக்கே உத்தரவிட்டு செயல்படுத்த முடியுமா? அடுத்து இது ஒரு க்ளூவிற்கான காட்சி என நாமே கணிக்கும்படி அடுத்தடுத்த கண்டிபிடிப்புகளுக்கு, க்ளூவிற்கெல்லாம் காட்சி நுழைப்பு கொஞ்சம் ஓவர் டோஸ்.

ஒரு தனியார் ஆன்லைன் சேவை மையம் அதன் மூலம் திருட்டு, ஹேக்கிங் என நவீன முறையில் யோசிக்கும் திருடர்கள் ஏன் அப்பட்டமாக கையைத் தூக்கி மாட்டிக் கொள்கின்றனர். அட எவ்வளவுதான் தில்லான வில்லன் என்றாலும் எங்கே முடிந்தால் பிடி என சவால் விடுவதெல்லாம் தமிழ் சினிமா கிளிஷே. இதில் புறாக்களுக்கு சி.சி.டிவி கேமரா எவைப்பதெல்லாம் சமூகம் பெரிய இடமோ தருணம்.  திருடும் போது கூட சின்னக் காயம் ஏற்படுத்தாமல் திருடும் வில்லன்கள் குழு அப்பாவி நண்பரின் அம்மாவை தேவையே இல்லாமல் கொலை செய்வது ஏன் என்னும் கேள்வி எழுப்புகிறது. இதில் விஷால் வில்லன் கூடவே பயணித்தும் பிடிக்காமல் பஞ்ச் சொல்லி கிளம்பும் போது அட போங்கயா என்றே தோன்றுகிறது.
படம் ஆரம்பித்தத் தருவாயில் ‘இரும்புத்திரை’ பாகம் 2 என தலைப்பு வைக்கும் பேச்சு வார்த்தை இருந்ததால் அந்த அளவிற்கு படம் இருக்கிறதா எனில் அந்த அளவிற்கு முயற்சி இருக்கிறது.

ஆனால் கிடைத்ததோ ‘சக்ரா’. ‘இரும்புத்திரை’ நாம் தினம் தினம் சந்திக்கும் பிரச்னைகளையும், ஆபத்துகளையும் விபரமாக பேசி அதில் ஹீரோவே ஒருவராக மாட்டி திண்டாடுவதைக் காட்டியதாலேயே படம் வெகுஜன மக்கள் மத்தியில் சென்றடைந்தது. இந்தப் படம் வெகுஜன பார்வைக்கு இன்னும் கொஞ்சம் மெனெக்கெட்டிருக்கலாம். சில காட்சிகள் , திருப்பங்கள் பாமரனுக்குப் புரியுமா என்னும் கேள்விகள் கூட எழுகின்றன. இதில் பாகம் 2க்கான அடித்தளம் வேறு, இதெல்லாம் பாவம் மை சன்? ஆக்‌ஷன், திரில்லருக்கு அதிரடி சேர்த்திருக்கிறது கே.டி.பாலசுப்ரமணியனின் ஒளிப்பதிவு. யுவன் ஷங்கர் இசையில் பாடல்கள் ஓகே, ஆனால் பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார். குறிப்பாக இடைவேளைக்கு பிறகு யுவன் கைதான் ஓங்கி நிற்கிறது. மொத்தத்தில் ‘இரும்புத்திரை’ படத்துடன் ஒப்பிடாமல் பார்த்தால் நிச்சயம் ‘சக்ரா’ ஆக்‌ஷன் அதிரடி திரில்லராக நம்மை திருப்திபடுத்தும்.ஒரு வருடம் கழித்து வெளியான ‘மாஸ்டர்’ படத்திற்கு பிறகு வெளியாகியிருக்கும் மாஸ் படம். ஓரளவு நம்மை ஏமாற்றாமல் சீட்டில் உட்கார வைத்திருக்கிறது.