Jan 30, 2023
இரகசிய கேள்விகள்

பி‌எம்‌எஸ் (Perimenopausal Syndrome-PMS) என்னும் மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பிரச்சனைகள்

நன்றி குங்குமம் தோழி

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது...அதனினும் அரிது கூன் குருடு செவிடு பேடு இன்றி பிறத்தல் அரிது என்ற அவ்வையாரின் வாக்கினில் அடுத்த வரியாக பெண்ணாய் பிறப்பது அரிது அதனினும் பெண்ணாய் பிறந்து பல உடல் மற்றும் மன ரீதியான சவால்களை எதிர்கொண்டு வெற்றிநடை போடுவது ஒரு வகை வரப்பிரசாதமே என சேர்த்துக் கொள்ளலாம். அந்த வகையில் பெண்கள் தங்கள் வாழ்நாளில் மாதவிடாய் ஆரம்பத்திலிருந்து (Menarche) மாதம்தோறும் மாதவிடாய் (Monthly Menstrual Cycle), குழந்தைபேறு (Pregnancy), பிரசவம் (Delivery), மாதவிடாய் நிறுத்தம் முன் வரும் பிரச்னைகள் (Perimenopausal Syndrome), மாதவிடாய் நிறுத்தம் (Menopause), மாதவிடாய் நிறுத்தம் பின் வரும் உடல் மாற்றங்கள் (Post Menopausal complications) என்று தொடர்ச்சியாக பருவ மாற்றங்களினால் பல்வேறு சவால்களை வாழ்நாள் முழுவதும் சந்தித்துக்கொண்டு எதிர்நீச்சல் போட்டு வெற்றி பெற்றுக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால், அதில் அவர்களை மிகவும் வருத்தும் ஒரு பிரச்சனை அவர்கள் அறியாமலே அவர்களை பாதிக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? அது தான் மாதவிடாய் நிறுத்தத்திற்கு முன்வரும் பிரச்னைகள் (PMS)  பற்றி பார்ப்போம்.   

மாதவிடாய் வருவதற்கு முன் வரும் பிரச்சனைகளை  பிரிமேன்ஸ்டுரல் சின்ட்ரோம் அல்லது பி‌எம்‌எஸ் என்று சுருக்கமாக ஆங்கில மருத்துவம் அழைக்கிறது. பிஎம்எஸ் என்பது மாதவிடாய் சுழற்சியில் மாதவிடாய் வெளியேற்றத்திற்கு 5-11 நாட்களுக்கு முன்னர் ஏற்படக்கூடிய அசௌகரியம் அல்லது நலக்குறைவாகும். இந்நோயானது உடலை மட்டுமின்றி மனநிலை, உணர்ச்சிகள், உடல் ஆரோக்கியம் மற்றும் நடத்தையிலும் பாதிப்பை ஏற்படுத்தும். இப்பிரச்சனை பற்றி விழிப்புணர்வு இல்லாததால் இப்படி ஒரு பிரச்சனை தங்களுக்கு உள்ளது என்று தெரியாமலேயே பல பெண்கள் அவதிப்படுகிறார்கள்.

பி‌எம்‌எஸ் எப்போது பாதிக்கும்?

æ அண்டவிடுப்பின் தொடக்கத்திற்கும் (ovulation) மாதவிடாயின் தொடக்கத்திற்கும் இடையில் (மாதவிடாய்க்கு சுமார் 2 வாரங்களுக்கு முன்பு).
æ மாதவிடாய் ரத்தப்போக்கு தொடங்கி சில நாட்கள் வரை நீடிக்கும்.
æ இதன் அறிகுறிகள் மாதவிடாய் முடியும்போது மறைந்துவிடும்.
æ ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து காணப்படும்.
æ அன்றாட வாழ்க்கை மற்றும் வழக்கமான செயல்பாடுகளில் பல தாக்கங்களை ஏற்படுத்தும்.

