Mar 22, 2023
விமர்சனம்

வாரிசு - திரை விமர்சனம்

சில வருடங்களுக்கு பிறகு விஜய் நடித்திருக்கும் பேமிலி எண்டர்டெயின்மெண்ட் படம். தமிழ், தெலுங்கில் தயாராகி உள்ள இருமொழிப் படம். பெரும் கோடீஸ்வர தொழிலதிபர் சரத்குமாரின் மூத்த மகன் காந்த் (தெலுங்கு நடிகர்), இரண்டாவது மகன் ஷாம், மூன்றாவது மகன் விஜய். சரத்குமார் சொன்னதுதான் சட்டம், அவர் எழுதுவதுதான் தீர்ப்பு அந்த குடும்பத்தில். அம்மா ஜெயசுதாவின் சுதந்திரம்கூட அடுப்பங்கரை வரைதான். சுதந்திரமாக சிந்திக்கவும், வாழவும் விரும்பும் விஜய் இது பிடிக்காமல் வீட்டில் இருந்து அப்பாவை எதிர்த்துவிட்டு வெளியேறி தேசாந்திரியாக சுற்றுகிறார். எல்லா உணவும், எல்லா இடத்திலும் கிடைப்பதற்கு வழி செய்யும் ஒரு ஆப்பை வடிவமைக்கிறார். அது பல கோடிகளை குவிக்கும் தொழிலாகிறது. இந்த நிலையில் சரத்குமார் குடும்பத்தில் பிரச்னை.

மூத்த அண்ணன் காந்துக்கு ஒரு சின்னவீடு இருக்கிறது. ஷாம் அப்பாவுக்கு தெரியாமல் தனியாக தொழில் செய்ய 400 கோடி ரூபாய் கடன் வாங்க அது வட்டியுடன் 550 கோடியாக உயர்ந்து நிற்கிறது. இந்த இரண்டு பிரச்னைகளையும் தொழில் எதிரியான பிரகாஷ்ராஜ், சரத்குமாரை வீழ்த்த பயன்படுத்திக் கொள்கிறார். இதற்கிடையில் சரத்குமாருக்கு அரிய வகை புற்று நோய் வந்து சில மாதங்களில் சாகப்போகிறார் என்று குடும்ப டாக்டர் பிரபு கண்டுபிடிக்கிறார். இவ்வளவு பிரச்னைகளுக்கு இடையில் அம்மாவின் வேண்டுகோளுக்காக வீட்டுக்கு திரும்பும் விஜய் தனது புத்தி கூர்மையாலும், அடிதடி அதகளத்தாலும் எப்படி தீர்த்து வைத்து சுபம் போடுகிறார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

மாஸ் எண்ட்ரி, ஓப்பனிங் சாங், அண்ணியின் தங்கை ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ், யோகி பாபுடன் காமெடி, வில்லன்களுக்கு பன்ச் டயலாக், அவ்வப்போது தத்துவம், இறுதியில் சென்டிமெண்ட் என்ற விஜய்யின் அதே பழைய பொங்கல்தான் படம். இந்தப் படத்தில் கூடுதலாக வடிவேலு ரேஞ்சுக்கு பாடி லாங்குவேஜுடன் காமெடி செய்திருப்பதுதான், இந்த பொங்கல் ஸ்பெஷல். எமோஷன் காட்சிகளில் மாஜி ஹீரோ கார்த்திக்கை நினைவுபடுத்துகிறார். சரத்குமார் குடும்பத்திற்கு தொழில் போட்டிகளால் பிரச்னை ஏற்படும், அதனை விஜய் தீர்த்து வைப்பார் என்று டைட்டில் கார்டு முடிந்ததுமே கணிக்க முடிகிறது. எப்படி தீர்த்து வைப்பார் என்பதையும் கவனிக்க முடிகிற அளவிற்கு பலவீனமான திரைக்கதை.

என்றாலும் விஜய் தனியொருவராக படத்தை தாங்கி பிடித்து இரண்டே முக்கால் மணி நேரம் சீட்டில் உட்கார வைக்கிறார். அவரது காதலியாக வரும் ராஷ்மிகா மந்தனா அவ்வப்போது வரும் காதல் ஊறுகாய். பல நேரங்களில் காணாமல் போகிறார். சகோதரர்களில் ஷாம் பக்குவமான நடிப்பை தந்திருக்கிறார். விஜயை தீர்க்கமாக எதிர்ப்பதும், அப்புறம் அன்புக்கு அடிபணிகிறவராகவும் கவனம் பெறுகிறார். சரத்குமார் முதலில் கெத்தாகவும், பின்னர் நோயால் பாதிக்கப்பட்டு சோர்வாகவும் இரண்டு ஏரியாவிலும் நிறைவாக செய்திருக்கிறார். ஜெயசுதா வழக்கம்போல பாசக்கார அம்மா.

பிரகாஷ்ராஜ் வழக்கம்போல முறைப்புராஜ், யோகி பாபு ரிலாக்ஸ் ஏரியாவை நிறைவு செய்கிறார். கம்பெனி இயக்குனர்களை தன் பக்கம் இழுக்க விஜய் சொல்லும் குட்டிக்கதைகள், பிரகாஷ்ராஜ் கம்பெனியை ஏமாற்ற மும்பையில் இருந்து எஸ்.ஜே.சூர்யாவை அழைத்து வருதல் என சீனுக்கு சீன் லாஜிக்கை தேட வேண்டியது இருந்தாலும் பரபரக்க வைக்கிறது படம். வம்சி பைடிபள்ளியின் இயக்கம், தமனின் இசை, கார்த்திக்பலனியின் ஒளிப்பதிவு, மிகப்பெரிய பட்ஜெட் என எல்லாமே பிரமாண்டமாக இருந்தாலும், எதுவுமே புதிதாக இல்லை.