Sep 19, 2021
அழகு குறிப்புகள்

ஆரோக்கியம் சார்ந்த அழகே நல்லது

அழகுப் பெட்டகம் 8

அகத்தின் அழகே முகத்திலும் வெளிப்படும். பெண்கள் தங்கள் வெளிப்புறத் தோற்றத்தை வெள்ளையாக, மினுமினுப்பாக, வழவழப்பாக, அழகாக வெளிக்காட்ட எத்தனையோ முயற்சிகளை செயற்கையாக மேற்கொள்கிறார்கள். உடல் அதை ஏற்றுக் கொள்கிறதா என்பதைப்பற்றி நாம் யோசிப்பதே இல்லை. இனி வரும் வாரங்களில் தோலில் உள்ள வகைகள் மற்றும் தோலில் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும், இயற்கையோடு இணைந்து எவ்வாறு அந்தப் பிரச்சனைகள் நிவர்த்தி செய்வது என்பது குறித்துப் பேச இருக்கிறார் அழகுக்கலை நிபுணர் ஹேமலதா.

அழகு சார்ந்து இயங்கும் அத்தனை நிறுவனங்களும், தங்கள் பொருட்களை சந்தைப்படுத்த எத்தனையோ மாயாஜால வேலைகளைச் செய்து அவர்களின் தயாரிப்புகளை நம் தலைகளில் கட்டுகிறார்கள். பல்வேறு விளம்பர உத்திகளோடு, நமது வீடுகளின் வரவேற்பறைக்குள் நுழையும் இவர்கள், தொலைக்காட்சி வழியே கடைவிரித்து காசு பார்ப்பதற்கு, நமது உடலை நாம் குப்பையாக்கிக் கொண்டிருக்கிறோம். உலகத் தரம் வாய்ந்த காஸ்மெட்டிக் நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புப் பொருட்களை சந்தைப்படுத்தியிருக்கும் விதத்தை, பல்பொருள் விற்பனை அங்காடிகளுக்குச் சென்று பார்த்தால் புரியும்.

விற்பனை பிரிவுப் பெண்கள், நமது தோலின் குறைபாட்டைச் சுட்டிக்காட்டி, தங்கள் நிறுவனத் தயாரிப்புகள் அவற்றை சரிசெய்வதாகச் சொல்லியவாறே நம்மைப் பின் தொடர்வார்கள். நம் உடலைப் போர்த்தியிருக்கும் மெல்லிய அடுக்கான தோல் உண்மையிலே அழகு சார்ந்ததா? காஸ்மெட்டிக் நிறுவனங்களின் தயாரிப்புகள், நம் தோலுக்கு உண்மையிலேயே அழகைத் தருகிறதா…? இனி வரும் வாரங்களில் பார்க்கலாம்...

தோல் என்பது இதயம், கல்லீரல், சுவாசப்பகுதி, கண், தொண்டை என எல்லா உறுப்பையும் இணைத்து, நமது உடல் முழுவதையும் பாதுகாக்கும் ஒரு அமைப்புதானே தவிர, காஸ்மெட்டிக் நிறுவனங்கள் காட்டுவதுபோல அழகை வெளிப்படுத்தும் அமைப்பல்ல. உண்மையைச் சொன்னால் நமது உடல் சுவாசிக்கவும், கழிவை நீக்கவுமே தோல் பயன்படுகிறது.

நுரையீரல் மட்டுமல்ல நமது தோலும் சுவாசிக்கும். நம் தோலில் கண்ணுக்குத் தெரியாத துளைகள் மிக மெல்லியதாக நிறைந்திருக்கும். துளைகள் வழியாக சுவாசித்து, அந்தத் துளைகள் வழியாகவே  கழிவுகளை வியர்வையாக வெளியேற்றும். தோலின் மேல் பகுதியில் பவுண்டேசன், க்ரீம், லோஷன், ஜெல் என அழகுக்காக அனைத்தையும் தடவி சுவாசத் துளைகளை அடைக்கும்போது, மிக மென்மையான நமது தோல் சுவாசிக்க முடியாமல் திணறத் துவங்குகிறது. விளைவு…? தோல் வியாதிகள் ஆரம்பமாகிறது.

