Aug 04, 2020
அரசியல்

மறைமுக தேர்தல் மூலமாக ஜனநாயகத்தை படுகொலை செய்தவர்களை வேரடி மண்ணோடு வீழ்த்த வேண்டும்: மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்

சென்னை: “மறைமுகத் தேர்தல் மூலமாக ஜனநாயகத்தை  படுகொலை செய்து பச்சை ரத்தம் பரிமாறுகின்ற ஆட்சியாளர்களை நேரடியாகவும், வேரோடும் வேரடி மண்ணோடும்  வீழ்த்திட வேண்டும்” என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் புறக்கணித்த ஆளுநர் உரையில் இடம் பெற்றிருப்பதைத்தான் முதல்வர் தனது பதிலுரையில் தெரிவிக்கப் போகிறார். தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் அந்த உரையைவிட, தங்களை இயக்கத்திற்கு அர்ப்பணித்துக் கொண்டு கொள்கை வளர்க்கும் இத்தகைய தோழர்கள் நிறைந்திருக்கும் திருமண விழாவில் பங்கேற்பது பலனளிக்கக்கூடியது என்பதால் தான் அந்தமான் நிகழ்வில் பங்கேற்றேன்.

மணவிழாவை நடத்தி முடித்த பிறகு, அந்தமானில் உள்ள வரலாற்றுப் புகழ்மிக்க செல்லுலார் சிறைச்சாலையைப் பார்வையிடச் சென்றேன். எத்தனையெத்தனை வீரத் தியாகிகள் தங்கள் சொந்தச் சுகத்தை மறந்து, இந்தியத் திருநாட்டின் விடுதலைக்காக இந்த சிறையில் சித்திரவதைகளை அனுபவித்தார்கள் என்பது நினைவுக்கு வந்தது. சிறைச்சாலையைப் பார்வையிடுவதற்காக குடும்பத்தினர் -நண்பர்களுடன் கூட்டமாக வந்திருந்த தமிழகம், ஆந்திரா மற்றும் வடநாட்டை சேர்ந்தவர்கள் என்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ள விரும்பினர். அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றிய போது, திமுகவை ஆதரித்தும் என்னை வாழ்த்தியும், உள்ளன்புடன் முழக்கங்களையும் எழுப்பினர். தமிழகத்தில் திமுக ஆட்சி மிக விரைவில் அமையும் என்பதுதான் அவர்களின் வாழ்த்தொலி.

 அந்தமானில் கலைஞர் சிலையினை அமைப்பதற்கு தோழமைக் கட்சியினரும் நிதியுதவி அளித்து தங்களின் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்.  விரைவில் நடைபெறவுள்ள அந்தமான் உள்ளாட்சித் தேர்தலில் திமுக தோழர்கள் களப்பணியாற்றி, மக்களின் ஆதரவைப் பெற்று, மகத்தான வெற்றியைக் கழகத்திற்குப் பெற்றுத்தர வேண்டும் என்பதையும் எடுத்துரைத்தேன்.  பொதுக்கூட்டம் முடியும் தருவாயில் அந்தமான் திமுக சார்பில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு திருவாரூரில் அமைக்கப்படும் அருங்காட்சியப் பணிகளுக்கு ஐந்து லட்ச ரூபாய் நிதியாக வழங்கினர். நான் அந்தமானில் இருந்தவரை என்னிடம் கழகத் தோழர்கள் அனைவரும் கூறியது “முத்தமிழறிஞர் கலைஞரின் காலடி எப்பொழுதாவது அந்தமானில் பட வேண்டுமென்று எண்ணினோம். ஆனால், அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், இனி அவர் சிலையாய் இருந்து எங்களை வழி நடத்துவார்” என உணர்வுப்பூர்வமாக தெரிவித்தனர்.

1191 கடல் மைல்களுக்கு அப்பாலும் ஒளிரும் கன்னித் தமிழ்த் தலைவர் கலைஞரின் புகழ் கண்டு களிபேறுவகை கொண்டேன். ஊக்கத்துடனும் உத்வேகத்துடனும் செயல்படும் அந்தமான் கழகத்தினரின் உழைப்பும், அந்தமான் தமிழர்கள் தலைவர் கலைஞர் மீது வைத்துள்ள பற்றும், உங்களில் ஒருவனான என் மீது காட்டுகின்ற உயர்வான அன்பும் கரையைத் தாலாட்டும் அலைகள் போல, இதயத்தின் கரைகளில் மோதி எதிரொலி எழுப்பிக் கொண்டே  இருக்கின்றன. அவை மேலும் அதிகமாக உழைத்திடவும், மறைமுகத் தேர்தல் மூலமாக ஜனநாயகத்தைப் படுகொலை செய்து பச்சை ரத்தம் பரிமாறுகின்ற ஆட்சியாளர்களை நேரடியாகவும், வேரோடும் வேரடி மண்ணோடும் வீழ்த்தி, தமிழகத்தை காலத்தே மீட்டிடும் வலிமையைப் பன்மடங்கு பலப்படுத்தவும், உறுதிமிக்க  உந்துசக்தியாக அமைந்துள்ளன என்றால் மிகையில்லை. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

'பொங்கல் விடுமுறை நாளில் இந்தி மொழி பயன்பாடு குறித்த ஆய்வு நடத்துவதா?'
திமுக தலைவரும்-சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின், தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்களில் “இந்தி மொழிப் பயன்பாடு” குறித்து ஆய்வு செய்ய, மத்திய நாடாளுமன்ற ஆட்சி மொழிக் குழு பொங்கல் திருநாள் கொண்டாடப்படும் ஜனவரி 14, 15, 16 ஆகிய தேதிகளில் வருவது கடும் கண்டனத்திற்கு உரியது.தமிழர்களின் தன்மான உணர்வுக்கும், மொழி உணர்வுக்கும், கலாச்சார மற்றும் பண்பாட்டு உணர்வுக்கும் மதிப்பளித்து, பொங்கல் விடுமுறை நாட்களில் நடைபெறும் இந்த ஆய்வை ரத்து செய்து, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலக ஊழியர்கள் நிம்மதியாக பொங்கல் திருநாளைக் கொண்டாட வழிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.