Jul 02, 2022
உலகம்

திவாலுக்கு வரிசை கட்டி நிற்கும் நாடுகள்: இலங்கை... ஓர் ஆரம்பம்! முழுமையாக ஸ்தம்பிக்கும் உலக பொருளாதாரம்

இயற்கை அழகையெல்லாம் தன்னிடத்தே அடக்கிக் கொண்டு புன்னகை மக்களின் தேசமாக பூரிப்புடன் கொண்டாடப்பட்ட இலங்கை, இன்று தனது வளத்தையெல்லாம் இழந்து குட்டிச்சுவராகி கிடக்கிறது. இலங்கையின் இன்றைய நிலைக்கு யார் காரணம் என்ற கேள்விகளும், கோபக்கணைகளும் கோத்தபய குடும்பத்தை நோக்கி பாய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த கோப கொந்தளிப்பில் பிரதமர் மாறினாலும், அவல நிலை மாற வழியே இல்லை என்று கருதும் அளவுக்கு கையறு நிலைக்கு தள்ளப்பட்டு விட்டது இந்த குட்டித் தீவு. இல்லை என்ற கோஷமே எங்கும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. இதற்கான காரணம் குறித்த விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, இலங்கையை போன்ற திவால் நிலையை எட்டிப்பிடிக்க கூடிய தூரத்தை பல நாடுகள் நெருங்கி கொண்டிருக்கின்றன. அவற்றின் சரிவை நோக்கிய பயணம் சந்தடியில்லாமல் நடந்து கொண்டிருக்கிறது.  

இப்படித்தான் அமெரிக்காவின் பேஷன் ஆடைகள், பிரேக் டான்ஸ்களில் உலகம் லயித்துக் கொண்டிருந்த 1980களில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் வீழ்ச்சி சத்தமில்லாமல் நடந்து முடிந்து விட்டது. 1970களில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து உலகளாவிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட பிறகு பலிகடாவான முதல் லத்தீன் அமெரிக்க நாடு மெக்சிகோ. இந்த நெருக்கடிக்கு பிறகு 10 ஆண்டுகளிலேயே தனது வளங்களை பறிகொடுத்து விட்டு வறிய நிலைக்கு சென்று விட்டது.  உணவுப்பொருட்கள் விலை உயர்ந்ததால் உச்சம் தொட்ட பண வீக்கம், அடியோடு கரைந்த அந்நியச்செலாவணி கையிருப்பு, கழுத்தை நெரிக்கும் கடன் என, நாடே திவாலாகி விட்டது. இதைத்தொடர்ந்து, அந்த நாட்டை ஒட்டிய கொலம்பியா, ஈக்வடார், பெரு, பிரேசில், அர்ஜென்டினா, சிலி ஆகிய நாடுகளின் பொருளாதாரமும் ஆட்டம் கண்டது. மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகள் அனைத்துமே ஏறக்குறைய பொருளாதார நெருக்கடியால் படு பரிதாப நிலையை அடைந்து விட்டன.

மெக்சிகோ வீழ்ச்சிக்கு பிறகு ஏறக்குறைய 40 ஆண்டுகளை கடந்த நிலையில், அடுத்த அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்து விட்டது இலங்கை.  இதுபோல், உலகம் முழுவதும் உள்ள வளரும் நாடுகளின் பொருளாதாரம் அபாய கட்டத்தில் இருப்பதற்கான அபாய குறியீடும் இதுவே. உலகளாவிய பொருளாதார பாதிப்பு, கொரோனாவால் ஏற்பட்ட மந்த நிலையில் தான் ஆரம்பித்தது. பின்னர் உலகளாவிய கடன்களுக்கான வட்டி அதிகரிப்பு, உக்ரைன் - ரஷ்யா போர் ஆகியவை மூன்று பிரதான காரணங்களாக கூறப்படுகின்றன. ரஷ்யா-உக்ரைன் போர் மூள்வதற்கு 9 நாள் முன்பாக உலக வங்கி ஓர் அறிக்கை வெளியிட்டது. அதில் வளரும் நாடுகளின் கடன் பிரச்னை பூதாகரமாகப் போவதாக எச்சரித்தது.

