Dec 03, 2020
குற்றம்

திருமண ஆசை கூறி சிறுமியை கடத்திய பெண் உட்பட 4 பேர் போக்சோவில் கைது

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் திருமண ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடத்தி சென்ற பெண் உட்பட 4 பேரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.மதுராந்தகம் நகரை சேர்ந்தவர்கள் குமார் (40). இவரது மனைவி நாகேஸ்வரி (34). இவர்களுக்கு 15வயது மகள் உள்ளார் .  இவர்கள் வீட்டின் அருகே வசித்து வந்தவர் லதா (35). நாகேஸ்வரி, லதா இருவரும் மதுரைக்காரர்கள் என்பதால் நட்புடன் பழகி வந்தனர்.இந்நிலையில், லதா வீட்டிற்கு மதுரையை சேர்ந்த பாஸ்கர் (20), அடிக்கடி வந்து சென்றுள்ளார். அப்போது, 15 வயது சிறுமிக்கும் பாஸ்கருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பாஸ்கர், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மதுரைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது குறித்து நாகேஸ்வரி மதுராந்தகம் போலீசில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன் வழக்கு பதிவு செய்து மதுரையில் இருந்து சிறுமியை மதுராந்தகத்திற்கு அழைத்து வந்தார். இது தொடர்பாக, பாஸ்கர் (20), அவரது அண்ணன் முத்து (22), லதா (34) மற்றும் ராமு (30) ஆகியோரை நேற்று செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தி 4 பேரையும் போக்சோ சட்டத்தில் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு சிறுமி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.