Oct 17, 2021
கர்ப்பகாலம்

ஆயுர்வேதம் கூறும் சுகப்பிரசவத்திற்கான வழிமுறைகள்

நன்றி குங்குமம் தோழி

கர்ப்ப காலத்தில் கடைபிடிக்க வேண்டியவை  பொதுவான வழிமுறைகள் கர்ப்பம் தரிப்பதற்கு ரிது (காலம்), ஷேத்திரம் (கர்ப்பப்பை), அம்பு (உயிரோட்டம்) மற்றும் பீஜம் (சினை முட்டை மற்றும் விந்தணு) ஆகியவை சிறந்த செயலாற்றல் பெற்றிருக்க வேண்டும் என்பதை இதற்கு முன்னர் பார்த்தோம். ஆயுர்வேதத்தில் ஆண்-பெண் இருபாலரும் திருமணம் நிச்சயித்த பின் உடல் சுத்திகளை செய்துகொண்டு இல்வாழ்க்கையில் ஈடுபடும் போது அது ஒரு ஆரோக்கியமான கர்ப்பத்திற்கும் சுகப்பிரசவத்திற்கும் வழிவகுக்கும். கர்ப்பம் தரிப்பதற்கு முன்பாகவோ அல்லது இல்வாழ்க்கையில் ஈடுபடும் முன்னதாகவோ சில விஷயங்களை நாம் கவனித்துக் கொள்வது முக்கியம். அவை,

*பெண் குறைந்தது இருபத்தியோரு வயதை அடைந்திருக்க வேண்டும்.  

*தனது உயரத்திற்கு தகுந்தவாறு ஆரோக்கியமான எடையை பெற்றிருப்பதும், பராமரித்தலும் அவசியம்.

*உடலில் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம், Hepatitis B, Rubella, சிறுநீர் தொற்றுநோய் போன்றவை உள்ளதா என்று அறிந்து கொள்ள வேண்டும்.

*வலிப்பு நோய், இதயநோய், தைராய்டு குறைபாடு, சர்க்கரை நோய் போன்றவை இருந்தால்  ஆரம்பத்திலேயே சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக்கொள்வது  நல்லது.

*மனச்சோர்வு, படபடப்பு, பதட்டம் இருந்தால் அவைக்கு தீர்வு காண வேண்டும்.  

*புகை பிடிப்பது, மது அருந்துதல், தேவையில்லாத மருந்துகள் எடுத்துக் கொள்வது ஆகியவற்றைத்  தவிர்க்க வேண்டும்.

*தனது குடும்பத்திலோ கணவர் குடும்பத்திலோ ஏதாவது மரபணு சார்ந்த வியாதிகள் இருக்குமாயின் தகுதி வாய்ந்த மகப்பேறு மருத்துவரை சந்தித்து உரிய ஆலோசனை பெற வேண்டும்.

*பெண்கள் மனஅழுத்தம் இல்லாமலும், ஆரோக்கியத்துடன் இருக்க அவர்களைச் சுற்றியுள்ள உறவினர்கள் நன்றாக பார்த்துக்கொள்வது மிக அவசியம்.

கர்ப்பம் தரித்ததற்கான அறிகுறிகள்

மாதவிடாய் நின்று போதல், குமட்டல் மற்றும் வாந்தி, மார்பகத்தில் வலி, சிறுநீர் அடிக்கடி அவசரமாக போகுதல், வெள்ளைப்படுதல், மார்பகத்தில் வரும் மாற்றங்கள், முலைக்காம்பில் நீர் வடிதல், இதைத் தவிர ரத்தத்திலும் சிறுநீரிலும் பீட்டா ஹெச்.சி.ஜி (Beta HCG Level) என்னும் ஹார்மோன் அளவை வைத்தும் கர்ப்பப்பையை  ஸ்கேன் செய்தும் கர்ப்பம் தரித்ததை நாம் அறிந்து கொள்ளலாம். அதே போல் கருவின் வளர்ச்சி, இதய துடிப்பு, ரத்த ஓட்டம், நஞ்சுக்கொடி தன்மை, உறுப்புகள் வளர்ச்சி, சத்துக்குறைபாடு போன்றவை இருந்தாலும்  ஸ்கேன் மூலம் தெரிந்து கொள்ளலாம். குழந்தைக்கு ஏதேனும் நோயோ அல்லது மரபணு குறைபாடுகளோ உள்ளதா என்பதை NT SCAN, AFP, PAPP-A ஆகியவற்றின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

