Dec 09, 2022
விமர்சனம்

கர்ணன் திரை விமர்சனம்

கலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால் பால், யோகி பாபு, ரஜிஷா விஜயன், கௌரி கிஷான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘கர்ணன்’.

பேருந்து கூட நிற்காத பொடியன் குளம் கிராமம், அதனை ஒடுக்கும் மேலூர் கிராமம். பேருந்து நிற்காது என்னும் ஒற்றை பிரச்னையால் அந்த ஊரில் அடிப்படைத் தேவைகள் கூட இல்லாமல் வாடுகின்றனர். இதில் கூடுமானவரை அந்தக் கிராமத்தை கல்வி, விவசாயம், என எதிலும் முன்னேற விடாமல் பார்த்துக்கொள்கின்றனர் பக்கத்து மேலூர் பெருந்தலைகள். ஒரு கட்டத்தில் தலையை நிமிர்த்திப் பார்க்க துடிக்கும் கிராமத்திற்கு ஊன்றுகோலாக நிற்கிறார் கர்ணன்(தனுஷ்). சாதிய அரசியல், காவல் துறையின் அடக்குமுறை, என அனைத்திற்கும் சவாலாக எழுந்து நிற்கும் கிராமம் தங்களின் தலைவராகவும், பாதுகாவலனாகவும் கர்ணனைப் பார்க்கிறது. இந்தப் போராட்டத்தின் முடிவு என்ன என்பதே மீதிக்கதை.

‘அசுரன்’ படத்தின் மூலம் இரண்டாவது தேசிய விருதைத் தட்டியிருக்கும் தனுஷ் இந்தப் படத்திலும் தனக்கான பாத்திரத்தின் ஆழத்தை அறிந்து அத்தனை நியாயம் சேர்த்திருக்கிறார். லுங்கி சகிதமாக வம்பிழுத்துத் திரிவது, காதலியைக் கண்டவுடன் கண்கள் படபடப்பது, கிராமத்தைக் காக்க வாள் ஏந்தி நிற்பது என கிராமக் கூட்டத்தின் ஒருவனாகவே மாறித் தெரிகிறார் தனுஷ். இந்தப் படத்திலும் அவருடைய நடிப்பிற்கும் அர்ப்பணிப்பிற்கும் சில பல விருதுகள் கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. குறிப்பாக பேச்சு வழக்கில் அவ்வளவு ரியாலிட்டி. லால் பால் இதுவரையிலும் தமிழில் கமர்சியல் வில்லன் பாத்திரங்களில் மட்டுமே நடித்து வந்தவருக்கு உண்மையான நடிப்புத் தீணி இந்தப் படம்தான். சின்னப்பிள்ளை போல சுற்றுவதும், பொறுப்பான தாத்தாவாக மாறி தனுஷை தாங்கிப் பிடிப்பதும் என மனிதர் ஏமராஜாவாகவே வாழ்ந்திருக்கிறார். திரௌபதியாக வரும் ரஜிஷா விஜயன் தனுஷைக் காதலிக்கிறார் அதை இயல்பாக செய்தாலும் இன்னும் அவருக்கு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பாக அமைத்திருக்கலாம்.

வடமலையான் யோகிபாபு, காவலதிகாரி கண்ணபிரானாக வரும் நட்டி , குதிரைக்கார சிறுவன், தனுஷ் அக்காவாக வரும் லட்சுமி பிரியா என அத்தனைப் பேரும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ‘பரியேறும் பெருமாள்’ படத்தில் சாதி பிரச்னை ஒரு மனிதனின் வாழ்க்கையை எப்படி எல்லாம் அலைக்கழிக்கும் எனப் புள்ளி வைத்து ஆரம்பித்த மாரி செல்வராஜ் , அதே சாதிப் பிரச்னை ஒரு ஊரையே என்ன செய்யும் எனக் காண்பித்திருக்கிறார். ஒரு சின்னப் போக்குவரத்து வசதி துவங்கி அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காமல் ஒடுக்கப்படும் ஒரு கிராமத்தின் எழுச்சியும் கோபமுமாக ஒவ்வொரு காட்சியிலும் அத்தனை இயல்பாக பதிவு செய்ததற்கு சபாஷ். காவல் நிலையத்தில் ஆடும் அம்பேத்கர் புகைப்படம், கால் கட்டப்பட்ட கழுதை என படம் நெடுக அரசியல் குறியீடுகள் ஹைலைட். ‘கண்டா வரச் சொல்லுங்க’ என படத்தின் ஆரம்பத்திலேயே ஒரு பக்கம் சந்தோஷ் நாராயணன் இசை நம்மை ஆட்கொள்ளத் துவங்கினால் இன்னொரு பக்கம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவில் பொடியன்குளம் பொன்னைப் போல் ஜொளிக்கிறது.

 மாரி செல்வராஜின் கிராமத்து அத்தியாயத்திற்கு அழகான வடிவம் கொடுத்துள்ளனர் இருவரும். ‘தட்டான் தட்டான்’, ‘மஞ்சணத்திப் புராணம்’ என ஏற்கனவே பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகிவிட்ட நிலையில் படத்துடன் இன்னும் அழகியலாகக் கண்களுக்கு விருந்து வைக்கின்றன. தலை இல்லாத பௌத்த சிலை, வரையப்படும் ஓவியம், வெகுசனத் தெய்வ வழிபாடாக மீன் வெட்டுதல், ஊர் எல்லையில் வைக்கப்பட்ட இறந்தவர்களின் சிலைகள் என முற்றிலும் புதிய பதிவுகள் மேலும் திணிக்கப்படாமல் கதையோட்டத்தில் வருவது கூடுதல் சிறப்பு. இத்தனையும் தனுஷ் என்ற ஒற்றை மாஸ் எலிமென்டால் கொஞ்சம் அவ்வப்போது காணாமல் போகிறது.

தனுஷை எப்படியேனும் ஹீரோவாகக் காட்ட வேண்டும் என்ற மெனெக்கெடல் மேலோங்கியதால் கதையின் போக்கிலும், சொல்ல வந்த கருத்தியலிலும் சில பல தியாகங்கள் செய்தது பளிச்சிடுகிறது. குறிப்பாக ஊருக்கான உரிமைப்போரில் ஒருவரை மட்டும் மீட்பர் போல் மக்கள் காலில் விழுந்து எழுந்து தூக்கிக் கொண்டாடுவது சினிமா ஹீரோ கிளீஷேக்கள். மொத்தத்தில் நகரத்தில் இருந்துகொண்டு ஊருக்குள் நடக்கும் பிரச்னைகள் தெரியாத மக்களுக்கு நிச்சயம் புதுமையானதொரு அனுபவத்தையும், சாதாரணமாக நாம் அனுபவிக்கும் சின்னச்சின்ன வசதிகள் கூட கிடைக்காமல் எத்தனையோ கிராமங்கள் சாதி சாயத்தால் நசுக்கப்பட்டிருப்பதும், நசுங்கிக்கொண்டிருப்பதையும் இப்படம் ஓரளவும் உணர்த்தும் என்பதால் ‘கர்ணன்‘ தவிர்க்க முடியாத ஓர் பதிவு.