இந்த குறைபாடானது (PMS) இனப்பெருக்க வயதுடைய பெண்களை பாதிக்கின்ற மிகவும் பொதுவான பிரச்சனையாக உள்ளது. 30 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் 48 சதவீதம் பேர் PMS-ஐ அனுபவிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன, மேலும் அவர்களில் 20 சதவீதத்தினருக்கு, அறிகுறிகள் அவர்களின் தினசரி நடவடிக்கையை பாதிக்கும் அளவுக்கு கடுமையானவையாக இருக்கக்கூடும்.

கர்ப்பப்பை நீக்கப்பட்டவர்களிடத்திலும், ஒரு சினைப்பை மீதமிருப்பின் அவர்களுக்கும் இப்பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. 3 முதல் 8 சதவீதம் வரையிலான பெண்களுக்கு இது தீவிர பாதிப்பினை ஏற்படுத்தும்போது அதனை பிரிமேன்ஸ்டுரல் டிஸ்போரிக் டிஸார்டர் (Premenstrual dysphoric disorder), (PMDD) என்று நவீன மருத்துவம் அழைக்கிறது.

பி‌எம்‌எஸ் எந்தெந்த பெண்களுக்கு சுலபமாக ஏற்படலாம்?

æ அதிக அளவு மன அழுத்தம்
æ மனச்சோர்வு இருத்தல் அல்லது பரம் பரையாக மனச்சோர்வு வருதல்
æ மகப்பேற்றுக்கு பிறகான மனச்சோர்வு.

காரணங்கள்

மாதவிடாய் சுழற்சியில் ‘லூட்டியல் பேஸ்’ (Luteal Phase) எனப்படும் கருமுட்டை வெளியேறிய பின் உள்ள காலகட்டத்தில் பி‌எம்‌எஸ் ஏற்படும் வாய்ப்பு அதிகம். இது பெண்களின் உடலில் பெண் ஹார்மோன்கள் என்னும் ஈஸ்ட்ரோஜென் மற்றும் ப்ரோஜெஸ்ட்ரோன் அளவுகளில் ஏற்படும் மாற்றத்தினால் உருவாகிறது.

அறிகுறிகள்

மனநிலை மாற்றங்களான, அதிகமாக கோபப்படுதல், பதட்டம், மனம் அலைபாய்தல், அமைதியின்மை, தாழ்வு மனப்பான்மை,  எளிதில் எரிச்சல் அடைதல், மறதி அதிகரித்தல், குழப்பமாக காணப்படுதல், தூக்கமின்மை ஆகியவை காணப்படும். நடத்தை மாற்றங்களான, இனிப்புகள் மீது அதிக விருப்பம், அளவிற்கதிகமாக உண்ணுதல், தாம்பத்தியத்தில் ஆர்வமின்மை, காரணமின்றி அழுதல், சோர்வு, தூங்குவதில் சிக்கல் உட்பட தூக்க முறைகளில் ஏற்படும் மாற்றங்கள், சத்தம் மற்றும் ஒளியின் மீது வெறுப்பு. ஆகிய அறிகுறிகள் காணப்படும்.

உடலளவில் ஏற்படும் மாற்றங்கள்

தலைவலி, இதய படபடப்பு, சோர்வு, தலைசுற்றல், உடல்எடை அதிகரித்தல், மார்பகங்களில் வீக்கம் மற்றும் வலி, தசைப்பிடிப்பு, முதுகு மற்றும் தசை வலி, முகப்பரு, மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு, வயிறு உப்புசம், வயிற்றுப்பொருமல் ஆகியவை அறிகுறிகளாகும்.