பொதுவான வழிமுறைகள்  

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணி, சிறந்த சமச்சீரான, ஆறு சுவையுடன் கூடிய, ஊட்டச்சத்தான, எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய,  உடலுக்கு நன்மையை கொடுக்கும் உணவுகளையே உட்கொள்ள வேண்டும். கருவின்‌ இதயம் ‌தாயிடமிருந்து உண்டானதாகும்‌. இது தாயின் ‌இதயத்துடன்‌பிணைக்கப்பட்டுள்ளது. ஆகையால்‌ கர்ப்பிணியின்‌விருப்பத்தை அலட்சியம்‌செய்வது தகாது என்றும் அனைத்து ஆசைகளும் நிறைவேற்றப்பட்டுவிட்டால் குழந்தை வீர்யமுடன் ‌நீண்ட ஆயுள்‌உடையதுமாக  பிறக்கும் என்றும் ஆயுர்வேதம் கூறுகிறது.  

முதல் மாதம் முதல் ஒன்பதாவது மாதம் வரை தொடர்ச்சியாக சிசு வளர்ச்சிக்கு சுண்ணாம்பு சத்து தேவைப்படுவதால் ஆயுர்வேதம் பால், பால் சார்ந்த உணவுகளான வெண்ணெய், நெய், மோர், பனீர் ஆகியவற்றை தொடர்ந்து அறிவுறுத்துகிறது. கூடவே தினமும் இருபது நிமிடமாவது இளவெயிலில் நிற்பது வைட்டமின் டி சத்தை உடம்புக்கு தந்து நாம் சாப்பிடும் உணவிலுள்ள சுண்ணாம்பு சத்தை உடம்பில் தக்கவைத்து அது குழந்தைக்கு போய் சேர உதவுகிறது.

சிசு வளர்ச்சியில் அடுத்து முக்கியமாக தேவைப்படுவது இரும்பு மற்றும் ஃபோலிக் ஆசிட் சத்து. ஆகவே மாதுளம், கருப்பு திராட்சை, செவ்வாழை, தக்காளி, நெல்லிக்காய், கொய்யா, பேரீச்சம்பழம், அத்திப்பழம், சர்க்கரைவள்ளிக்கிழங்கு, முருங்கைக்காய், கீரைவகைகளில் முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பொன்னாங்கண்ணி, சிறுகீரை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி, புதினா, வெங்காய தழைகள், முள்ளங்கி தழைகள் ஆகியவை உணவில் எப்போதும் இருக்க வேண்டும்.

மேலும் பாசி பருப்பு, பட்டாணி, முளைத்த பச்சை பயறு, முளைத்த வெந்தயம், பாதாம், முந்திரி, வேர்க்கடலை, வெல்லம் ஆகியவை எப்பொழுதும் கர்ப்பிணி உணவில் இருக்க வேண்டும். மாமிசத்தில் முட்டை, சூப், கொழுப்பில்லாத கறி ஆகியவை கொடுக்கலாம். குடிக்கும் தண்ணீரில் எப்பொழுதும் ஒரு ஜீரண வஸ்து சேர்த்து காய்ச்சி குடிப்பதே நல்லது. அவ்வாறு தினமும் சிறிது சீரகமோ சோம்போ பெருங்காயமோ ஓமமோ சேர்த்து காய்ச்சி குடிக்க வாத அனுலோமனம் நடப்பதால் சீரணம் என்றும் பாதிக்காமல் தாய் சாப்பிடும் அனைத்து ஊட்டச்சத்துக்களும் தாய்க்கும் சேய்க்கும் கிடைக்க உதவும். குங்குமப்பூவை லேசாக வறுத்துப்‌பொடித்து வைத்துக்கொண்டு இதைச்‌ சிறிதளவு காய்ச்சியப்‌ பசும்பாலில்‌ கலந்து கர்ப்பிணியானவள் ‌தினந்தோறும் ‌பருகுவது பிறக்கப்‌ போகும்‌ குழந்தைக்கு ‌நல்ல நிறத்தையும் பிரசவம் எளிதாக ஆகுவதற்கும் உதவும்‌.

