Oct 17, 2021
குழந்தை வளர்ப்பு

குழந்தைகளுக்கான கண்ணாடியை எப்படி தேர்ந்தெடுப்பது?

* கண்ணாடி அணிய வேண்டும் என மருத்துவர் எழுதிக் கொடுத்த உடனேயே அதைப் பற்றி  உங்கள் குழந்தையிடம் சொல்லித் தயார்படுத்துங்கள். கண்ணாடி அணிவதால்  ஏற்படப் போகிற பாசிட்டிவான விஷயங்களைச் சொல்லி, அதைப் பத்திரமாகக் கையாள  வேண்டியதன் அவசியத்தையும் சொல்லிக் கொடுங்கள்.

* நீங்கள் கண்ணாடி அணிகிற பழக்கம் உள்ளவர் என்றால், உங்கள் குழந்தையின்  முன்னால் கண்ணாடி அணிவதைத் தவிர்க்காதீர்கள். கண்ணாடியுடன் உங்களைப்  பார்க்கும்போது குழந்தைக்கும் அதை அணிகிற ஆர்வம் வரும்.

* எப்போதும்  கண்ணாடி அணியச் சொல்லப்பட்டிருந்தால், தினமும் காலையில் எழுந்ததும் அதை  அணிவதைப் பழக்குங்கள். குழந்தைக்கு அந்தப் பழக்கம் முழுமையாக  வரும்போதுதான், கண்ணாடி அணிவதை ஒரு சுமையாகப் பார்க்கிற மனநிலை மாறும்.

* கண்ணாடி அணிவதென்பது அடுத்தவரின் கிண்டல், கேலிக்குள்ளான விஷயமல்ல  என்பதையும் அப்படி யாரேனும் கிண்டல் செய்தால் அதைப் பொருட்
படுத்தக்கூடாது என்கிற மனப்பக்குவத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

* தன்னுடைய கண்ணாடி யை தானே சுத்தப்படுத்தவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளவும் பழக்குங்கள்.

* தடிமனான லென்ஸ் உள்ள கண்ணாடியை உங்கள் குழந்தைக்கு மருத்துவர் பரிந்துரைக்கிறபோது, கண்ணாடியின் ஃபிரேம் சிறியதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளவும்.

* பிளாஸ்டிக் ஃப்ரேம் பொருத்திய கண்ணாடிகளே குழந்தைகள் கையாள ஏற்றவை. உடையாது, வளையாது. எடை குறைவாக இருக்கும். இப்போது எடை குறைவான உலோக ஃப்ரேம்கள்கூட வருகின்றன. உங்கள் குழந்தைக்கு அலர்ஜி ஏதும் இல்லையா என்பதைத் தெரிந்து கொண்டு அவற்றை வாங்கித் தரலாம்.

* சிறு குழந்தைகளின் மூக்கு முற்றிலும் வளர்ச்சி யடைந்திருக்காது என்பதால் கண்ணாடி அணிகிற போது பிடிமானமின்றி அது வழுக்கி விழக்கூடும். அதைத் தவிர்க்க அட்ஜஸ்ட்டபுள் நோஸ் பேடு வைத்த ஃப்ரேமைத் தேர்ந்தெடுக்கவும்.

* குழந்தைகளுக்கு கண்ணாடிகளை முறையாக அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தெரியாது. எனவே லென்ஸ் பகுதியானது சரியான இடத்தில் உட்காரும்படி இருக்க வேண்டும். இல்லாவிட்டால் கீழே இறங்கிய கண்ணாடியை அட்ஜஸ்ட் செய்யாமல், மேலே உள்ள பகுதி வழியே பார்க்கப் பழகுவார்கள்.