Dec 07, 2021
கர்ப்பகால கவனிப்பு

கர்ப்பிணிக்கு வரும் காய்ச்சல்

கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிக்கு காய்ச்சல் வருவது இயல்பானது. காய்ச்சல் என்பது ஒரு நோயின் அறிகுறியே தவிர, அதுவே நோயல்ல. எனவே, காய்ச்சலுக்குக் காரணம் தெரிந்து சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். கர்ப்பிணிகள் எக்காரணத்தைக் கொண்டும் காய்ச்சலுக்கு சுய மருத்துவம் செய்து கொள்ளக் கூடாது. அதிலும் முக்கியமாக, கர்ப்பமான முதல் மூன்று மாதங்களில் மருத்துவர் சொல்லாமல் எந்த மருந்தையும் எடுத்துக் கொள்ளக் கூடாது.

வைரஸ் காய்ச்சல்

பொதுவாக, கர்ப்ப காலத்தில் தடுமம், மூக்கு ஒழுகுதல் மற்றும் சளி பிடித்து காய்ச்சல் வருவதுதான் அதிகம். அப்போது இருமலும் சேர்ந்து கொள்ளலாம். வைரஸ் கிருமிகளால் ஏற்படும் இந்தக் காய்ச்சல் ஒரு வாரத்தில் தானாகவே குணமாகிவிடும். நோய் எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், ரத்தசோகை போன்ற வேறு பிரச்னை இருப்பவர்களுக்கு மட்டும் காய்ச்சல் சில நாட்களுக்கு நீடிக்கலாம்.

இந்தக் காய்ச்சலுக்கு ஆன்டிபயாடிக் மருந்து தேவை இல்லை. பாராசிட்டமால் மருந்தும் தடுமத்துக்கான மருந்தும், இருமலுக்கு மருந்தும் சாப்பிட்டால், குணமாகிவிடும். உடல்வலிக்கும் மாத்திரை உதவும். கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் காய்ச்சல் அதிகமாக இருக்கக் கூடாது. ஆறு மணி நேரத்துக்கு ஒரு முறை பாராசிட்டமால் மாத்திரையை எடுத்துக் கொள்வதும், உடலை ஈரத்துணியால் அடிக்கடி துடைத்துக்கொள்வதும் காய்ச்சலைக் குறைக்க உதவும்.

இருமலில் அதிக அளவில் சளி வந்தால், மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்ள வேண்டும். சைனஸ் பிரச்னை உள்ளதா என்றும் பரிசோதித்துக் கொள்ள வேண்டும். அப்படி இருந்தால், அதற்கு ஆன்டிபயாடிக் மருந்து தேவைப்படும். சாதாரண வைரஸ் காய்ச்சலுக்குப் பயப்படத் தேவையில்லை. கருவில் வளரும் குழந்தையை அது பாதிக்காது.

என்ன முதலுதவி?


இந்தக் காய்ச்சலின்போது உடல் சோர்வு அதிகம் படுத்தும். எனவே, அதிக அளவில் திரவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். சூடான பால், காபி, தேநீர் குடிக்கலாம். பழச்சாறுகள் அருந்தலாம். வழக்கமான உணவை உண்ணலாம். வெந்நீரில் அடிக்கடி வாயைக் கொப்பளிப்பது, முகத்தைத் துடைத்துக் கொள்வது போன்றவற்றின் மூலம் உடலை உற்சாகப்படுத்திக் கொள்ளலாம்.

நீராவி பிடித்தால் மூக்கடைப்பு நீங்கும்; தலைவலி குறையும்.
தலையணைகளை அதிகப்படுத்திக் கொண்டு, தலையை சற்று உயர்த்திய நிலையில் படுத்தால், சுவாசிப்பதுசுலபமாக இருக்கும். மென்தால் கலந்த மாத்திரைகளை சுவைத்துக் கொண்டால், தொண்டை கரகரப்பு குறையும்;இருமலும் கட்டுப்படும்.

மார்புச் சளிக்காய்ச்சல்

சமயங்களில் தடுமம் கடுமையாகி, மார்பிலும் சளி பிடித்துக் கொள்ளலாம். அப்போது சளி மஞ்சள் நிறத்திலோ, பச்சை நிறத்திலோ வெளியேறலாம். பாக்டீரியா தொற்றால் இப்படிச் சளி வருகிறது என உங்கள் மருத்துவர் கருதினால், ஆன்டிபயாடிக் மருந்து கொடுப்பார். குறைந்தது ஒரு வாரம் அதைச் சாப்பிட வேண்டும். சிசுவுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத ஆன்டிபயாடிக் மருந்துகள் இப்போது நிறையவே உள்ளன. எனவே, மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளைச் சாப்பிடத் தயங்க வேண்டாம்.

