Sep 22, 2020
இந்தியா

ஆந்திராவில் நட்சத்திர ஓட்டலில் இயங்கிய கொரோனா வார்டில் தீ விபத்து 10 நோயாளிகள் உடல் கருகி பலி: 31 பேருக்கு தீவிர சிகிச்சை

திருமலை: ஆந்திராவில் 5 நட்சத்திர ஓட்டலில் இயங்கி வந்த கொரோனா வார்டில் நேற்று அதிகாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில், பெல் நிறுவன மேலாளர் மற்றும் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 10 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். ஆந்திராவில் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு தனியார் கட்டிடங்களிலும் முகாம் அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஓட்டல்களை வாடகைக்கு எடுத்தும் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அதன்படி, விஜயவாடாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை நிர்வாகம், அதே பகுதியில் உள்ள 5 நட்சத்திர ஓட்டலை வாடகைக்கு எடுத்து கொரோனா வார்டாக மாற்றி சிகிச்சை அளித்து வருகிறது. இந்த ஓட்டலில் 40 நோயாளிகளும், அவர்களுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள், நர்சுகள் மற்றும் ஊழியர்கள் என 10 பேரும் இரவு பகலாக பணியில் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4 மணியளவில் அந்த ஓட்டலின் முதல் தளத்தில் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீ பற்றியது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த தீ மளமளவென முதல் தளம் முழுவதும் பரவியது.
நோயாளிகளும், டாக்டர்களும் அதிர்ச்சி அடைந்து வெளியேற முயன்றனர். ஆனால், கரும்புகை சூழ்ந்து கொண்டதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு நோயாளிகள் அடுத்தடுத்து மயங்கி கீழே விழுந்தனர். மேலும், பலர் மாடியில் இருந்து குதித்து தப்ப முயன்றனர்.

அப்போது, அவ்வழியாக நடைபயிற்சி சென்றவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், காவல்துறை ஆணையர் பத்ரிஸ்ரீனிவாஸ் தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். ஆனால், தீ விபத்து ஏற்பட்ட இடம் கொரோனா வார்டு என்பதால் உள்ளே சென்று மீட்பு பணி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. உடனே, பாதுகாப்பு கவச உடைகள் கொண்டு வரப்பட்டு அவற்றை அணிந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

இந்த தீவிபத்தில் குண்டூர் மாவட்டம், பொன்னூர் மண்டலம் நிடாப்ரோலு கிராமத்தை சேர்ந்த சுவர்ணலதா (42), மசூலிபட்டினம் கிராமத்தை சேர்ந்த டோக்கு சிவபிரம்மயா (59), பெல் நிறுவன மேலாளர், கிருஷ்ணா மாவட்டம், கோடலியை சேர்ந்த பொட்லூரி பூர்ண சந்திரராவ் (80), சுங்கரா பாபுராவ் (80) ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர், மசூலிபட்டினத்தை சேர்ந்த மஜ்ஜிகோபி (54), பிரகாசம் மாவட்டம், கந்துகூரை சேர்ந்த வெங்கட ஜெயலட்சுமி(52), வெங்கட நரசிம்ம பவன்குமார், ஜாக்கய்ய பேட்டாவை சேர்ந்த சபாலி ரத்னா ஆபிரகாம்(48) மற்றும் இவரது மனைவி ராஜகுமாரி, முகலாராஜாபுரம் கிராமத்தை சேர்ந்த மடாலி ரகு உட்பட 10 கொரோனா நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். 31 பேர் ஆபத்தான நிலையிலும், மற்றவர்கள் பத்திரமாகவும் மீட்கப்பட்டனர். அவர்கள் அருகில் உள்ள மற்ற மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர். சம்பவத்தை அறிந்த நோயாளிகளின் உறவினர்கள் ஓட்டல் மற்றும் மருத்துவமனை எதிரே கதறி அழுதபடி திரண்டனர். ஆனால், அவர்கள் யாரையும் அருகில் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை. இந்த விபத்தால் அங்கு சோகம் நிலவியது.

* தப்பிக்க முடியாமல்
பலியான நோயாளிகள்
விபத்து குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘மருத்துவமனை என்றால் சுற்றிலும் காற்றோட்டமான பகுதியாக இருக்கும். சில விதிமுறைகளும் கடைபிடிக்கப்படும். ஆனால், தீ விபத்து நடந்த நட்சத்திர ஓட்டலின் நிலைமை அவ்வாறு இல்லை. அது, காற்றோட்ட வசதி இல்லாமல், முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தது. இதனால், தீ விபத்து ஏற்பட்டதும் உடனடியாக தப்ப முடியாமல் புகையில் சிக்கி நோயாளிகள் இறந்துள்ளனர்,’ என்றனர்.

* தனியார் வார்டுகளை கண்காணிக்க உத்தரவு
இந்த தீ விபத்து சம்பவத்தை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் தனியார் கட்டிடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து தனிமை முகாம்கள், மருந்துவ வார்டுகளை உடனடியாக கண்காணித்து உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார்.

* அடுத்தடுத்து 2 விபத்து
கடந்த 2 நாட்களுக்கு முன்பு குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 கொரோனா நோயாளிகள் உடல் கருகி உயிரிழந்தனர். தற்போது, ஆந்திராவிலும் தீ விபத்தில் 10 பேர் இறந்துள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

* தலா ரூ.50 லட்சம் நிதி
விபத்தில் இறந்தவர்களுக்கு முதல்வர் ஜெகன் மோகன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். மேலும், இறந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும், காயமடைந்தவர்களுக்கு தரமான உயர் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், தீ விபத்து குறித்து விசாரணை நடத்த சிறப்பு குழுவை நியமித்துள்ளார்.