Feb 05, 2023
விமர்சனம்

பொன்னியின் செல்வன்--1 விமர்சனம்

கல்கி எழுதிய ‘பொன்னியின் செல்வன்’ நாவல் மிகப் பிரபலமான ஒரு வரலாற்றுப் புதினம். தஞ்சையை தலைநகராகக் கொண்டு சோழர்கள் ஆண்ட காலத்தில், ராஜராஜ சோழன் என்கிற அருள்மொழி வர்மன் அரியணை ஏறியபோது நடந்த பல்வேறு அரசியல் நிகழ்வுகளுடன், கற்பனை அதிகம் கலந்து எழுதப்பட்ட நாவல் இது. பல்லாண்டுகளாக மேடை நாடகமாக நடத்தப்பட்டு வந்த இக்கதையை பலரும் திரைப்படமாக்க முயற்சித்தனர். தற்போது அந்த விஷயம் இயக்குனர் மணிரத்னம் மூலம் நிறைவேறியுள்ளது.

தஞ்சை மன்னர் சுந்தர சோழரின் (பிரகாஷ்ராஜ்) மூத்த மகன் ஆதித்த கரிகாலனும் (விக்ரம்), இளைய மகன் அருள்மொழி வர்மனும் (ஜெயம் ரவி) நாடு பிடிக்க போருக்குச் சென்றிருக்கும் காலத்தில், சோழ மன்னருக்கு கீழிருந்த சிற்றரசர்கள், பழுவூர் மன்னர் பெரிய பழுவேட்டரையர் (சரத்குமார்) தலைமையில் ஆட்சியைக் கைப்பற்றி, அதை சுந்தர சோழரின் அண்ணன் மகன் மதுராந்தகனிடம் (ரஹ்மான்) ஒப்படைக்க திட்டமிடுகின்றனர். இந்த அரசியல் சதிக்குப் பின்புலமாக இருந்து செயல்படுகிறார், பெரிய பழுவேட்டரையரின் இளம் மனைவி நந்தினி (ஐஸ்வர்யா ராய்). இந்த சூழ்ச்சியை அறிந்த சோழநாட்டு இளவரசி குந்தவையும் (திரிஷா), தளபதி வந்தியத்தேவனும் (கார்த்தி) அதைத் தடுக்க திட்டமிடுகின்றனர். இந்த ஆடு, புலி ஆட்டத்தின் தொடக்கமே ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகத்தின் கதை.

‘பாகுபலி’ போன்ற முழு கற்பனைக் கதையிலேயே பிரமாண்டத்தைக் கொண்டு வந்த சினிமாவில், இதில் வரலாற்று உண்மையும் கலந்திருப்பதால், அதிக கவனத்துடன் பிரமாண்டத்தை போல் ஒரு மேஜிக்கை கொண்டு வந்துள்ளார் மணிரத்னம். கொரோனா காலப் பிரச்னைகளின் காரணமாக படத்தின் பணியில் ஏற்பட்ட தொய்வுகள் ஆங்காங்கே தொழில்நுட்பத்தில் தெரிந்தாலும், இவ்வளவு பெரிய சரித்திரக்கதையை 3 மணி நேரத்துக்கும் குறைவான நேரத்தில் காட்டியிருப்பதற்கு பாராட்டுகள். கடல் யுத்தம், தரை யுத்தம், பிரமாண்டமான அரண்மனைகள், அந்தப்புரங்கள் என்று, கலை இயக்குனர் தோட்டா தரணி உருவாக்கியதை தனது ஒளிப்பதிவால் கூடுதல் வண்ணம் தீட்டி பதிவு செய்துள்ளார், ரவிவர்மன். இந்த பிரமாண்டத்தை தனது இசையாலும், பாடல்களாலும் கட்டி இழுத்துள்ளார், ஏ.ஆர்.ரஹ்மான். அதே சமயம் பின்னணி இசை பல இடங்களில் கதையுடன் ஒட்டாமல் இருக்கிறது. ரஹ்மானுக்கு பின்னணி இசையில் சறுக்கல் என்பது இந்த படத்திலும் தெளிவாகிறது. பாடல்கள் கேட்கும் ரகம். தமிழ் வரிகளை தெளிவாக கொடுத்ததில் கவிஞர் இளங்கோ கிருஷ்ணனின் உழைப்பு நன்கு கைகொடுத்துள்ளது.

காதல் மற்றும் துரோகத்தை யுத்தத்தில் தெறிக்கும் ரத்தத்தால் மறக்கத்துடிக்கும் ஆதித்த கரிகாலனாக விக்ரம் வாழ்ந்திருக்கிறார். யுத்தக்களத்தில் வெறிகொண்ட வேங்கை போல் சீறுவதும், காதல் களத்தில் தோற்றுத் துவளுவதுமாக வெவ்வேறு முகத்தை அவர் காட்டியுள்ளார். தனது அழகையே ஆயுதமாக்கி, மிகப்பெரிய சாம்ராஜ்யத்தையே நடுங்க வைக்கும் நந்தினி கேரக்டரில் ஐஸ்வர்யா ராய் பிரமாதப்படுத்தி இருக்கிறார். வந்தியத்தேவனாக வரும் கார்த்தி தன் குறும்புகளாலேயே கவர்ந்துவிடுகிறார். நிஜத்தில் அருள்மொழி வர்மன் இவ்வளவு அழகுடன் இருந்திருப்பாரா என்று தெரியாது. அழகு மன்னனாக வலம் வருகிறார், ஜெயம் ரவி. அழகும், அரசியல் முதிர்ச்சியும் கொண்ட குந்தவை கேரக்டரை சமாளித்துச் சுமந்துள்ளார் திரிஷா. மனைவி சொல்லைத்தட்ட முடியாமலும், ராஜ விசுவாசத்துக்கு துரோகம் செய்ய முடியாமலும் தவிக்கும் பழுவேட்டரையர் கேரக்டருக்கு கச்சிதமாகப் பொருந்தியுள்ளார் சரத்குமார்.

ஆழ்வார்க்கடியானாக வரும் ஜெயராம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கிறார். படகோட்டிப் பெண் பூங்குழலியாக வந்து மனதில் பதிகிறார், ஐஸ்வர்யா லட்சுமி. மற்றும் பிரபு, பார்த்திபன், விக்ரம் பிரபு, ஆடுகளம் கிஷோர் போன்றோர் தங்களது கேரக்டருக்கு ஏற்ப நடித்துள்ளனர். முற்பகுதியில் கார்த்தியின் குறும்புகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, கதையைவிட்டு சற்று விலகியுள்ளது படம். கப்பலில் நடக்கும் சண்டைக்காட்சிகள் பிரமிப்பு ஏற்படுத்தினாலும், அதன் தொழில்நுட்பக் குறைபாடுகள் பளிச்சென்று தெரிகிறது. சில காட்சிகள் நாடகத்தன்மையை ஏற்படுத்துகின்றன. குளோசப்பிலேயே பல காட்சிகளைக் கடத்திச் சென்றுள்ளது படம். சில குறைகள் தென்பட்டாலும், தமிழ் ரசிகர்களுக்கு ஒரு சரித்திர விஷுவல் அனுபவம் இந்த ‘பொன்னியின் செல்வன்’.