Mar 30, 2023
குற்றம்

புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு 2 பேர் சிக்கினர்

அம்பத்தூர்: சென்னை புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்த இருவரை போலீசார் கைது செய்தனர். கொரட்டூர் சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்தவர் மணி (68). அதே பகுதியில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த மாதம் 23ம் தேதி கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, கல்லாவில் இருந்த ரூ.2 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில், கொரட்டூர் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ரமணி வழக்கு பதிவு செய்து, சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரித்தார். அதில், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ் குமார் (22), ராஜி (20) ஆகியோர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களை நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், இவர்கள் இருவரும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின்னர் இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.