பிரிமேன்ஸ்டுரல் டிஸ்போரிக் டிஸார்டர் (Premenstrual dysphoric disorder - PMDD) என்பது மிகவும் தீவிரநிலை ஆகும். அதில் பெண்கள் மிகுந்த மனஅழுத்தம், மனச்சோர்வு, தீவிர சோகம்,  தாழ்வு மனப்பான்மை, தற்கொலை எண்ணங்கள், அன்றாட நடவடிக்கைகளில் ஆர்வமின்மை, தூக்கமின்மை, குழப்பம் ஆகியவற்றுடன் காணப்படுவர். இது பெண்களின் அன்றாட வாழ்க்கையை பெருமளவில் பாதிக்கிறது. தாழ்வு மனப்பான்மை, கோபம், உடற்சோர்வு, பசியின்மை, தூக்க கோளாறுகள், மார்பகத்தில் வலி ஆகியவை தீவிரமாக காணப்படும்.

பி.எம்.எஸ் - ஆயுர்வேதக் கண்ணோட்டம்வாதம், கபம், பித்தம் என்ற மூன்று தோஷங்களின் சமநிலையின்மையால் PMS ஏற்படுகிறது என்று ஆயுர்வேதம் கூறுகிறது. மேலும் குறிப்பாக அபான வாதத்தின் சீர்கேடால் பி.எம்.எஸ். ஏற்படுகிறது. அபான வாதமானது, கீழ் இடுப்பு பகுதியில் அமைந்து மாதவிடாய் ரத்தம், மலம், சிறுநீர் மற்றும் இனப்பெருக்க திரவங்களை வெளியேற்று
வதற்கு பொறுப்பாகிறது.

மாதவிடாயின் தொடக்கத்தில், உடலில் அபான வாதம் அதிகரித்து செரிமான கோளாறு, தலைவலி, வாயுக்கோளாறு மற்றும் பல உடல் மற்றும் மனோ அறிகுறிகளை உருவாக்குகிறது. இது தலை மற்றும் மூளையில் அமைந்துள்ள பிராண வாதத்தை தன்னிலைமாறச் செய்து மேலும் பல கோளாறுகளுடன் இணைத்துவிடுகிறது.

பிஎம்எஸ் நோயைக் கண்டறியும் உடல் பரிசோதனை எதுவும் இல்லை என்றாலும், அதன் அறிகுறிகளை ஏற்படுத்தும் தோஷங்களை சமநிலைப்படுத்த ஆயுர்வேதம் மிகவும் உதவும்.

வாழ்க்கை முறை மாற்றங்கள்

PMS ஏற்பட பல வாழ்க்கை முறை தவறுகளும் காரணங்களாகின்றன. எனவே அவைகளை சரி செய்வதின் மூலம் பி.எம்.எஸ். தாக்கத்தை நன்றாக குறைக்கலாம்.

உடற்பயிற்சி

வாரத்தில் குறைந்தது 30 நிமிடங்களுக்கு சுறுசுறுப்பாக இருக்க முயற்சி செய்யலாம். தினசரி நடைப்பயிற்சி, சோகம், எரிச்சல் மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகளை குறைக்க உதவும்.

ஊட்டச்சத்து

PMS உடன் வரக்கூடிய தேவையில்லாத உணவு பசியை எதிர்க்க முயற்சிக்கலாம். அதிக அளவு சர்க்கரை, கொழுப்பு மற்றும் உப்பு ஆகியவை மனநிலையை கெடுக்கும். அவற்றை முற்றிலுமாக தவிர்க்க முடியாவிட்டாலும் இந்த உணவுகளை பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களுடன் சமப்படுத்த முயற்சிக்கலாம். இது நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கவும் ரத்த சர்க்கரையின் அளவு அதிகமாகவும் மற்றும்  குறையாமல் இருக்கவும் உதவுகிறது.

தூக்கம்

போதுமான தூக்கம் கிடைக்காமல் பெண்கள் மனநிலையை பி.எம்.எஸ். அழித்துவிடும். மாதவிடாய் ரத்தப் போக்கு வருவதற்கு ஒரு வாரம் அல்லது குறைந்தது இரண்டு நாட்களாவது குறைந்தது ஏழு முதல் எட்டு மணிநேரம் இரவில் நன்கு தூங்க வேண்டும்.

