Feb 05, 2023
விமர்சனம்

மேட் கம்பெனி (தமிழ்) விமர்சனம்

இயக்குனர் பாலாஜி மோகன் தயாரிப்பில் பிரசன்னா, கனிகா, எஸ்.பி.பி.சரண், தான்யா பாலகிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள காமெடி கலந்த சென்டிமென்ட் வெப்தொடரான இதை விக்னேஷ் விஜய்குமார் இயக்கியுள்ளார். ஆன்லைன் மூலம் மணப்பெண், மணமகன் தேடுவது மாதிரி, இத்தொடரில் அம்மா, அப்பா, மகன், மகள், அண்ணன், அக்கா, பக்கத்து வீட்டுக்காரர் ஆகியோரைத் தேடிக்கொடுக்கும் ஆன்லைன் ஆப்தான் ‘மேட் கம்பெனி’. மணப்பெண், மணமகள் நிரந்தரமாகத் தங்கிவிடுவார்கள். இவர்களோ, கேட்பவர்கள் விரும்பும் காலம்வரை இருப்பார்கள். இப்படி ஒரு ஆப்பை நடத்துபவர், சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர் ஏகே (பிரசன்னா).

8 எபிசோடுகளைக் கொண்ட இதில், மனிதர்களுக்குள் ஒளிந்திருக்கும் உணர்வுகளைப் பேச வைக்க முயற்சித்துள்ளனர். லாஜிக் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு எபிசோடும் ஏதோ ஒருவகையில் நெகிழவைக்கிறது. பிரச்னைகளைத் தீர்ப்பதிலேயே எபிசோடுகள் கடந்தால் டி.வி சீரியல் போலிருக்கும் என்பதால், பிரசன்னாவுக்கு வில்லனாக வருகிறார் எஸ்.பி.பி.சரண். பிரசன்னாவால் பாதிக்கப்பட்ட மீடியா நபரான அவர், தகுந்த நேரத்தில் பிரசன்னாவைப் பழிவாங்கக் காத்திருக்கிறார். தவிர பிரசன்னா, கனிகா இடையே ஒரு எமோஷன் ஏரியாவும் இருக்கிறது. மொத்தத்தில் மேடை நாடக பாணியிலான காட்சி அமைப்புகளுடன் மெதுவாக நகர்ந்தாலும், சுவாரஸ்யத்துக்கு குறைவில்லை என்று சொல்லலாம். மேட் கம்பெனி கான்செப்ட் சாத்தியம் இல்லை என்றாலும், ஒருவேளை இது சாத்தியப்பட்டால் நன்றாக இருக்குமோ என்று சிந்திக்க வைக்கிறது. ஆஹா தமிழ் தளத்தில் வெளியாகியுள்ளது.