வருமானம் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 70 நாடுகள் கடனை திருப்பி செலுத்த முடியாமல் திணறும் என்றும், அவற்றின் பொருளாதாரம் 2022ம் ஆண்டில் மிகப்பெரிய வீழ்ச்சியை காணும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறியது.  அடுத்த 9 நாளில் ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுக்க ஆரம்பித்து விட்டது. இதனால் உலகளாவிய விநியோக சங்கிலிக்கு பாதிப்பு ஏற்பட்டது. பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பை அடைந்தன. கச்சா எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. கடந்த மார்ச் மாதம் ஐநா வெளியிட்ட அறிக்கையில், உக்ரைன் போரால் 107 நாடுகள் கடும் பாதிப்பை சந்திக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்தது. அந்த நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கும், பெட்ரோல், டீசல் விலை உயரும், நிதி நிலை கடும் பாதிப்பை சந்திக்கும். இதனால் இந்த நாடுகளில் வசிக்கும் 170 கோடி மக்கள், அதாவது, உலக மக்கள் தொகையில் 5ல் ஒரு பங்கு பாதிக்கப்படுவார்கள் என கணிப்பு வெளியிட்டது.

இதுபோல், உக்ரைன் போருக்குப் பிறகு பண வீக்கம், நிதி நிலை வீழ்ச்சி, பெட்ரோல், டீசல் விலை உயர்வு என 3 பிரச்னைகளையும் எதிர்கொண்டுள்ள நாடுகளில், இலங்கையை அடுத்து திவாலாகும் நிலையில் இருப்பது எகிப்து. ஏற்கனவே தீவிரவாதத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இந்நாடு, பாதுகாப்பு அச்சுறுத்தல் மிக்க நாடாக உள்ளது. இதனால் உள்நாட்டு பொருளாதாரம் ஸ்தம்பித்துள்ள நிலையில், உக்ரைனிடமிருந்து கிடைக்கும் மானிய விலை கோதுமையைத்தான் எகிப்து மக்கள் நம்பி உள்ளனர். இப்போது உக்ரைன் போரால் அந்த கோதுமையும் கிடைக்காததால் எகிப்தில் உணவு பற்றாக்குறை கடுமையாக அதிகரித்துள்ளது. இந்தியா உதவிக்கரம் நீட்டினாலும், எகிப்தின் நிலைமை மிக மோசமாக உள்ளது.

இன்னும் ஓரிரு மாதத்திற்கான கோதுமை மட்டுமே கையிருப்பில் உள்ளதாக எகிப்து அரசு கூறியிருக்கிறது. கோதுமையே அந்நாட்டின் முக்கிய உணவாகும். மேலும், துனிசியா, லெபனான், துருக்கி நாடுகளும் ஜிடிபிக்கு இணையான வெளிநாட்டு கடனுடன் விழிபிதுங்கி நிற்கிறது. அர்ஜென்டினா, எல் சல்வடார், பெரு போன்ற நாடுகளும் கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கி இருக்கின்றன. துருக்கி உள்ளிட்ட நாடுகள் சர்வதேச நிதியத்திடம் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் மேலும் கடன் கேட்டு தவித்துக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற நாடுகளில் வேலைவாய்ப்பின்மை கடுமையாக அதிகரித்துள்ளது, பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. பொருளாதாரம் ஸ்திரமற்ற நிலையில் உள்ளது. மொத்தத்தில் அடுத்த இலங்கையாக மாறிக் கொண்டிருக்கின்றன.

லெபனான் நாடும் பொருளாதார இக்கட்டில் சிக்கியிருக்கிறது. கடந்த 2020ம்  ஆண்டு தலைநகர் பெய்ரூட்டில் மிகப்பெரிய வெடிவிபத்து நிகழ்ந்தது. அதில் 200 பேர் பலியாகினர். அந்த சம்பவத்தை தொடர்ந்து, நாட்டின் பொருளாதாரம்  வீழ்ச்சியை நோக்கி செல்கிறது. தற்போது உணவு விலை 11 மடங்கு அதிகரித்துள்ளது. லெபனீஸ் பவுண்ட் மதிப்பு 90 சதவீதம் சரிந்துவிட்டது. பொதுமக்களின் கடன் 360 சதவீதம் அதிகரித்துள்ளது. லெபனான் நாடும் கோதுமை, சூரிய காந்தி எண்ணெயை உக்ரைனில் இருந்து இறக்குமதி செய்கிறது. தற்போது இவற்றின் விநியோகம் தடைபட்டுள்ளதால், உணவு பாதுகாப்புக்காக சர்வதேச நிதியத்திடம் கையேந்தி நிற்கிறது.

