Mar 30, 2023
அந்தரங்கம்

ஃபிட்தான் எப்பவும் கவர்ச்சி! அலியா பட்

நன்றி குங்குமம் டாக்டர்

சமீபத்தில் வெளியான கங்குபாய் கத்தியாவதி மூலம் இந்திய ரசிகர்களின் மனங்களில் மாஃபியா குயினாக இடம்பிடித்தவர். இவரின் க்யூட்டி ப்யூட்டி ரகசியம் என்ன என்று தேடினோம். நீங்கள் நம்புவீர்களா?  அலியா பல க்ரேசியான, வித்தியாசமான உணவுமுறைகளை எல்லாம் பின்பற்றி இருக்கிறார். ஒரு காலத்தில் கோழி மற்றும் காய்கறிகள் மட்டுமே சாப்பிட்டிருக்கிறார்.  புகழ்பெற்ற ஊட்டச்சத்து நிபுணர் ருஜுதா திவேகருடன் ஓர் உரையாடலில், அலியா இனி பைத்தியக்காரத்தனமான டயட்களை பின்பற்றப்போவதில்லை என்றும், முழுமையான நிறைவான மற்றும் ஆரோக்கியமான உணவுத் திட்டத்தை முன்னெடுப்பதில் முழு நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் வெளிப்படுத்தினார்.  இப்பொழுதெல்லாம் அலியாவின் தினசரி உணவுத் திட்டங்கள் எளிமையானவை மற்றும் குழப்பங்கள் இல்லாதவைதான்.

காலை உணவு என்பது நாளின் மிக முக்கியமான பகுதியாகும், அலியாவும் அதையே முழுமையாக ஆதரிப்பவர். எனவே, காலை உணவு வேளையை தனக்கு நிறைவைத் தரும் உணவுகளையும் கலோரிகளைக் கட்டுக்குள் வைத்திருக்கும் உணவுகளையும் கொண்டு தொடங்க விரும்புவார்.  இவரது காலை உணவுத் தட்டில் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உணவுகள் நிறைந்திருக்கும்.  பொதுவாக அகாய் பெர்ரி, பப்பாளி போன்ற பருவகால பழங்களைத் தவிர்ப்பதே இல்லை.  சர்க்கரை இல்லாமல் மூலிகை தேநீர் அல்லது காபியுடன் தன் நாளைத் தொடங்க விரும்புகிறார். பின்னர், போஹா அல்லது முட்டை சாண்ட்விச் போன்றவற்றைக் கொண்டு பசியை சமாதானப்படுத்துகிறார்.

ஸ்னாக்ஸ் சாப்பிடத்தோன்றினால், வேர்க்கடலை அல்லது மக்கானா போன்ற ஆரோக்கியமானவற்றை மட்டும் அவர் கொரிப்பதை ஷூட்டிங் ஸ்பாட்டில் நாம் காணலாம். அலியாவின் உணவுத் திட்டம் இவரை நாள் முழுவதும் சிறிய அளவிலும்  தினசரி ஆறேழு முறையும் சாப்பிடவைக்கிறது. எவ்வளவு   பிஸியாக வேலை செய்தாலும் சாப்பிடுவதைத் தவறவிடுவதில்லை.    ஓவர் ஈட்டிங் -ஐத் தவிர்க்க இந்தத் திட்டத்தை கடைப்பிடிப்பது ஒரு சிறந்த வழிமுறை என்பது அலியாவின் நம்பிக்கை.

இரவு உணவுக்கான அலியாவின் திட்டம் எளிமையானது.  ஆடம்பரமானது எதுவும் இல்லை.  பருப்பு-சாதம் மற்றும் தயிர்-சாதம் அவருக்கு மிகவும்  பிடித்தமானவை. தண்ணீர் இன்றி எந்த டயட்டும் செல்லுபடியாகாது. அலியா ஒரு தண்ணீர் பைத்தியம் எனலாம். எப்பொழுதும் ஹைட்ரேட்டட் ஆக இருக்க அவர் பெரும் சிரத்தை எடுக்கிறார்.

மேலும், வொர்க்அவுட்டில் சமரசம் செய்துகொள்வது அலியாவின் வழியல்ல.  அவர் நிறைய பைலேட்ஸ் மற்றும் கார்டியோ செய்கிறார். இதனால் அவர் எப்போதும் தன்னை ஃபிட்டாகவும் வலுவாகவும் உணர்வதாகச் சொல்கிறார். ஜிம்மில் இப்படி வேர்க்க விறுவிறுக்க உடற்பயிற்சிகள் செய்வதால் ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்களை சேமித்து பது அவருக்கு முக்கியமானது.  தேங்காய்த் தண்ணீர் அல்லது எலுமிச்சைப் பழம் போன்ற சப்ளிமென்ட்ஸில் வலுவூட்டப்பட்ட ஏதாவது ஒன்றை உட்கொள்வது, அவரின் அன்றைய தினத்தை சுறுசுறுப்பாக்குகிறது.

ஃபிட்னெஸ்க்கு உடற்பயிற்சி மட்டுமல்லாது, யோகாவும், நடனமாடுதலும் இவரின் ஃபேவரைட். ஜும்பா போன்ற நடன உடற்பயிற்சிகளில் பெரிதாக ஆர்வம் இல்லாவிட்டாலும் நன்றாக உடலை வளைத்து நடனமாடும்போது உடலின் தேவையற்ற கலோரிகள் கரைகின்றன என்பதால் நடனமாடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.இயற்கையான அழகுக்கே முக்கியத்துவம் தருவதால், ஆர்கானிக் பொருட்களைக் கொண்டு சருமத்தையும் கூந்தலையும் பராமரிப்பதையே விரும்புகிறார். தனக்கென தனியாக ஃபிட்னெஸ் குரு ஒருவரையும் வைத்திருக்கிறார். வொர்க் அவுட், டயட், ஓய்வு என எல்லாவற்றையும் அவர் திட்டமிடும்படிதான் செய்கிறார் அலியா.

‘ஒரு நிபுணரிடம் உங்களை ஒப்படைக்கும்போதுதான், நம்முடைய ஹெல்த் பற்றிய கவலையின்றி செய்ய வேண்டிய வேலைகளைச் சிறப்பாகச் செய்ய முடியும்’ என்கிறார்.‘அழகு என்பது தனியாக இல்லை. நாம் ஃபிட்டாக, ஆரோக்கியமாக இருந்தால் அதுவே நம்மை தன்னம்பிக்கையோடு இருக்கச் செய்து நம்மை அழகாகக் காட்டும் எனவே ஃபிட்தான் எப்போதும் கவர்ச்சியானது. கவர்ச்சி என்பது ஆடையிலோ தோற்றத்திலோ இல்லை’ என்று தத்துவம் பேசுகிறார் இந்த க்யூட் கங்குபாய்.

தொகுப்பு: ஆர்.மோனிகா