Apr 12, 2021
குற்றம்

வாக்குப்பதிவின்போதே பண விநியோகம்: அதிமுக நிர்வாகிகள் 5 பேர் மீது வழக்கு

ஆண்டிபட்டி:  தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தொகுதியில் நேற்று முன்தினம் வாக்குப்பதிவு நடந்து கொண்டிருந்தபோது, பாலக்கோம்பை பகுதியில் உள்ள அதிமுக அலுவலகத்தில், ‘‘விடுபட்ட’’ வாக்காளர்களுக்கு பணம் கொடுத்துள்ளனர். தகவலறிந்து அப்பகுதிக்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள், அதிமுகவினரை கையும் களவுமாக பிடித்தனர். இதில் அவர்களிடம் இருந்து ரூ.25 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பறக்கும் படை அதிகாரி கொடுத்த புகாரின் பேரில் அதிமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன் மற்றும் நிர்வாகிகள் 2 பேர் மீது, ஆண்டிபட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல் ராஜகோபாலன்பட்டி கிராமத்தில் உள்ள காலனி பகுதிகளிலும், அதிமுகவினர் நேற்று முன்தினம் வாக்காளருக்கு பணம் கொடுத்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த பறக்கும் படை அதிகாரிகள் அவர்களிடம் இருந்து ரூ.5,570ஐ பறிமுதல் செய்தனர். புகாரின்பேரில் டி.சுப்புலாபுரத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.