இலங்கையை தொடர்ந்து திவாலாகும் அபாயத்தில் உள்ள நாடுகள் வரிசையில், முதலிடத்தில் உள்ளது எகிப்து. அதற்கு அடுத்த இடங்களில், துனிசியா, லெபனான், அர்ஜென்டினா, எல் சல்வடார், பெரு நாடுகள் உள்ளன என கணிப்புகள் தெரிவிக்கின்றன. இதுபோல் துனிசியாவின் வர்த்தக பற்றாக்குறை ரூ.6000 கோடியாக உள்ளது. பணவீக்கம் 8.7 சதவீதமாக உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. அதேநேரத்தில், உக்ரைன் போர் காரணமாக மிகுந்த பாதிப்புக்கு ஆளாகக்கூடிய நாடுகள் பட்டியலில் வெளியேறும் முதலீடு, நிகர எரிபொருள் ஏற்றுமதி, உணவு தானிய ஏற்றுமதி, ஜிடிபியில் இவற்றின் பங்கு, இங்கிருந்து ரஷ்யாவுக்கான வர்த்தகம் மற்றும் முதலீடுகள் ஆகியவற்றை அந்நாட்டின் ஜிடிபி  பங்களிப்புக்கு ஏற்ப மதிப்பீடு செய்து மற்றொரு பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் துருக்கி, எகிப்து, வியட்நாம், பிலிப்பைன்ஸ், போலந்து, தென்கொரியா, தாய்லாந்து, சிலி, சீனா, பெரு, மலேசியா, இந்தியா (12 வது இடம்) உள்ளன. இதற்கு அடுத்து தென்னாப்ரிக்கா, மெக்சிகோ, கொலம்பியா, பிரேசில், அர்ஜென்டினா, இந்தோனேஷியா, சவுதி அரேபியா நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, இனிவரும் காலங்களில் இலங்கையைப்  போல் இன்னும் ஏராளமான நாடுகள் திவால் பட்டியலில் இணையலாம் என எச்சரித்துள்ள பொருளாதார நிபுணர்கள், பொருளாதார நெருக்கடி என்பது பொருளாதாரத்தை மட்டுமல்ல, அந்நாட்டின் பாதுகாப்பையும் கேள்விக்குறியாகக் கூடிய தீவிரமான பிரச்னை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும் என்பதை சுட்டிக் காட்டுகின்றனர். நிர்வாக சீர்கேடு, திட்டமிடல் இன்மை மட்டுமின்றி, விவசாயத்தில் கவனம் செலுத்தாததும் கூட பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கக்கூடியது. அத்தியாவசிய தேவைகளில் முதலிடம் வகிக்கும் உணவு பற்றாக்குறை இன்றி தன்னிறைவு பெற வேண்டும். இதுபோல், எரிபொருள் இறக்குமதியை பெருமளவு சார்ந்திருக்கும் நாடுகளுக்கு உக்ரைன் போர் ஒரு மோசமான சூழ்நிலையைத்தான் உருவாக்கியுள்ளது.

மக்களின் தேவையை கூட பூர்த்தி செய்ய முடியாமலும், பாதுகாப்புகளை பலப்படுத்தாமலும் பெரும்பாலான நாடுகள் திண்டாடுகின்றன. அதிலும், ஏற்றுமதியில் கிடைக்கும் லாபத்தில் பெரும்பகுதியை அல்லது முழுவதுமாகக்கூட பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக வல்லரசு நாடுகளிடம் இழக்க வேண்டிய பரிதாப நிலையிலும் பல நாடுகள் இருக்கின்றன. எதிலும் தன்னிறைவு, தற்சார்பு இல்லாமல் வெளிநாடுகளை எதிர்பார்ப்பதும், நாட்டின் வளம் மொத்தத்தையும் வாரிக்கொடுக்கும் நிலைக்கு தள்ளிவிடுகிறது. இலங்கையை முன்னுதாரணமாக கொண்டு, அதுபோன்ற தவறான முடிவுகளை தவிர்த்து மறு பரிசீலனைக்கும், சுய பரிசோதனைக்கும் வளரும் நாடுகள் தயாராக வேண்டிய தருணம் இது. இல்லாவிட்டால், இலங்கையின் நிலை அவற்றுக்கும் ஏற்படும் நாள் வெகுதொலைவில் இல்லை என்பதை யாரும் மறுப்பதற்கில்லை.

