Sep 19, 2021
அழகு குறிப்புகள்

சருமம் காக்கும் பாகற்காய்

நன்றி குங்குமம் தோழி

தீபாவளி ஸ்பெஷல்  

உணவே மருந்து

பாகற்காய் என்றாலே பல மைல் தூரம் ஓடும் குழந்தைகள். இதன் கசப்புத்தன்மையால் பெரியவர்களே கூட பாகற்காயை விரும்புவதில்லை. ஆனால், ஊட்டச்சத்துக்கள் மிகுந்துள்ள பாகற்காயில் பல மருத்துவ குணங்களும் இருக்கின்றன. கொடி வகையைச் சார்ந்த பாகற்காயை பழங்காலந் தொட்டே, நம் முன்னோர்கள் சர்க்கரை நோய், வயிற்றுவலி, புண்கள், கட்டிகள், அம்மைநோய், மலேரியா மற்றும் பிற காய்ச்சல்கள், பெருங்குடல் நோய், மூட்டுஅழற்சிநோய் போன்றவற்றுக்கு மாற்று மருந்தாக உபயோகப்படுத்தி வந்திருக்கின்றனர் மேலும்...

* சருமக்கோளாறுகள், *உடலில் ஏற்படும் காயங்களை சுத்தப்படுத்துவது, ஆற்றுவது,
* எரிச்சலை போக்குதல்
* செரிமான சக்தியை அதிகரிப்பது
* சுவைத்திறனை மேம்படுத்துவது
* பித்தம் தொடர்பான பிரச்னைகளை போக்குவது,
* வயிற்றில் உள்ள புழு, பூச்சிகளை நீக்குதல்
* மலச்சிக்கலைப் போக்குதல்
* அழற்சியை சரி செய்தல்
* கப தோஷங்களை நீக்குதல்
* சிறுநீர்ப்பாதை தொற்றுகளை நீக்குதல்
* ரத்தத்தை சுத்திகரிக்கச் செய்தல்
* மாதவிடாய் கோளாறுகளை போக்குதல்
*இளம் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரக்கச் செய்யவும், தாய்ப்பாலை சுத்திகரித்தல்
* உடல் எடையை குறைத்தல்
* உடலின் நச்சுத்தன்மையை நீக்குதல்
* கல்லீரல் நோயை நீக்குதல்
* ரத்த சம்பந்தமான பிரச்னைகளை சரி செய்தல்
* மற்றும் சளி, இருமல் போன்றவற்றுக்கும் பாகற்காய் சாறு, பேஸ்ட் போன்றவை மருந்தாக பயன்படுகிறது.

பழுத்த பாகற்காயும் பல ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இதில் பயோஆக்டிவ் ரசாயனங்கள், வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் பி1, பி2, பி3 மற்றும் பி9 (ஃபோலேட்) போன்ற வைட்டமின்கள், பொட்டாசியம், துத்தநாகம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகளும் (Antioxidants) உள்ளன.

நீரிழிவு நோய்க்கு நல்ல மாற்று மருந்துவளர்ந்த மற்றும் வளரும் நாடுகளில் நீரிழிவு நோய் மிகவும் பொதுவான கோளாறாகும், மேலும் இந்த நோய் உலகின் பெரும்பாலான பகுதிகளில் வேகமாக அதிகரித்து வருகிறது. நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒரு பங்கினர், ஒருவித நிரப்பு மற்றும் மாற்று மருந்துகளைப் பயன்படுத்துவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அந்த மாற்று மருத்துவ முறையில் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது பாகற்காயே.  நீரிழிவு எதிர்ப்பு பண்புகளுக்காக அதிக கவனத்தை ஈர்த்த பாகற்காய் ஆசியா, தென் அமெரிக்கா, இந்தியா மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவின் பழங்குடி மக்களிடையே நீரிழிவு நோய் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படுகிறது.

