Mar 22, 2023
குற்றம்

செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடத்தி சென்று கூட்டு பலாத்காரம் செய்ததாக நாடகமாடிய ஐடி பெண்: போலீஸ் விசாரணையில் திடுக் தகவல்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து கடத்திச்சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக ஐடி பெண் ஊழியர் கொடுத்த பொய் புகாரால் பரபரப்பு நிலவுகிறது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நேற்றிரவு 10.30 மணியளவில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க இளம்பெண் சென்னை செல்வதற்காக ரயிலுக்கு காத்திருந்தார்.

அந்த பெண் தனிமையில் நின்றிருப்பதை பார்த்து 4 பேர் கொண்ட மர்ம கும்பல் சுற்றி வளைத்துள்ளது. அப்போது அந்த பெண் கூச்சல் போடவே மர்ம கும்பல் வாயை பொத்தி தூக்கிக்கொண்டு, காரில் கடத்தி சென்றது. இதன்பின்னர் சாலவாக்கம் அருகே காரை நிறுத்தி இளம்பெண்ணை அங்குள்ள காட்டு பகுதிக்கு தூக்கி சென்றனர். பின்னர் அங்கு அந்த இளம்பெண்ணை 4பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதில் மயக்கமான பெண் இறந்துவிட்டதாக கருதி, அவரை அங்கேயே விட்டுவிட்டு காரில் மர்ம கும்பல் தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில், இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் ஒரு இளம்பெண் மயங்கிய நிலையில் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பெண்ணை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சாலவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காமிரா பதிவுகள் மூலம் தனிப்படை போலீசார் தீவிரமாக விசாரித்தனர். இதில் போலீசாருக்கு பல்வேறு திடுக்தகவல்கள் கிடைத்துள்ளன.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்,:
உத்திரமேரூர் அருகே மலையாங்குளம் கிராமத்தை சேர்ந்த சலீம் (25) என்பவருக்கும் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அறியப்படும் பெரம்பலூர் மாவட்டம், கைகளத்தூர் பகுதியைச சேர்ந்த அழகுவேலின் மகள் அபர்ணா (21) என்பவரும் நீண்ட காலமாக காதலித்து வந்துள்ளனர். இதில், சென்னையில் ஒரு தனியார் ஐடி நிறுவனத்தில் சலீம், அபர்ணா வேலை பார்த்து வந்துள்ளனர். காதலன் சலீமுடன் விடுமுறை நாட்களில் அபர்ணா தனிமையில் இருப்பது வழக்கம். நேற்றிரவு பணி முடிந்து செங்கல்பட்டு ரயில் நிலையத்துக்கு சலீமும் அபர்ணாவும் வந்துள்ளனர்.

பின்னர் அங்கிருந்து அபர்ணாவை காரில் சாலவாக்கம் அருகே எஸ்.மாம்பாக்கம் பகுதிக்கு சலீம் அழைத்து சென்று, திருமணம் தொடர்பாக பேசியுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் அபர்ணா கோபமடைந்து, காரில் இருந்து இறங்கி, ஒரு கிமீ தூரம் நடந்து சென்று சாலவாக்கம் போலீசில் தன்னை 4 பேர் கும்பல் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக பொய் புகார் அளித்துள்ளார் என தெரியவந்துள்ளது. இதுகுறித்து அபர்ணாவிடம் போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சலீம் மற்றும் அவரது நண்பர்களிடம் போலீசார் விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.