இல்வாழ்க்கை (குறிப்பாக முதல் மற்றும் கடைசி 3 மாதங்கள்), கடுமையான உழைப்பு, கோபம், பதட்டம், மனச்சோர்வு, சோகம், அதிகமாக தொலைக்காட்சி பார்ப்பது, நீண்ட தூர பயணம், அதிக பளு தூக்குதல் ஆகியவை தவிர்க்க வேண்டும்.  நல்ல கதை புத்தகங்கள், இலக்கியங்கள் படிப்பது, இசைகள் கேட்பது,  மனதிற்கும், உடலிற்கும் மகிழ்ச்சி தரக்கூடிய பிடித்தமான செயல்களை  செய்வது, இறை வழிபாடு, எப்போதும் நல்லவற்றையே சிந்திப்பது ஆகியவை குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்க உதவும்.  தாய் மற்றும் உறவினர்கள் கருவில் உள்ள குழந்தையிடம் அடிக்கடி பேசவேண்டும் அது கருவில் உள்ள குழந்தைக்கு ஊக்கத்தை தரும்.

சுகப்பிரசவத்திற்குப் பெண்களின் இடுப்பெலும்பு விரிந்து கொடுப்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்காக பெண்கள் கருவுற்ற காலத்தில் இருந்து குனிந்து வேலை செய்வது, தரையில் அமர்ந்து எழுவது போன்றவை செய்வது நல்லது. ஒரே இடத்தில் அமர்ந்தே வேலை செய்யும் பெண்கள் தினமும் கட்டாயம் நடைப்பயிற்சி செய்தே ஆக வேண்டும். தினமும் காலையில், முக்கால் மணி நேரம் மூச்சு இரைக்காதவாறு மெதுவாக நடக்கலாம். அதை தவிர மூச்சுப் பயிற்சி, தியானம், ஆசனங்கள் ஆகியவை மருத்துவர் மாதந்தோறும் கூறும் அறிவுரைப்படி  தவறாமல் கடைபிடிக்க வேண்டும்.

மாதாமாதம் கடைபிடிக்க வேண்டிய உணவு மற்றும் வாழ்க்கை முறைகள்

ஆயுர்வேதத்தில் கர்ப்பிணிக்கான உணவுகளும், மருந்துகளும் வாழ்க்கை முறைகளும் மிகவும் விரிவாக  விளக்கப்பட்டுள்ளன. இவை அக்னி தீபனமாகவும், பிரம்ஹனமாகவும், வாத அனுலோமனமாகவும் ரத்த பிரசாதமாகவும் இருப்பது மிகவும் நன்று.

முதல் மாதம்

முதல் மூன்று மாதங்கள் தன்னிச்சையாக கருக்கலைப்பு நடக்க வாய்ப்புள்ளதால் மிகுந்த கவனமுடன் இருக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களில் வாந்தி, குமட்டல் இருந்தால்...

*ஏலக்காய் விதைகளை வறுத்து, பொடி செய்து, நாள் முழுவதும் சிறிய அளவில் மெல்லலாம்.
*இஞ்சி மற்றும் பெருஞ்சீரகம் சேர்த்து தேனீர் போட்டு குடிக்க நல்ல பலனைத்தரும்.

அதிமதுரப் பொடியை தேனுடனும் வெண்ணையுடனும் சேர்த்து சாப்பிட்டு, பின் பாலுடன் சர்க்கரையோ அல்லது மூவிலை சேர்த்து காய்ச்சிய நெய்யயோ  அல்லது குறுந்தொட்டி வேர் பால் கசாயமோ கொடுக்க தாய்-சேய் நலம் காக்கலாம்.