வட இந்தியாவில் கரேலா என்றழைக்கப்படும் பாகற்காயில் நீரிழிவுக்கெதிரான விளைவுகள் இருப்பதாக விலங்குகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளன.பாகற்காய் சாறு, குடல் குளுக்கோஸ் உறிஞ்சிக்கொள்வதை குறைப்பதாக இந்த ஆய்வுகள் காட்டுகிறது மற்றும் கூடுதலாக கணைய (Pancreas) விளைவுகளையும் கட்டுப்படுத்துகிறது. நீரிழிவால் பாதிக்கப்பட்ட பீட்டா செல்களை அழிப்பதிலும், நல்ல நிலையில் உள்ள செல்கள் பாதிப்படைவதை தடுப்பதிலும் பாகற்காய் சாறு பெரும் பங்கு வகிப்பதை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட எலிகளிடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் நிரூபித்துள்ளார்கள்.

சில ஆய்வுகள் கசப்பான பாகற்காய் சாற்றில் உள்ள  நீரிழிவு நோய்க்கெதிரான தன்மையானது (Anti-Diabetic Mechanism) இன்சுலின் சுரப்பை அதிகரித்தல், கல்லீரல் திசுக்களில் கிளைகோஜெனீசிஸைக் (glycogenesis in liver tissue) குறைத்தல், புற குளுக்கோஸ் பயன்பாட்டை அதிகரித்தல் மற்றும் சீரம் புரத அளவை (increasing serum protein levels) அதிகரிப்பதன் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன.

பாகற்காயில் இன்சுலின் மூலக்கூறுகள் இருப்பதால், இதன் கசப்பானது உணவின் ஒரு அங்கமாக அல்லது நீரிழிவு மற்றும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் (Pre diabetic ) உள்ள நோயாளிகளுக்கு ஒரு உணவு நிரப்பியாக மாறும் ஆற்றலைக் கொண்டுள்ளது. இதய நோய்கள் மற்றும் நீரிழிவு நோய் ஆகியவை உலகம் முழுவதும் அதிக எண்ணிக்கையிலான இறப்புகளுக்கு காரணமாகின்றன. நீரிழிவு நோய்க்கெதிரான  விளைவுகள் இருப்பதால், பாகற்காய் உணவில் ஒரு அங்கமாக அல்லது நீரிழிவு மற்றும் முன் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு உணவு நிரப்பியாக (Dietary supplement) செயல்படுகிறது.

பாகற்காயில், பாலிபெப்டைட்-பி (Polypeptide-p) அல்லது பி-இன்சுலின் (P-insulin) எனப்படும் கலவை உள்ளது, இது இயற்கையாகவே நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதாகக் காட்டப்பட்டுள்ளது. 2011 ஆம் ஆண்டு ஜர்னல் எத்னோபார்மகோலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, நான்கு வார மருத்துவ பரிசோதனையில், 2,000 மில்லிகிராம் பாகற்காயை வழக்கமாக எடுத்துக் கொள்ளும்போது, நீரிழிவு வகை -2 (Type-2 Diabetes) நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் ரத்த குளுக்கோஸ் அளவைக் கணிசமாகக் குறைத்தது.

மேலும், பாகற்காய் சாறு அழற்சி எதிர்ப்பாகவும் மற்றும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கவும் உதவுகிறது. இதன்மூலம், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கிறது. உடலில் அதிகப்படியான சோடியத்தை உறிஞ்சும் பொட்டாசியம் நிறைந்திருப்பதால் உடலின் ரத்த அழுத்தத்தையும் இது பராமரிக்கிறது. இதில் ஃபோலிக் அமிலம் நிறைந்துள்ளது, இது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

சருமப் பராமரிப்பு

பாகற்காய் சாற்றில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி உடன் சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் முன்கூட்டிய சரும வயதைத் (premature skin ageing) தடுக்கலாம் மற்றும் சரும சுருக்கங்களைக் குறைக்கிறது. மேலும், இது முகப்பருவைக் குறைக்கிறது, எக்சிமா மற்றும் சொரியாஸிஸ் போன்ற சருமக் கோளாறுகள் சிகிச்சையில் உதவுகிறது, அத்துடன் தீங்கு விளைவிக்கும் புற ஊதா கதிர்களிலிருந்து சருமத்தைப் பாதுகாக்கிறது.

