Dec 09, 2022
விமர்சனம்

பீஸ்ட் விமர்சனம்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே , செல்வராகவன், யோகி பாபு, விடிவி கணேஷன், ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் மாஸ் படம் ‘பீஸ்ட்’.  ஒரு கசப்பான சம்பவத்தால் இராணுவத்தை விட்டு வெளியேறிய ரா ஆபிசர் வீரா (எ) வீரராகவன்(விஜய்), தான் புதிதாக சேரும் இன்னொரு வேலை நிமித்தமாக ஒரு மாலுக்குள் செல்கிறார். அந்த மால் நகரத்தின் நடுவில் இருக்கும் ஒரு பெரிய மால், அதை ஹைஜாக் செய்கிறார்கள் தீவிரவாதிகள். 250க்கும் மேலான பணையக் கைதிகள் என நகரமே ஸ்தம்பிக்கிறது.

தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும் கோரிக்கைகளை சேகரித்து அரசுக்கு தெரிவிக்கும் கண்ட்ரோல் ரூம் பொறுப்பாளர் மற்றும் சிறப்பு அதிகாரியாக அல்தாஃப் (செல்வராகவன்). இந்த ஹைஜாக் திக் திக் நிமிடங்களில் வீரா என்ன செய்கிறார், தீவிரவாதிகளின் சதித் திட்டத்தை முறியடித்து பணயக் கைதிகளை காப்பாற்றினாரா என்பது நெல்சன் ஸ்டைல் கிளைமாக்ஸ். கொடுத்தக் காசுக்கு இவர் லுக் ஒண்ணே போதும் என்பதற்கு இலக்கியமாகவே திகழ்கிறார் விஜய் .

 ஸ்டைல் லுக், ஹேண்ட்சம் , ஃபிட் என நிச்சயம் அவர் வயதில் இருப்போரை மட்டுமல்ல 20+ வயதினரையும் சேர்த்து புகைச்சலில் ஆழ்த்துகிறார். ஒரு ஹீரோ ஹீரோவாக இருப்பது எப்படி என்னும் வகுப்பே விஜய் எடுக்கலாம். ஆக்ஷன் காட்சிகளில் சீறிப்பாய்ந்து, காதல் காட்சிகளில் கண்சிமிட்டி, நடனத்தில் இதயத் துடிப்பை எகிற வைப்பதில் விஜய்க்கு நிகர் விஜய்தான். பூஜா ஹெக்டே ‘பீஸ்ட்’ நாயகனுக்கேத்த பீட்ஸாவாக நிற்கிறார். டான்ஸ் , லவ் என்று மட்டுமில்லாமல், நாயகனுடன் சேர்ந்து மாலில் மாட்டிக்கொண்டு அவருக்கு உதவுவது, ஆங்காங்கே சில சின்னச்சின்ன சம்பவங்களில் காமெடி, கலாட்டா, என கதைக்குள்ளும் பயன்பட்டிருக்கிறார். விடிவி, சதீஷ், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட காம்போ வழக்கம் போல் நெல்சனின் கூட்டணியாக நின்று படத்தின் கலகல மொமெண்ட்களுக்கு சிறப்பு சேர்த்துள்ளனர்.

படத்தின் இன்னொரு ஸ்பெஷல் செல்வராகவன். எதையுமே கூலாக செய்யும் ஆபிசர், தீவிரவாதி, அரசியல்வாதி, வீரராகவன் என மூவருக்கும் இடையில் பந்தாடப்படும் போதும் அசால்ட்டாக ‘சார்’ ஜல்லிக்கட்டு காளைய அவித்துவிடத்தான் முடியும். காலப்பிடிச்சு நிறுத்த முடியாது. அதுவா டயர்ட் ஆகி நின்னாதான் உண்டு’ என போகிற போக்கில் பஞ்ச் சொல்வதாகட்டும், ‘எனக்கென்னம்மோ இந்தாளு மேலதான் டவுட்டா இருக்கு’ எனக் காதை கடிப்பதாகட்டும் செல்வா கதையின் போக்கிற்கு உதவும் ஹல்வா.

’பீஸ்ட்’ என்னும் மாஸ் கதைக்கு மேலும் மாஸ் சேர்த்திருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத். பாடல்கள் ஏற்கனவே வைரல் ரகம் எனில் பின்னணி இசை மாஸ் ரகம். அதிரடி காட்சிகளிலும் இன்னொரு கேரக்டராக நின்று விளையாடுகிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு ஆக்ஷன் காட்சிகளில் சரவெடி.
படத்தின் சீரியஸ் மோடைக் கெடுக்காமல் இரண்டு பாடல்களையும் சேர்த்த விதம் சபாஷ்.

என் படம் கமர்சியல் பொழுதுபோக்கு படம் என்னும் தெளிவுடன் படத்தை முடித்திருக்கிறார் நெல்சன். இன்னும் சில இடங்களில் லாஜிக்குகளை கவனமாக கையாண்டிருக்கலாம். எனினும் படத்தின் பிரம்மாண்ட காட்சிகளுக்கு இடையே அவைகள் காணாமல் போகின்றன. மொத்தத்தில் நீண்ட விடுமுறை , கொண்டாட்டம் எனத் தயாராகும் மக்களுக்கு ‘பீஸ்ட்’ ஒரு நல்ல ஹாலிடே டிரீட் .