Dec 05, 2020
இந்தியா

வெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கு :பஞ்சாப் முதல்வர் மகனுக்கு சம்மன்; 27ம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை உத்தரவு

புதுடெல்லி, :வெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கு தொடர்பாக பஞ்சாப் முதல்வர் மகன் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது.பஞ்சாப் மாநில ஆளும் காங்கிரஸ் முதல்வர் அமரீந்தர் சிங்கின் மகன் ரணீந்தர் சிங் மீது கடந்த 2011ம் ஆண்டு வெளிநாட்டு நிதி முறைகேடு தொடர்பாக மத்திய நேரடி வரி வாரியம் அளித்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அதாவது, குற்றம்சாட்டப்பட்ட ரணீந்தர் சிங், ஆல்பைன் நேஷனில் விதிமுறைகளை மீறி வங்கிக் கணக்கை வைத்திருப்பதாக வருமான வரித் துறை குற்றம்சாட்டி உள்ளது. விதிமுறை மீறப்பட்டதாகக் கூறப்படும் இவ்வழக்கு பஞ்சாபில் உள்ள நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையே வெளிநாட்டு ஒழுங்குமுறை மேலாண்மை சட்டத்தை (ஃபெமா) மீறியதாக குற்றம் சாட்டப்பட்ட ரணீந்தர் சிங், கடந்த 2016ம் ஆண்டில் அமலாக்கத்துறை முன் ஆஜராகி சில விளக்கங்களை அளித்தார். இந்நிலையில், சட்டவிரோத வெளிநாட்டு நிதி முறைகேடு வழக்கின் அடிப்படையில் ரணீந்தர் சிங் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் வரும் 27ம் தேதி நேரில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக, ரணீந்தர் சிங் மற்றும் அவரது தந்தை கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோர் கூறுகையில், ‘எந்தத் தவறும் செய்யவில்லை. எங்களுக்கு எதிராக தவறான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது’ என்று தெரிவித்தனர்.