இரண்டாம் மாதம்

இரண்டாவது மாதத்தில் இனிப்பு சுவையுள்ள, குளிர்ச்சியான, நீர் சேர்ந்த உணவுகளை கொடுக்க வேண்டும். விதார்யாதி பால் கஷாயம் கொடுக்க கர்ப்பத்தை தக்கவைத்து சிசுவுக்கும் தாய்க்கும் நல்ல பலத்தைக் கொடுக்கும். திருதாளி பால் கசாயம் கொடுக்கலாம்.

மூன்றாவது மாதம்

மூன்றாவது மாதத்தில் உளுந்தங்களி, பால் சாதம், பாலில் தேன் மற்றும் நெய் கலந்து கொடுக்கலாம். குமட்டல், வாந்தி அதிகமாக  வாய்ப்புள்ளதால் அத்தகைய காலகட்டத்தில் தேன் ஒரு சிறந்த ஊட்டச்சத்து உணவாகவும் குமட்டல், வாந்தியை கட்டுப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுத்தலாம். மேலும் குமட்டல் உள்ளபோது காலையில் இஞ்சி காபி, சுக்கு மல்லி காபி, இஞ்சி எலுமிச்சை வரக்காபி குடிக்கலாம். சுக்கை சிறு சிறு துண்டுகளாக வாயில் அடக்கி மெல்லலாம். அடிக்கடி மாதுளம் பழச்சாறுடன் சிறிது எலுமிச்சைச் சாறு, தேன் சேர்த்து குடிக்கலாம். நடைமுறையில் கர்ப்பிணிக்கு மூன்றாவது மாதத்தில் விதார்யாதி நெய்யோ பால் கஷாயமோ கொடுப்பது மரபு.  

நான்காவது மற்றும் ஐந்தாவது மாதம்

நான்காவது மாதத்தில் கர்ப்பிணியை தௌஹிரிதீணி என்கிறது ஆயுர்வேதம்,  இதற்கு அர்த்தம் ஒரே உடம்பில் இரு இதயம் என்பதாகும். இந்த மாதத்தில் சிசுவானது அதன் ஆசைகளை தாயின் மூலம் வெளிப்படுத்துவதால் இங்கு தாய்-சேய் இருவருடைய ஆசைகளும் வெளிப்படும். இங்கு பால் மற்றும் வெண்ணையை முக்கியமான மருந்தாக ஆயுர்வேதம் கூறுகிறது, மாமிசத்தில் ஆட்டுக்கறியை இந்த காலகட்டத்தில் கொடுக்கலாம். சீரகம், சோம்பு, இஞ்சி, ஏலக்காய் ஆகியவை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஐந்தாவது மாதத்தில் அரிசி கஞ்சியையும் அரிசியுடன் பால், சர்க்கரை, நெய் சேர்த்து செய்த பாயசத்தையும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. சீந்தில் கொடி பால் கசாயமும் குடுக்கலாம். நான்காவது மாதத்திலிருந்து புரதச்சத்து மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக தேவைப்படுவதால் தினமும் பச்சை பட்டாணி, கறுப்பு பட்டாணி, கீரைகள், சோயா பீன்ஸ், அக்ரூட், எள்ளு, முட்டை, கோழி, முள்ளுள்ள செதிலுள்ள மீன்கள், வேர்க்கடலை, பாதாம் பருப்பு, அவரைக்காய், முளை கட்டிய தானியங்கள், சோளம், உளுந்து சேர்க்க வேண்டும். நான்காவது மாதத்திலிருந்து ஆறாவது மாதம் வரை குறுந்தொட்டி அல்லது ஓரிலை வேர் பால் கசாயம் குடுக்கலாம்.

ஆறாவது மாதம்

ஆறாவது மாதத்தில் வைட்டமின் ‘ஏ’ சத்து சிசுவிற்கு ஆரோக்கியமான தோலையும், செல்கள் வளர்ச்சிக்கும், சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் வழிவகுக்கின்றன எனவே கேரட், சர்க்கரை வள்ளி கிழங்கு, கீரைகள், பால் வெண்ணை, முட்டை வெள்ளைக்கரு ஆகியவை கொடுக்கலாம். ஆறாவது மாதம் முதல் தாடிமாதி  நெய்யும், சுண்டை வேர் பால் கசாயமும் கொடுக்கலாம்.

