Aug 18, 2022
உலகம்

அரசு மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுவதால் ஒரே நாளில் 2 அமைச்சர்கள் ராஜினாமா: இங்கிலாந்து பிரதமருக்கு கடும் நெருக்கடி

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு மீது நம்பிக்கை இழந்த அவரது அமைச்சர்கள் இருவர் ஒரே நாளில் தங்களது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பிரதமர் போரிஸ் ஜான்சன்  தலைமையிலான இங்கிலாந்து அரசு பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகிறது.  கொரோனா ஊரடங்கு காலத்தில் விதிமுறை மீறி பிரதமரும், அவரது அரசு  அதிகாரிகளும் மதுபான விருந்தில் கலந்து கொண்ட விவகாரம் பூதாகரமாக வெடித்தது.

சமீபத்திய ஊழல், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான எம்பி  கிறிஸ்டோபர் பின்சரை துணைத் தலைமைக் கொறடாவாக ஜான்சன் நியமித்தது மேலும்  அதிருப்தியை ஏற்படுத்தியது. இவ்வாறாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அரசு மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி எழுந்துள்ள நிலையில், அவரது கட்சியினர் மத்தியிலும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அதையடுத்து நேற்று ஒரே நாளில் இரண்டு முக்கிய கேபினட் அமைச்சர்கள் திடீரென தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு மீண்டும் நெருக்கடி அதிகரித்துள்ளது.

இதுகுறித்து லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிட்டிகல் சயின்ஸ் அரசியல் நிபுணர் இயன் பெக் கூறுகையில், ‘பிரதமர் போரிஸ் ஜான்சனின் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த சுகாதார அமைச்சர் சஜித் ஜாவித், நிதியமைச்சர் ரிஷி சுனக் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இவர்களின் முடிவால் போரிஸ் ஜான்சனின் ஆட்சிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ராஜினாமா செய்த இரு அமைச்சர்களும் மிகவும் திறமையானவர்கள் என்று பலர் கருதினர்.

இந்த நிலையில் அவர்களின் ராஜினாமாக்கள் அரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. புதிய சுகாதார அமைச்சராக ஸ்டீவ் பார்க்லேவையும், நிதியமைச்சராக நாதிம் ஜஹாவி ஆகியோரை நியமிக்க போரிஸ் ஜான்சன் முடிவு செய்துள்ளார்’ என்றார்.