Aug 14, 2022
விமர்சனம்

பிஃபோர் யூ டை - திரை விமர்சனம்

ஐ லீட் பட நிறுவனம் தயாரிப்பில் , சுவெந்து ராஜ் கோஷ் இயக்கத்தில் புனீத் ராஜ் ஷர்மா, காவ்யா கஷ்யப் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ‘ பிஃபோர் யூ டை’.  காவ்யா தந்தையுடன் டீ இலை விளையும் மலைப்பிரதேசத் துக்கு வருகிறார். அங்குள்ள டீ தொற்சாலையில் அவருக்கு வேலை. அதே தொழிற்சாலையில் ஆசிரியர் போல் விவரங்கள் எடுத்துரைத்து பயிற்சி அளிக்கும் இளம் வாலிபன் புனீத்துடன் நட்பு ஏற்படுகிறது. நட்பு காதலாகிறது. திடீரென்று ஒருநாள் காவ்யா உடல்நிலை பாதிக்கப்படுகிறது. மருத்துவமனை பரிசோதனையில் அவளுக்கு கேன்சர் இருப்பதாக தெரியவர. ஆறு மாதத்தில் இறந்து விடுவார் என்று டாக்டர்கள் கெடு விதிக்கின்றனர்.

உடைந்து சோர்வடைகிறாள். மான்போல் துள்ளித்திரிந்தவள் வேதனையின் விளிம்பிற்கு செல்கிறாள்.  அவளை சந்தோஷமாக வைத்துக் கொள்ள புனீத் நினைத்து போராடுகிறார். அந்தப் போராட்டத்தின் ஒரு கட்டமாக கிடைக்கிறது ’பிஃபோர் யூ டை’ என்ற புத்தகம். அந்த புத்தகம் காட்டும் வழிகளின் அடிப்படையில் இறப்பதற்கு முன் காண வேண்டிய 131 இடங்களை பட்டியலிட்டு காவ்யாவை கூட்டிச் செல்கிறார் புனீத். அத்தனை இடங்களையும் காண முடிந்ததா? முடிவு என்ன என்பது மீதிக் கதை.

படம் நெடுகவே ஒரு மென் சோக இழை ஓடினாலும், அதைக் கடந்த காதலுமாக ஒரு அழகிய நாவல் படித்த உணர்வைத் தந்து செல்கிறது. அதற்கேற்ப கதையின் நாயகியாக கைகொடுத்திருக்கிறார் காவ்யா. அடுத்து ஹீரோ புனீத் பார்த்துப் பார்த்துக் காதலித்தக் காதலி மரண விளிம்பில் இருக்கையில் ஒரு காதலனின் மனநிலை எப்படி இருக்கும். அதை வெளியேயும் காட்டாமல் காதலிக்காக ஓடும் காதலனாக ப்ச். நமக்கு இப்படி ஒரு ஆளு இல்லையே எனப் பார்க்கும் பெண்களே பொறாமை படும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஒரு சென்டிமென்ட் கதையுடன் பெங்கால் பகுதி முழுக்க உள்ள அழகியலை கொத்துகொத்தாக கேமரா கொள்ளையடித்திருக்கிறது. அரபிந்த நாராயணன் ஒளிப்பதிவு படத்துக்கு இன்னொரு ஸ்பெஷல். கொஞ்சம் பொறுமையாகப் பார்க்க வேண்டிய படம். மென்மையாக கதை சொல்லி, மென்சோகம் இழையோட படம் நம்மை உள்கடத்தும். மொத்தத்தில் ’பிஃபோர் யூ டை’ ஒரு நல்ல கதையப் படித்த அழகிய நினைவுகளைத் தந்து செல்லும்.