ஏழாவது மாதம்

ஆறாவது மற்றும் ஏழாவது மாதங்களில் நெருஞ்சி முள் சேர்த்து சமைத்த கஞ்சியையும் நெருஞ்சி முள் மற்றும் மதுர வர்க திரவியங்களின் நெய்யையும் ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. ஆறாவது மாதத்தில் பெண்களுக்கு காலில் வீக்கமும், உடம்பில் நீரும், சிறுநீர் தொற்று நோயும், மலச்சிக்கலும், மூலநோயும் வர வாய்ப்புள்ளதால் நெருஞ்சி முள்ளினாலான இவ்வகை உணவு மற்றும் மருந்துகள் உடம்பில் உள்ள தேவையில்லாத நீரைப் போக்கி அதன் மூலம் வரும் உபாதைகளை தடுக்கின்றது, தண்ணீர் அடிக்கடி பருகிக் கொண்டே இருக்க வேண்டும்.

கருவின் அளவு அதிகரிப்பதால் தாய்மார்கள் மார்பகத்திலும் அடிவயிற்றிலும் அரிப்பு உணர்வை உணரலாம் அல்லது மார்பு அல்லது தொண்டையில் எரியும் உணர்வையும் உணரலாம், இது இயற்கையே, இதனால் கவலை கொள்ள தேவையில்லை. தேங்காய் எண்ணெய் தடவினாலே போதுமானது அல்லது சுத்தமான விளக்கெண்ணெய் இருந்தாலும் பயன்படுத்தலாம்.

சிறிய அளவில் உணவை அடிக்கடி சாப்பிடவும். சிறிது நெய், மோர்  சேர்க்கலாம். உப்பை குறைக்கவும். உணவு உண்டபின் உடனேயே தண்ணீர் குடிப்பதைத் தவிர்க்கவும்.

எட்டாவது மாதம்

எட்டாவது மாதத்தில் குழந்தை அதிகமாக எடை கூட வேண்டும். எனவே ஊட்டச்சத்துக்களை அதிகமாக எடுத்துக்கொள்ள வேண்டும். எட்டாவது, ஒன்பதாவது பீச்சு எனப்படும் ஆயுர்வேத முறையில் தான்வந்தர தைலம் 50 மி.லி. உணவுக்குப்பின் ஆசனவாய் மூலம் செலுத்துதல், ஆட்டு இறைச்சி சூப்பு குடித்தல் ஆகியவை பலன் கொடுக்கும்.

யோனி பீச்சு என்ற முறையில் தான்வந்திர தைலத்தை பஞ்சில் தொட்டு பெண் பிறப்புறுப்பில் அவ்வப்போது வைத்து வர கருப்பை வாய் மென்மையாகி சுகப்பிரசவத்திற்கு வழிவகுக்கும்.

ஒன்பதாவது மாதம்

இறைச்சி சூப், காய்கறி சூப், கஞ்சி அல்லது எளிதில் செரிக்கக் கூடிய திரவ உணவுகள் போன்றவை எடுத்துக் கொள்வதால் அஜீரணம், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றை தவிர்க்கலாம். தண்ணீர்விட்டான் கிழங்கு பால் கசாயம் கொடுக்கலாம்.  மேற்கூறிய அனைத்தும் பின்பற்றுவதற்கு எளிமையான முறைகளே ஆகும். இவற்றைக் கடைப்பிடித்தாலே ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுக்கலாம்.

ஆக கர்ப்ப காலத்தில் பொதுவாக நாம் கடைபிடிக்கவேண்டிய வழிமுறைகள் மற்றும் உணவு முறைகளை இந்த இதழில் பார்த்தோம் மேலும் கர்ப்ப காலத்தில் வரக்கூடிய வியாதிகளான மசக்கை, ரத்தசோகை, உயர் ரத்த அழுத்தம், நெஞ்செரிச்சல், அல்சர், மலச்சிக்கல், மூலம் போன்ற வியாதிகள் பற்றியும் அவற்றின் ஆயுர்வேத மருத்துவ முறைகள் பற்றியும் அடுத்த இதழில் விரிவாக காணலாம்.

தொகுப்பு: உஷா நாராயணன்