* இந்தியாவின் நிலை
இந்தியாவின் நிலைமையும் மதில் மேல் பூனையாகவே உள்ளது. குறிப்பாக, கடந்த ஓராண்டில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்து வருகிறது. கடந்த 9 வாரங்களில் சுமார் ரூ.4 லட்சம் கோடி அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில் ரூ.48 லட்சம் கோடியாக இருந்த அந்நிய செலாவணி கையிருப்பு தற்போது ரூ.44 லட்சத்திற்கு சரிந்துள்ளது. இது மாதாமாதம் தொடர்ச்சியாக சரிவதே கவலை தரும் விஷயமாக உள்ளது. இந்தியாவில் சில மாநிலங்களின் கடன் சுமை அதிகரித்து வருகிறது. அதிகபட்சமாக பஞ்சாப் அதன் ஜிடிபியில் 52 சதவீத கடன் வாங்கி உள்ளது. பீகார் 38.66 சதவீதமும், மேற்கு வங்கம் 39 சதவீதமும், ஆந்திரா 38 சதவீதமும் கடன் வைத்துள்ளன.

கடனை திருப்பி செலுத்தாவிட்டால் என்னவாகும்?
* வெளிநாடுகளிடமும், சர்வதேச நிதி அமைப்புகளிடமும் ஒரு நாடு கடன் வாங்கி அவற்றை திருப்பிச் செலுத்தாதபோது, அதன் ‘கடன் தர மதிப்பீடு’ குறையும்.
* இதனால் புதிய கடன்கள் வாங்குவது பாதிக்கப்படும் அல்லது கூடுதல் வட்டி செலுத்த நேரிடலாம்.
* நாட்டுக்குள் முதலீடு வருவது பாதிக்கப்படும். ஏற்கனவே இருக்கும் முதலீட்டாளர்கள் வெளியேறவும் வாய்ப்பு உண்டு.
* இதன் காரணமாக வங்கித்துறை திவால் அடையும்.

* இந்தியாவுக்கு பாதிப்பு வருமா?
இந்தியாவின் பண வீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த ஏப்ரலில் மொத்த விலை பண வீக்கம் 15.05 சதவீதமாகவும், சில்லரை விலை பண வீக்கம் 7.8 சதவீதமாகவும் உள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, அமெரிக்காவில் பண வீக்கம் 2 சதவீதத்துக்குள் இருக்க வேண்டும் என  நிர்ணயித்துள்ளது. ஆனால் அங்கு 8.5 சவீதமாக உள்ளது. கடந்த ஓராண்டாகவே, உணவுப்பொருள், சேவைகள், உற்பத்தி பொருட்கள் விலை உயர்ந்துள்ளது. அதேநேரத்தில் இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு பார்க்கும்போது, இலங்கையை போன்று இந்தியாவுக்கு திவால் ஆகும் நிலை ஏற்படாது எனவும், ஆனால், பிரச்னைகளை நிச்சயம் சந்திக்கும் எனவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

திவாலாக முக்கிய காரணங்கள்
* பணவீக்கம் அதிகரிப்பு
* வேலைவாய்ப்பின்மை
* பொருளாதார மந்தநிலை
* கடன் அதிகரிப்பு

* பாகிஸ்தான், நேபாளம் நிலை என்னவாகும்?
அண்டை நாடான பாகிஸ்தானும் திவால் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஸ்திரத் தன்மை இல்லாததால், நிலைமை மேலும் மோசமாகலாம் என பொருளாதார நிபுணர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். இதன் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்து, பண வீக்கம் அதிகரித்துள்ளது. கரன்சி மதிப்பு நடப்பு நிதியாண்டில் 21.72 சதவீதத்துக்கு மேல் சரிந்து விட்டது. ஐஎம்எப்ல் இருந்து நிதி வருவது தாமதம் ஆவதால், பெரும் தத்தளிப்பு நிலையை நோக்கி பாகிஸ்தான் நகர்ந்து கொண்டிருக்கிறது. பங்கு முதலீட்டாளர்கள் முழுமையாக நம்பிக்கை இழந்து விட்டனர். இதுபோல் நேபாள நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 16 சதவீதத்துக்கு மேல் சரிந்து விட்டது. கார், அழகுசாதன பொருட்கள், தங்கம் உட்பட அத்தியாவசியம் அல்லாத பொருட்களுக்கான இறக்குமதிக்கும் தடை விதிக்கப்பட்டு விட்டது. ஆசிய மேம்பாட்டு வங்கியின் புள்ளி விவரப்படி, இந்த நாட்டின் கடன் ஜிடிபியில் 41.4 சதவீதமாக உள்ளது. பண வீக்கம் 67 மாதங்களில் இல்லாத அளவுக்கு 7.14 சதவீதத்தை எட்டியுள்ளது. இதனால், இந்த இரண்டு நாடுகளுமே திவாலாகும் நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றே கூறலாம்.

