Jan 30, 2023
விமர்சனம்

விக்ரம் - திரை விமர்சனம்

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் ரெட் ஜயென்ட்  மூவீஸ் வெளியீட்டில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் , நரேன், அர்ஜுன் தாஸ் , காயத்ரி, உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் விக்ரம். படத்திற்கு இசை அனிருத்.

காணாமல் போகும் போதைப் பொருளின் மூலப்பொருள். கிடைத்தால் அடுத்த தலைமுறையே போதை பொருளுக்கு அடிமையாகி விடும் என்பதால் அதை பிடித்த மாத்திரத்தில் யாருக்கும் கிடைக்காதவாறு மறைத்து வைக்கிறார் ரகசிய ஏஜெண்ட் பிரபஞ்சன் (காளிதாஸ் ஜெயராம்). போதைப் பொருள் தயாரிக்கும் சந்தனத்தின் (விஜய் சேதுபதி) சரக்கு அது. சரக்கு கிடைக்காத ஆத்திரத்தில் பிரபஞ்சனைக் கொல்கிறார் சந்தனம். அந்தக் கொலையை தொடர்ந்து கர்ணன் (கமல்ஹாசன்) கொலை செய்யப்படுகிறார். ஏன் எதற்கு என ஆராய வருகிறார் அமர் (பகத் பாசில்). இத்தனையும் எதற்கு ? அப்படி அந்த சரக்கின் மதிப்பு என்ன? விக்ரமுக்கு இதில் என்ன வேலை? என இப்படி ஒவ்வொரு முடிச்சுகளாக அவிழ ஆக்‌ஷன் அதிரடியில் விரிகிறது கிளைமாக்ஸ்.

கமல்ஹாசன்... மனிதர் ஆடுகிறார், பாடுகிறார், ஆக்‌ஷன் காட்சிகளில் நம்மையே அசத்தும் அளவிற்கு அதிரடியாக சண்டையிடுகிறார். எத்தனை ஹீரோக்கள் என்னை சுற்றி இருந்தாலும் நான் தான் ஒன் மேன் ஆர்மி என்னும் அளவிற்கு படம் முழுக்க அப்படி ஒரு கமலிசம்.

விஜய் சேதுபதி வழக்கமான வில்லனாக இல்லாமல் சற்று  தனித்துவமான நடிப்பையும், உடல் மொழியையும் வெளிப்படுத்தியிருக்கிறார். நீ இவ்வளவு நடிப்பியா நான் மட்டும் என்ன சும்மாவா எனக் கண்களிலேயே ஆச்சரியங்களும் கேள்விகளுமாக வலையவரும் ஃபகத் பாசில் அலட்டாமல் தன் பங்குக்கு ஸ்கோர் செய்கிறார். இவர்கள் இப்படி என்றால் கெஸ்ட் ரோலில் வரும் சூர்யாவுக்கு மிகச் சில நிமிடங்களே என்றாலும் நடிப்பில் வேறு ரகம். இவர்கள் முக்கிய கேரக்டர்கள் எனில் நரேன், அர்ஜுன் தாஸ், காயத்ரி, காளிதாஸ் ஜெயராம், குறிப்பாக ஏஜென்ட் ஆக வரும் டீனா கேரக்டர் , குட்டி விக்ரம் என ஒவ்வொருவரும் அவர்கள் பங்குக்கு நம் மனதில் தனி இடம் பிடிக்கிறார்கள்.

கமல் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் திரை தீ பிடிக்கிறது, நடிப்பு பேய் ஆகவே மாறி ரசிகர்களை ஆச்சர்யத்தில் பேயாட்டம் ஆட வைத்திருக்கிறார்.

'இந்த மாதிரி நேரத்துல தான் ஒன்னு சொல்லுவாங்க ... பாத்துக்கலாம்' என கமல் சொல்லும் காட்சியில் அரங்கம் அதிர்கிறது.

லோகேஷ் கனகராஜ் கிட்டத்தட்ட ஹாலிவுட்டின் மார்வெல், டிசி காமிக்ஸ் போன்ற படங்களின் உள் இணைப்பு வரிசையில் வரும் படங்கள் போல இந்த விக்ரம் படத்தை கொடுத்து உண்மையில் இதுதான் பான் இந்தியா திரைப்படம் என்னும் அளவிற்கு உலகத்தரம் காட்டியிருக்கிறார். தமிழ் சினிமாவின் தரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டுச்சென்று இருக்கிறார் என்றுதான் சொல்லவேண்டும்.

அனிருத்... ஒரு படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனில் மாஸ் காட்ட வேண்டுமென ஒரு தயாரிப்பாளர் நினைத்துவிட்டால் யோசிக்காமல் இனி அனிருத்தை ஆரம்பத்திலேயே ஒப்பந்தம் செய்து விடலாம் போல. அந்த அளவிற்கு இந்த வருடம் வெளியான நான்கு படங்களுமே அனிருத் இசையில் பிளாக்பஸ்டர். தமிழ் சினிமாவின் மியூசிக் லக்கி சார்மாக மாறிக் கொண்டிருக்கிறார் அனிருத்.

படத்திற்கு இன்னொரு பலம் ஆக்ஷன். அன்பறிவு இயக்கிய சண்டை காட்சிகள் படத்தின் பரபரப்பிற்கு நிறையவே கை கொடுத்திருக்கின்றன.

அது ஒரு மாய இருட்டு உலகம் என லோகேஷ் சொல்லும் கதைக்கு மிகச்சரியான விஷுவல் கொடுத்திருக்கிறார் கிரிஷ் கங்காதரன். ஃபிலோமின் ராஜ் எடிட்டிங்கில் படம் நீளம் என்றாலும் அந்த நீளம் தெரியாத அளவிற்கு எடிட் செய்திருப்பது அவரது திறமையைக் காட்டுகிறது.

மொத்தத்தில் 1981 இல் வந்த 'விக்ரம்' எப்படி தமிழ் சினிமாவிற்கு புத்தம் புதிதாக மேலும் டிரெண்ட் செட்டராக இருந்ததோ அதே பாணியில் இந்த 'விக்ரம்' படமும் பான் இந்தியா என சொல்லிக் கொள்ளாமலேயே இதுதான் உண்மையில் பான் இந்தியா படம் என்னும் அளவிற்கு தரத்திலும் மேக்கிங்கிலும் உயர்ந்து நிற்கிறது.