தோலில் பிக்மென்டேஷன், ரேசஷ், பங்கஸ், அலர்ஜி, சொரியாஸிஸ், பரம்பரை நோய், சூரிய வெளிச்சம் படாத இடங்களில் வரும் பூஞ்சைத் தொற்றென எல்லாத் தொல்லைகளும் வரத் தொடங்கும். நமது உடலில் உள்ள சூரிய ஒளி படாத மறைவான பகுதிகளை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
சிலருக்கு சில கெமிக்கல் வாடை, ஒத்துக்கொள்ளாத உணவு, பூச்சிக் கடி, இவைகளால் ஒவ்வாமை பிரச்சனைகள் தோலில் தோன்றும். சிலருக்கு கடல் உணவான நண்டு, சில வகை மீன்கள், காய்கறிகளில் கத்திரிக்காய் போன்ற உணவுகளாலும் தோல் ஒவ்வாமைக்கு உள்ளாகும். சிலருக்கு பரம்பரை காரணமாகத் தோல் பிரச்சனைகள் வரலாம்.

சோப்பை பயன்படுத்துவதால் தோலில் உள்ள அழுக்கு நீங்குவதாக நாம் நினைக்கிறோம். உண்மையில் சோப்பில் உள்ள சுண்ணாம்பு நமது முகத்தில் ஏறுவதாலே முகமும், உடலும் பளிச்செனத் தெரிகிறது. நமது தோலில் படிந்த அழுக்குகள் அப்படியேதான் இருக்கும். பெரும்பாலான குளியல் சோப்புகள் பாமாயில் கழிவில் இருந்தே தயாரிக்கப்படுகிறது. பாமாயில் எண்ணெயின் அடர்த்தித் தன்மை நமது தோலின் துளைகளை மூடிவிடுகிறது. எனவே குளியலுக்காக நாம் பயன்படுத்தும் சோப்பில் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும். பேஸ் வாஸ், சோப்பு ஆயில், ஜெல் என எல்லாவற்றிலுமே இதே நிலைதான். தேங்காய் எண்ணெய் சேர்த்து தயாரிக்கப்படும் சோப்புகளே தோலின் ஆரோக்கியத்திற்கு எப்போதும் நல்லது.

செயற்கை தயாரிப்புகளைத் தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் குளியல்பொடி, அரப்புப் பொடி, சீயக்காய், பச்சைப் பயறு, கடலை மாவு, பயத்தம் பருப்பு, நலங்கு மாவு, இவற்றை உடலை சுத்தப்படுத்துவதற்கென பயன்படுத்தினாலே மிகவும் நல்லது. இவற்றால் தோலுக்கு பாதிப்போ, பக்க விளைவுகளோ கண்டிப்பாக இல்லை. நமது முன்னோர்கள் இவற்றை வீட்டிலே தயாரித்துப் பயன்படுத்தி இயற்கையோடு இணைந்து வாழ்ந்தார்கள். இயற்கை பொருட்களையே பெரும்பாலும் முகப் பூச்சாகவும், வாசனை திரவியமாகவும் பயன்படுத்தினார்கள்.

சிலருக்கு தோலில் அதிகப்படியான எண்ணெய்த் தன்மையும், சிலருக்கு எண்ணெய்த் தன்மை குறைவாக இருப்பதனாலும் தோலில் பிரச்சனைகள் வரும். வாரம் ஒரு நாள் எண்ணெய்க் குளியல் எடுப்பதும் தோலுக்கு மிகவும் நல்லது. தலையில் எண்ணெய் வைக்கும்போது தோல் வறட்சி அடையாமல், சரிவிகித எண்ணெய்த் தன்மையுடன் பாதுகாப்பாய் இருக்கும். நமது உடலில் இருக்கும் எண்ணெய்த் தன்மையும், ஈரத் தன்மையும் பேலன்ஸ் ஆகாமல் போகும்போதுதான் தோலில் பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கின்றன.

ஒரு சிலருக்கு மிகச் சிறிய வயதிலேயே தோலில் சுருக்கம் வருவதற்கும் தோலில் எண்ணெய்த் தன்மை இன்மையே காரணமாகும். தோலின் அடிப்பகுதியில் பரவியுள்ள கொழுப்பு நமது உடலமைப்பைப் பளபளப்பாகக் காட்டுகிறது. சரிவிகித எண்ணெய்த் தன்மை தோலில் இல்லையெனில், வயது நமக்கு ஏறஏற கொழுப்பு குறைந்து, தோல் தளர்வாகி கோடுகள் தோன்றுவதோடு, தோல் சுருக்கத்தை நோக்கி நகரத் தொடங்கும். வயதான தோற்றத்திற்கு நமது உடல் மாறத் துவங்கும். உடலுக்குத் தேவையான தண்ணீரை அருந்தாமையும் தோல் பிரச்சனைக்கு ஒரு காரணமாக அமைகிறது.

ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டரை லிட்டரில் இருந்து அதிகபட்சம் நான்கரை லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். தோலுக்குத் தேவையான விட்டமின் டி சத்து, சூரிய ஒளியில்தான் மிகவும் அதிகமாக  உள்ளது. அம்மாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை, பத்து மாதமும் இருட்டிலே இருக்கும்போது, மற்ற அத்தனை சத்துக்களும் அம்மாவிடமிருந்து கிடைத்தாலும் விட்டமின் டி மட்டும் குழந்தைக்கு கிடைக்காது. அதனால்தான் பிறந்த குழந்தையை அதிகாலை சூரிய வெளிச்சத்தில் காட்டுகிறார்கள்.

இதனால்தான் குளிர் பிரதேசங்களில் வாழும் வெளிநாட்டவர்களும், திறந்த வெளிகளில் சூரியக் குளியல் எடுக்கிறார்கள். உழைக்கும் வர்க்கத்தினர், அதிகமாக வெயிலில் வேலை செய்வதாலும், வேர்வை சிந்த உழைப்பதாலும்தான் தோல் பிரச்சனைகள் பெரும்பாலும் அவர்களை அணுகுவதில்லை. அலுவலகத்திலும் குளிர்சாதன வசதி, காரிலும் குளிர்சாதன வசதி, வீட்டிலும் குளிர்சாதன வசதியென வெயில் உடலில் படாமல் ஏ.சி.யில் எந்நேரமும் இருப்பதை, தோல் நலன் கருதி தவிர்த்தலே நலம்.

அதேபோல் வெளியில் செல்லும்போது வெயிலே படாத அளவிற்கு, உடல் முழுவதையும் மூடிச் செல்லக் கூடாது. காலையில் 11 மணிக்குள்ளும், மாலை 4 மணி முதல் 6 மணி வரையும் சூரிய வெளிச்சம் நமது தோலில் பட்டாலே போதுமானது. வெளிச்சம், காற்றோட்ட வசதி இல்லாத இடங்களில் தோலுக்கு ஆரோக்கியம் கிடைக்காது. நமது சுற்றுச்சூழலை சுத்தமாக வைக்க வேண்டும் நாம் எடுக்கும் உணவில், நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு என இரண்டும் உண்டு. நல்ல கொழுப்புள்ள உணவுகளை எடுத்தால் தோலுக்கு நல்லது.

மஞ்சள் வண்ண பழங்களில் புரோட்டீன் மற்றும் விட்டமின்கள் அதிகம் நிறைந்துள்ளது. வாழைப்பழம், ஆரஞ்சு, பப்பாளி, பூசணிக்காய் இதெல்லாம் தோலுக்கும் உகந்தவை. தண்ணீர் சத்து நிறைந்த பழங்கள், பழச்சாறுகள் போன்றவற்றை அடிக்கடி உணவாக எடுக்க வேண்டும். இவை நம் தோலுக்கு மினுமினுப்பையும், பளபளப்பையும் இயற்கையாகத் தரக் கூடியவை. ஏற்கனவே தோல் பிரச்சனை உள்ளவர்கள் அசைவ உணவுகளை தவிர்ப்பதும், கடைகளில் விற்கும் எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்ப்பதும் எப்போதும் நல்லது.

மனித உடலில் நார்மல் ஸ்கின், ஆயிலி ஸ்கின், ட்ரை ஸ்கின், காம்பினேஷன் ஸ்கின், சென்சிட்டிவ் ஸ்கின் என ஐந்து விதமான தோல்கள் உள்ளது. எந்தவகை ஸ்கின் டைப்பாக இருந்தாலும், இரவில் தூங்கச் செல்வதற்கு முன், முகத்தையும் கால்களையும் நன்றாக கழுவி சுத்தம் செய்த பிறகே படுக்கச் செல்ல வேண்டும். ஏனெனில் நமது பாதங்களில் அதிகமான துளைகள் இருக்கும். அதன் வழியாக அழுக்குகள் உள் நுழைந்து, நம் தோலைப் பாதிக்கும் அபாயமும் உண்டு.

அடுத்த வாரத்திற்கான கேள்விகள்...

* தோலில் தோன்றும் பிரச்னைகள் என்ன?

* தோல் பிரச்னைகளை எப்படி சரிசெய்வது?