பருக்கள், கருப்பு தழும்புகள், ஆழமான சருமத் தொற்றுகள் ஆகியவை எளிதில் நீங்கும். பாகற்காயை சாறு பிழிந்து, அதனுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து, தினந்தோறும் வெறும் வயிற்றில் ஆறு மாதம் பருகி வந்தால் மேற்கூறிய பிரச்சனை இருப்பவர்கள் சிறப்பான பலன்களை பெறலாம்.

கூந்தல் பராமரிப்பு

பாகற்காய் சாற்றை உங்கள் உச்சந்தலையில் (Scalp)  தவறாமல் பயன்படுத்துவதால் முடி உதிர்தல் மற்றும் கூந்தல் நரைத்தல், பிளவு-முனைகள் மற்றும் கரடுமுரடான கூந்தலுக்கு சிகிச்சையளித்தல், பொடுகு நீக்குதல் மற்றும் அரிப்பு ஆகியவற்றை எதிர்த்துப் போராடலாம். முடி உதிர்வதை நிறுத்த இதன்  சாற்றை நேரடியாக  பயன்படுத்தலாம் அல்லது அதை சிறிது தயிரில் கலந்து உச்சந்தலையில் மற்றும் கூந்தலில் மசாஜ் செய்யலாம். பாகற்காய்  சாறு, சீரகம் விதை பேஸ்ட் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச்சாறு ஆகியவற்றைக் கொண்டு ஹேர் மாஸ்க் தயார் செய்து தலையில் தடவி 30 நிமிடங்கள் விட்டுவிட்டு அலசினால் பொடுகுப்பிரச்னையை அடியோடு நீக்கிவிடலாம்.

மலச்சிக்கல்

நார்ச்சத்து நிறைந்துள்ள காய்களில் பாகற்காயும் ஒன்று. இதன் காரணமாக இதை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றில் உணவு நன்றாக செரிமானம் ஆக உதவுகிறது. மேலும் தீவிரமான மூலம், மலச்சிக்கல் பிரச்சனைகளையும் சுலபத்தில் பாகற்காய் தீர்க்கிறது.

சிறுநீரக பாதுகாப்பு

சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் . சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை அதை சார்ந்த உறுப்புக்கள் சிறப்பாக செயல்பட பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவதற்கும்  பாகற்காய் உதவுகிறது. சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட விரும்புபவர்கள் வாரம் ஒருமுறை பாகற்காய் சமைத்து சாப்பிடுவது நல்லது.

உடல் எடை

இன்று பலருக்கும் தங்களின் உடலின் அதீத எடையை குறைப்பதே தலையாய பிரச்சனையாக உள்ளது. பாகற்காய் சாப்பிடுபவர்கள் உடலின் செரிமான மண்டலம் நன்றாக தூண்டப்பட்டு உணவு நன்றாக செரிமானம் ஆகச் செய்கிறது. இதனால், உடலுக்குத் தேவையான சத்துக்கள் மட்டும் உணவில் இருந்து எடுக்கப்பட்டு வேகமாக உடல் எடையை குறைக்கிறது.