* திவால் அபாயத்தில் உள்ள நாடுகள்
* எகிப்து
எகிப்தின் மொத்த கடன் சுமை கடந்த நிதியாண்டின்படி ரூ.30,18,400 கோடி. கடன் சுமை ஜிடிபியில் 88 சதவீதமாக உள்ளது. முன்பு 84 சதவீதமாக இருந்தது. உணவுப்பொருள் பண வீக்கம் 26%

* துனிசியா
சமீபத்திய புள்ளி விவரத்தின்படி துனிசியாவின் மொத்த கடன் ரூ.2,64,264 கோடியாக உள்ளது. நாட்டின் ஜிடிபியில் 80%. இது இதற்கு முன்பு 87.6 சதவீதமாக இருந்தது. உணவுப்பொருள் பண வீக்கம் 8.7%

* எல் சல்வடார்
எல் சல்வடாரின் கடன் சுமை ரூ.1,69,169 கோடியாக உள்ளது. இது ஜிடிபியில் 90.17 சதவீதம், இதற்கு முன்பு கடன் ஜிடிபியில் 73.3 சதவீதமாக இருந்தது. உணவுப்பொருள் பண வீக்கம் 6.55%

* பெரு
பெரு நாட்டின் கடன் சுமை ரூ.4,75,629 கோடியாக உள்ளது. இது ஜிடிபியில் 35.4%. இது முன்பு 27.10 சதவீதமாக இருந்தது.

* லெபனான்
லெபனானின் மொத்த கடன் ரூ.7,35,273 கோடியாக உள்ளது. இது ஜிடிபியில் 171.7%. இது இதற்கு முன்பு 174.5 சதவீதமாக இருந்தது. உணவுப்பொருள் பண வீக்கம் 390.39%

* 69 நாடுகள் இலங்கையை போல் திவாலாகும் நிலையில் உள்ளன.
* 25 நாடுகள் ஆசிய-பசிபிக் கண்டத்தில் உள்ளவை
* 25 நாடுகள் ஆப்ரிக்காவை சேர்ந்தவை
* 19 நாடுகள் லத்தீன் அமெரிக்காவில் உள்ளன

கடனை கட்ட திணறும் நாடுகள்
* துருக்கி
* கானா
* எத்தியோப்பியா
* கென்யா
* தென் ஆப்ரிக்கா

* அபாய ஆண்டான 2022
உலக அளவிலான உணவுப்பொருள் பண வீக்கம்    ஒரு பேரல் கச்சா எண்ணெய் மாத சராசரி (டாலரில்)    
கச்சா எண்ணெய் அதிகபட்ச விலை
ஜனவரி    23.1%    91.21    91.70
பிப்ரவரி    19.4%    100.99    105.79
மார்ச்    21.3%    107.91    139.13
ஏப்ரல்    33.6%    109.34    114.83

* உக்ரைன் போரால் அபாயத்தை சந்திக்கும் நாடுகள் டாப்-10
1 துருக்கி         
2 எகிப்து
3 வியட்நாம்
4 பிலிப்பைன்ஸ்
5 போலந்து
6 தென்கொரியா
7 தாய்லாந்து
8 சிலி
9 சீனா
10 பெரு
11 மலேசியா
12 இந்தியா
ஐநா, உலக வங்கி, ஐஎம்எப் உள்ளிட்டவை வெளியிட்ட புள்ளி விவரங்கள் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

* ரஷ்யாவுடனான வர்த்தகம் மற்றும் முதலீடு (ஜிடிபியில் சதவீதம்) டாப் 5
போலந்து
3.45%
துருக்கி
2.68 %
வியட்நாம்
1.33%
எகிப்து
1.12%
தென்கொரியா
1.11%

* போர் பாதிப்பால் வெளியேறும் முதலீடு டாப்-5
1. அர்ஜென்டினா
2. துருக்கி
3. பிரேசில்
4. எகிப்து
5. தெ.ஆப்ரிக்கா