டைபாய்டு காய்ச்சல்

சால்மோனல்லா டைபை(Salmonella typhi) எனும் பாக்டீரியா கிருமியின் பாதிப்பால் டைபாய்டு காய்ச்சல் வருகிறது. அசுத்த உணவு மற்றும் குடிநீரால் இது பரவுகிறது. சுகாதாரமற்ற கழிப்பறைகள் மூலமும் இது பரவுவது உண்டு.

அறிகுறிகள் என்ன?

முதல் நாளில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, சோர்வு ஏற்படும். அடுத்த நான்கு நாட்களில் காய்ச்சலும் தலைவலியும் படிப்படியாக அதிகரிக்கும். முக்கியமாக, இரவில் காய்ச்சல் அதிகமாக இருக்கும். உடல் வலி கடுமையாகும். பசி குறையும். வாந்தி வரும். வயிறு வலிக்கும். உடல் சோர்வடையும். வயிற்றுப்போக்கு தொல்லை தரும். சிலருக்கு மலச்சிக்கல் ஏற்படலாம்.

இந்தக் காய்ச்சலை உறுதி செய்ய காய்ச்சல் ஏற்பட்ட ஆறாம் நாளில் ரத்தப்பரிசோதனை செய்ய வேண்டும். அதற்கு முன்னால் பரிசோதித்தால் முடிவு தவறாகிவிடலாம். இதைக் குணப்படுத்த மாத்திரைகளுக்குப் பதிலாக ஊசி மருந்து நல்ல பலன் தரும். ஒரு வாரத்திலிருந்து இரண்டு வாரங்கள் வரை இந்தச் சிகிச்சை தேவைப்படும்.

என்ன உணவு கொடுப்பது?

ஒரு வாரத்துக்குத் தொடர்கிற காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்கு காரணமாக உடலில் நீர்ச்சத்து வற்றிவிட அதிக வாய்ப்புண்டு. இந்த நிலைமை நீடித்தால், அது கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். இதைத் தடுக்க நிறைய தண்ணீர் அருந்த வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி எளிதில் செரிமானமாகிற அரிசிக்கஞ்சி, கோதுமைக்கூழ், ஜவ்வரிசிக்கஞ்சி, ஆரஞ்சு, ஆப்பிள், தக்காளி, எலுமிச்சை, மாதுளை, திராட்சைப் பழச்சாறுகள், பால், இளநீர், குளுக்கோஸ், தண்ணீர்ச்சத்துமிக்க பழங்கள் மற்றும் ரொட்டி, பிஸ்கட்டுகள் ஆகிய உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

தொடர்ந்து மூன்று நாட்களுக்கு மேல் காய்ச்சல் இல்லையென்றால் திரவ உணவுகளைக் குறைத்துக் கொண்டு, திட உணவுகளை அதிகப்படுத்தலாம். நீராவியில் தயாரிக்கப்படும் இட்லி, இடியாப்பம், புட்டு ஆகியவை நல்லது. ஒரு வாரத்துக்குப் பிறகு வழக்கமான உணவுகளை உண்ணலாம். இறைச்சி,  மீன், முட்டை போன்ற அசைவ உணவுகளை மூன்று வாரங்களுக்குப் பிறகு சாப்பிடலாம். அடிக்கடி கைகளையும் முகத்தையும் நன்கு கழுவிக்கொண்டால் அடுத்தவர்களுக்கு இந்த நோய் பரவாது.

மலேரியா காய்ச்சல்

‘பிளாஸ்மோடியம்’ என்னும் கிருமிதான் மலேரியாவுக்கு மூல காரணம். இக்கிருமிகள் பெண் அனாபிலிஸ் கொசுக்களிடம் வசிக்கின்றன. இக்கொசுக்கள்.

நம்மை இரவு நேரத்தில் கடிக்கும்போது கொசுக்களின் உமிழ்நீர் வழியாக மலேரியா கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்துவிடும். பின்பு, அவை ரத்தத்தில் கலந்து கல்லீரலுக்குச் செல்லும்; அங்கு ஒரு வாரம் வரை தங்கி கோடிக்கணக்கில் வளர்ந்து பெருகும். பிறகு, அங்கிருந்து ரத்தத்துக்கு வந்து சிவப்பணுக்களை அழிக்கும். அப்போது காய்ச்சல் ஏற்படும்.

