Jan 24, 2022
விமர்சனம்

கோஸ்ட் பஸ்டர்: ஆஃப்டர் லைஃப்

கொலம்பியா பிக்சர்ஸ், சோனி வெளியீட்டில் ஜேசன் ரீட்மேன் இயக்கத்தில் கேரி கூன், ஃபின் வுல்ஃப் ஹார்ட், மெக்கென்னா கிரேஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் கோஸ்ட் பஸ்டர் : ஆஃப்டர் லைஃப்.

டாக்டர் ஈகான் ஸ்ப்லெஞ்லர் ஒரு முன்னாள் கோஸ்ட் பஸ்டர். அவரின் மறைவுக்குப் பின் அவரது வயலுடன் இணைந்த பழைய வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள் ஈகானின் மகள் கேலி ஸ்ப்லெஞ்லர். உடன் டீன் வயது மகன் டிரிவர் மற்றும் மகள் பியோப். பிடிக்காமலேயே அந்த கிராமத்திற்கு வரும் குடும்பத்தை அமானுஷ்ய விஷயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிக்கின்றன. குறிப்பாக மகள் பியோப் புது பள்ளியில் கிடைத்த நண்பன் பாட்கேஸ்டருடன் இணைந்து முழுமையாக ஆராய்ச்சியில் சுற்றுகிறார். பிசாசு பிடிக்கும் இயந்திரங்கள், கார் என ஒவ்வொரு கட்டமாக நகரும் பியோபுடன் ஒரு கட்டத்தில் அண்ணன், அம்மா என கைகோர்க மொத்த குடும்பமும் அந்த ஊரையே காப்பாற்றும் பொறுப்பிற்கு ஆளாகின்றனர். முடிவு என்ன என்பது குழந்தைகள் ஸ்பெஷல் ஜாலி கோஸ்ட் பஸ்டர்: ஆஃப்டர் லைஃப்.

1984ல் வெளியான கோஸ்ட் பஸ்டர் படத்தின் தொடர்ச்சியாக வெளியாகியிருக்கும் இப்படத்தில் முழுமையாகவே குழந்தைகள், குடும்பம் என்னும் பாணியில் படத்தை நகர்த்தியிருக்கிறார். இயக்குநர் ஜேசன் ரீட்மென்.

பியோபாக வரும் சிறுமி மெக்கென்னா கிரேஸ்தான் படத்தின் ஆணிவேர். வித்யாசமான குழந்தையாக தனக்கென தனி உலகம், வயதுக்கு மீறிய பேச்சு என நடிப்பில் அசால்ட் காட்டியிருக்கிறார். உடன் வரும் பாட்கேஸ்டர் சிறுவன் படத்தின் காமெடி போர்ஷன்களுக்கு பக்கா பொருத்தம்.

படத்தின் மற்றொரு ஸ்பெஷல் லொகேஷன்.  சின்ன நகரம், வயல்வெளி, மேலும் அதனுள் ஒளிந்துக் கிடக்கும் மர்மமான மலைகள் என இன்னொரு கேரக்டராக சுற்றுகிறது.

இரும்பு தின்னும் மான்ஸ்டர், கேட் கீப்பர், என விதவிதமான மான்ஸ்டர்கள் படத்தில் இருந்தாலும் இன்னமும் சேஸிங் காட்சிகள் அதிகப் படுத்தியிருக்கலாம். கிளைமாக்ஸில் திடீர் என்ட்ரீ கொடுக்கும் முன்னாள் கோஸ்ட் பஸ்டர் குழு அப்ளாஸ்.

 எரிக் ஸ்டீல்பெர்க் ஒளிப்பதிவுக்கு ராப் சைமன்சனின் இசை அபாரம்.

மொத்தத்தில் 80 -90களின் கிட்ஸ்களுக்கே உரிய கோஸ்ட்பஸ்டர் சீரிஸ் படத்தின் மற்றொரு பார்ட் இந்த கோஸ்ட்பஸ்டர்: ஆஃப்டர் லைஃப். முழுக்க குழந்தைகளை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் இப்படம் புது டெக்னாலஜியில் குடும்பத்துடன் பார்க்கலாம்.