Jan 24, 2020
ஹாலிவுட் செய்திகள்

ஜேம்ஸ் பாண்ட் 007

தலைப்பில் இருக்கும் வாசகத்தை சொன்னவர், ‘டாக்டர் நோ’ படத்தின் மூன்று பாண்ட் கேர்ள்களில் ஒருவராக நடித்த உர்சுலா ஆண்டர்ஸ். சில்வியா டிரெஞ்ச் என்கிற அழகான பெண் கதாபாத்திரத்தின் (ஹ்யூனிஸ் கெய்சன் நடித்திருந்தார்) வாயிலாகதான் 007 கதாபாத்திரத்தின் ஓப்பனிங் சீனே வரும். கெய்சனிடம் படம் தொடங்குவதற்கு முன்பாக இயக்குநர் டெரன்ஸ் யங் சொல்லியிருக்கிறார். “நான் ஜேம்ஸ் பாண்ட் என்கிற புது சீரிஸை ஆரம்பிக்கப் போகிறேன். மொத்தம் ஆறு படங்கள். இதில் ஒவ்வொரு படத்திலும் உன்னை ஏமாற்றிவிட்டு, கழட்டி விட்டுவிடுவார் ஜேம்ஸ் பாண்ட். கடைசிப் படத்தில் அவர் உன்னுடைய தீவிரமான காதலை புரிந்துக் கொள்வார். நீங்கள் இருவரும் இணைவீர்கள்”. ஐடியா அருமையாகதான் இருந்தது.

ஆனால் ஏனோ சில்வியா டிரெஞ்ச் என்கிற பாண்ட் கேர்ள் பாத்திரத்தை இரண்டாவது ஜேம்ஸ் பாண்ட் படமான ‘ஃப்ரம் ருஷ்யா வித் லவ்’விலேயே கழட்டி விட்டு விட்டார்கள். எனினும் 007 திரைப்பட சகாப்தத்தில் முதல் பாண்ட் கேர்ள் என்கிற பெருமை ஹ்யூனிஸ் கெய்சனுக்குதான் கிடைத்தது. ‘டாக்டர் நோ’வில் தாரோ என்கிற பெண்ணை (ஜேனா மார்ஷல் என்பவர் நடித்திருந்தார்) ஜேம்ஸ் சந்திப்பார். 007ஐ கிறங்கடிக்கும் வேடம். அதே நேரம் வில்லனான டாக்டர் நோவின் ரகசியக் கையாள் ஆகவும் இந்தப் பெண்ணே இருப்பார். ஜேம்ஸை கொல்வதற்காக தன்னுடைய வீட்டுக்கு அழைப்பார். வில்லனின் ஆட்கள் வரும் வரை ஜேம்ஸை வீட்டில் இருக்கவைக்க, ஜேம்ஸோடு தாரோ ‘இருப்பார்’. புரிகிறதல்லவா? இப்படி போகும் கதை. அந்தப் படத்தில் மூன்றாவது பாண்ட் கேர்ள் கேரக்டர்தான் உருசுலா ஆண்ட்ரஸ் நடித்திருந்த பிரபலமான ஹனி ரைடர். படத்தில் ஹனி ரைடரின் ஓப்பனிங் சீனுக்கு அன்று விசில் அடிக்காத ஆட்களே இல்லை. ஹவாய் பீச்சில் பிகினியில் ஸ்டைலாக அவர் போட்ட நடைக்கு அத்தனை பேரும் அடிமைகள் ஆனார்கள். ஹனியின் அழகை ஜேம்ஸ்பாண்ட் ஒளிந்திருந்து பார்ப்பார். ஜேம்ஸை யதேச்சையாக கவனித்துவிட்ட ஹனி, அவரை மிரட்டும் பாணியில் யாரென்று விசாரிப்பார். ஊடலில் ஆரம்பிக்கும் அன்பு கூடலில்தான் முடியும் என்பது
007 ஃபார்முலா.

ஜேம்ஸ் பாண்ட் பணிபுரியும் நிழல் படையோடு தொடர்புடையவரோ அல்லது வில்லன் குழுவில் பணிபுரிபவராகவோ இல்லாமல் ஒரு சுதந்திரமான பெண் பாத்திரமாக ஹனிரைடர் படைக்கப்பட்டிருந்தார். ஹவாய் தீவில் ஜேம்ஸ் பாண்டுக்கு கைடு மாதிரி உதவுவார் ஹனி. ‘டாக்டர் நோ’ என்பது 007 படமாக இருந்தாலும், 007ஐயே தூக்கி சாப்பிடுமளவுக்கு ஹனி பாத்திரத்தின் மூலமாக உருசுலா ஆண்டர்ஸ் ரசிகர்களை கவர்ந்தார். ‘டாக்டர் நோ’ படத்தில் சித்தரிக்கப்பட்டிருந்த மூன்று பெண் பாத்திரங்களுமே உறுதியானவர்கள், அறிவார்ந்தவர்கள், ‘தாராளமானவர்கள்’ என்கிற தன்மையை உருவாக்கினார்கள். இதுவே பின்னாளில் எடுக்கப்பட்ட 007 படங்களில் தோன்றக்கூடிய பெண் பாத்திரங்களுக்கான பொதுத்தன்மையாக ஆனது.