அறிகுறிகள் என்ன?

மலேரியா காய்ச்சலில் 3 கட்டங்கள் உண்டு. முதல் கட்டத்தில் காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு உண்டாகும். இதனைத் தொடர்ந்து குளிர்க்காய்ச்சல் ஏற்படும். உடல் வெடவெடவென நடுங்கும். இரண்டாவது கட்டத்தில் உடல் நடுக்கம் குறைந்து, காய்ச்சல் கடுமையாகி, உடல் அனலாய் கொதிக்கும். மூன்றாம் கட்டத்தில் காய்ச்சல் குறைந்து வியர்வை கொட்டும். உடல் ஐஸ்போல் குளிர்ந்துவிடும். பிறகு, இதே மாதிரியான காய்ச்சல் மறுநாளோ, ஒரு நாள் விட்டு ஒருநாளோ மீண்டும் அதே நேரத்தில் வந்து தொல்லை கொடுக்கும்.

பாதிப்புகள் என்ன?

மலேரியாவுக்கு ஆரம்பத்திலேயே சிகிச்சை பெறத் தவறினால் பல ஆபத்துகள் அணிவகுக்கும். ரத்தசோகை ஏற்பட்டு உடல் தளர்ச்சி உண்டாகும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து, அடிக்கடி ஏதாவது ஒரு நோய் தொல்லை தரும். சிலருக்கு மஞ்சள் காமாலை வரலாம்; சிறுநீரகங்கள் பாதிக்கப்படலாம்; ரத்தச் சர்க்கரை குறைந்து அடிக்கடி மயக்கம் வரலாம். இன்னும் சிலருக்கு மூளைக்காய்ச்சல் ஏற்பட்டு வலிப்பு வந்து, உயிருக்கு ஆபத்து நேரலாம்.

மலேரியா கருவில் வளரும் குழந்தையையும் பாதிக்கும். குறிப்பாக, கருச்சிதைவு ஏற்படலாம். குறைப்பிரசவம் நேரலாம். குழந்தை இறந்தும் பிறக்கலாம். குழந்தைக்கு உடல் எடை குறைவாக இருக்கலாம்.

சிகிச்சை என்ன?

மலேரியாவைக் கண்டறியவும் ரத்தப் பரிசோதனை உள்ளது. காயச்சல் ஆரம்பித்த உடனேயே இதை மேற்கொள்ளலாம். இதைக் குணப்படுத்துவதற்கு குளோரோகுயின் மாத்திரைகள் உதவும். இந்த மாத்திரையைச் சாப்பிடும்போது கடுமையான வாந்தி வரும். இதற்கு மாற்றாக தற்போது இதற்கான ஊசிகளும் மாத்திரைகளும் பயன்பாட்டில் உள்ளன. எந்த மருந்தானாலும், மருத்துவர் கூறும் கால அளவுக்குச் சரியாக சிகிச்சை எடுத்துக்கொண்டால்தான் மலேரியா மறுபடியும் வராது.

மலேரியா ஏற்பட்டவர்களுக்கு உணவுமுறையில் மாற்றம் தேவையில்லை. எப்போதும்போல் சாப்பிடலாம். நிறைய தண்ணீர் அருந்த வேண்டியது முக்கியம். பழச்சாறுகள், பால், இளநீர், குளுக்கோஸ் போன்ற திரவ  உணவுகளை அதிகப்படுத்திக் கொண்டால், உடல் சோர்வு கட்டுப்படும். ரத்தச்சர்க்கரை குறைகிற ஆபத்து நீங்கும்.

தடுப்புமுறை முக்கியம்!

மலேரியா வராமல் தடுக்க வேண்டுமானால், கொசுக்களை ஒழிப்பதுதான் ஒரே வழி. அதற்கு வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டைச்சுற்றி சாக்கடை மட்டுமல்ல, சாதாரண தண்ணீர்கூட தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். தெருக்களைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.

வாசலில், ஜன்னல்களில் நீண்ட திரைச்சீலைகளைத் தொங்க விடலாம். கொசுவத்தி, கொசு விரட்டி, கொசு ஸ்பிரே போன்றவையும் பலன் கொடுக்கும். இரவில் கொசு எதிர்ப்புக் களிம்பை உடலில் பூசிக்கொள்ளலாம். கை, கால் முழுக்க மறைக்கும் பருத்தி ஆடைகளை அணியலாம்.