May 22, 2022
கோலிவுட் செய்திகள்

ஒரு படத்துக்காக 40 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம்

சண்டியர் படத்தில் நடித்த ஜெகன் நடித்து, தயாரித்துள்ள படம் துரிதம். ஈடன், ஏ.வெங்கடேஷ், பாலசரவணன், பூ ராமு, ராம்ஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். புதியவரான நரேஷ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விஜய் மில்டனின் உதவியாளராக பணியாற்றிய வாசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். எச்.வினோத்தின் உதவியாளர் சீனிவாசன் இயக்கி உள்ளார். படம் பற்றி அவர் கூறியதாவது: இதுவரை தமிழ் சினிமாவில் பல ரோட் மூவிக்கள் வந்திருந்தாலும் அவை எதுவும் தமிழகத்தை மையப்படுத்தி வெளியானது இல்லை. ஆனால் முதன்முறையாக தமிழ்நாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் துரிதம்.  

கதையின் நம்பகத் தன்மைக்காக தமிழ்நாட்டில், அதுவும் கதை நிகழும் சம்பந்தப்பட்ட ஊர்களுக்கே பயணப்பட்டு மொத்த படப்பிடிபையும் நடத்தியுள்ளோம். கிட்டத்தட்ட 65 நாட்கள் இந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இதற்காக தமிழகத்துக்குள்ளேயே 40 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து சாலைகளில் மட்டுமே பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பை நடத்தியுள்ளோம். எல்லோருக்குமே தாங்கள் செய்யும் விஷயங்கள் அவர்கள் கண்ணோட்டத்தில் சரி என்பது போலத்தான் தெரியும்.. ஆனால் அடுத்தவர்கள் பார்வையில் அது தவறாக தெரிய வாய்ப்பு உண்டு. இந்த கருத்தை மையப்படுத்தி உண்மையில் நடந்த சம்பவம் ஒன்றை தழுவி உருவாகி உள்ளது. என்றார்.