புற்று நோய் தடுப்பு

நமது உடலில் இருக்கும் செல்களில் ஏற்படும் பல மாற்றங்களாலும், உடலில் சேரும் பல வகையான நச்சுக்களின் சேர்மானத்தினாலும் புற்று நோய் ஏற்படுவது அதிகரிக்கிறது. அன்றாடம் பாகற்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சாப்பிடுவதால் எந்த ஒரு வகையான புற்று நோய்களும் தோன்றுவது மிகவும் குறைவாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதயம்

நமது உடலின் முக்கிய உறுப்பான இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருந்தாலும், இதயத்திற்கு நலத்தை தருகின்ற உணவுகள் மற்றும் மூலிகைகளை சாப்பிட்டு வருவது நல்லது. பாகற்காய் சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது.

நோயெதிர்ப்பு சக்தி

பாகற்காய் இயற்கையிலேயே மிகுந்த காரத்தன்மை மற்றும் அமிலத்தன்மை கொண்ட ஒரு காயாக இருக்கிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு ரத்தத்தில் வெள்ளையணுக்களின் உற்பத்தி அதிகரித்து உடலில் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பல்வேறு வகையான தொற்று கிருமிகளின் பாதிப்பிலிருந்து உடலை காக்கும்.

கல்லீரல்

சிலருக்கு கல்லீரலில் அதிகளவு நச்சுகள் சேருவதாலும், அதீத அழற்சியினாலும் கல்லீரல் வீக்கம் ஏற்படுகிறது. இந்த பிரச்னையை சரி செய்வதில் பாகற்காய் ஒரு சிறந்த இயற்கை மருத்துவ உணவாக இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு, மூன்று முறை பாகற்காய் சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் இருக்கும் கிருமிகள் மற்றும் நச்சுகள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமாகிறது.

ஊட்டச்சத்து

வைட்டமின் ஏ, பி, சி, பீட்டா-கரோட்டின் போன்ற ஃப்ளேவனாய்டுகள், லூடின், இரும்புச்சத்து, ஜிங்க், பொட்டாசியம், மாங்கனீசு, மக்னீசியம் போன்ற தாதுக்கள் பாகற்காயில் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம், நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டுமொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

இலை சாற்றினைக் குடித்து வாந்தி எடுத்தால் பாம்பு(கண்ணாடி விரியன்) விஷம் கூட நீங்கும்.பாகற்காய் ஜூஸுடன் 2 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து குடித்து வந்தால் மஞ்சள் காமாலை குணமாகும். தினமும் 2 வேளை குடித்து வந்தால் மூல நோயினால் ஏற்படும் ரத்தப்போக்கு நின்றுவிடும். பல மருத்துவ குணங்கள் உள்ள பாகற்காயை, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடுவதால் பல நன்மைகள் பெறலாம்.

உடலுக்கு பல நன்மைகளை தரும் பாகற்காயில் குழுந்தைகள் விரும்பி சாப்பிடும் வறுவலை எப்படி செய்யலாம் என்று விளக்குகிறார் சமையல் கலை நிபுணர் நித்யா நடராஜன்...

பாகற்காய் வறுவல்

தேவையான பொருட்கள்

பாகற்காய் - 1 (பெரியது / வட்டவட்டமாக
சன்னமாக நறுக்கவும்)
மிளகாய்த்தூள் - ½   டீஸ்பூன்
கார்ன்ஃப்ளவர் மாவு - ½ டீஸ்பூன்
அரிசி மாவு - ½ டீஸ்பூன்
கடலை மாவு - ½  டீஸ்பூன்
இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ½  டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - ¼ டீஸ்பூன்.

செய்முறை

வட்டமாக நறுக்கி வைத்துள்ள பாகற்காயின் விதையை நீக்கிவிட்டு, மேலே கூறிய அனைத்து பொருட்களையும் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து அந்த மசாலா பொருட்கள் அதில் ஒட்டும்படி கிளறி குளிர்சாதன பெட்டியில் 1 மணி நேரம் வைத்து எடுத்து எண்ணெயில் பொரித்து சூடாக மொறு மொறுப்பாக பரிமாறவும். மாலை நேர ஸ்நாக்சாகவும் சாப்பிடலாம்.

தொகுப்பு: மகாலட்சுமி