மன அழுத்தம்

நிர்வகிக்கப்படாத மன அழுத்தம் மனநிலை மாற்றங்களை மோசமாக்கும். குறிப்பாக PMS அறிகுறிகள் வருவதை உணரும்போது பெண்கள் மனதையும் உடலையும் அமைதிப்படுத்த ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள், தியானம் அல்லது யோகா செய்யலாம்.

சிகிச்சைகள்

ஆயுர்வேதத்தில் இந்நோயானது ‘ரசதாது துஷ்டி’ எனக்கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. வெறும் உடலினை சரிப்படுத்தும் மருந்துகள் மட்டுமின்றி மனதளவிலும் செயல்படக்கூடிய மருந்துகளும் எடுத்துக்கொள்ள வேண்டும். ரசதாது துஷ்டிக்கு முக்கிய காரணமாக அமைவது அக்னி மாந்த்யமாகும். அதனால் தீபன, பாசன மற்றும் பிரும்ஹண மருந்துகள் கொடுக்கலாம்.

ரசதாது துஷ்டியானது வாத தோஷத்தினால் ஏற்பட்டிருப்பின், சத்தம் மற்றும் ஒளியின் மீது வெறுப்பு, தூக்கமின்மை, தாம்பத்தியத்தில் ஆர்வமின்மை, தசைப்பிடிப்பு, முதுகு மற்றும் தசை வலி, மலச்சிக்கல், வயிறு உப்புசம், வயிற்றுப்பொருமல் ஆகிய அறிகுறிகள் தோன்றலாம். அப்போது கஷாய மருந்துகளான திராக்ஷாதி கஷாயம், தான்வந்த்ரம் கஷாயம்,  ம்ருத்விகாதி கஷாயம் ஆகியவை வெந்நீருடன் சேர்த்து கொடுக்கலாம். மாத்திரைகளான தன்வந்த்ரம் குடிகா, மானசமித்ரம் வடகம் மற்றும் நெய்களான கல்யாணக கிருதம், மஹா கல்யாணக கிருதம், விதார்யாதி கிருதம், லேகிய மருந்துகளான சதாவரி லேகியம், கூஷ்மாண்ட லேகியம் ஆகியவை கொடுக்க நல்ல பலன் தரும்.

அப்யங்கம் என்னும் எண்ணை மசாஜ், ஸ்வேதனம், நஸ்ய சிகிச்சைக்கு க்ஷிரபலா தைலம், கல்யாணக கிருதம் பயன்படுத்தலாம். பித்த தோஷத்தினால் ரஸதாது துஷ்டி இருப்பின், அதிகமாக கோபப்படுதல், பதட்டம், மனம் அலைபாய்தல், அமைதியின்மை, எளிதில் எரிச்சல் அடைதல், குழப்பமாக காணப்படுதல், இதய படபடப்பு, தலைசுற்றல், முகப்பரு, வயிற்றுப்போக்கு ஆகிய  அறிகுறிகள் காணப்படலாம்.

இங்கு மதுர திக்த ரஸ மருந்துகள் கொடுக்க நல்ல பலன் தரும். கஷாய மருந்துகளான மஹா திக்தக கஷாயம், திராக்சாதி கஷாயம், திக்தக கஷாயம், விதார்யாதி கஷாயம், ஆமலகி கஷாயம், தன்வந்த்ரம் கஷாயம் ஆகியவையுடன் யஷ்டிமது சூரணம், சாரிவா சூரணம் பயன்படுத்தலாம். அரிஷ்ட மற்றும் ஆஸவ மருந்துகளான சாரிபாத்யஸவம், புனர்நவாசவம்,குமார்யாஸவம், உசிராசவம்  கொடுக்கலாம்.

தளம் எனப்படும் சிகிச்சையானது கச்சூராதி சூரணத்துடன் க்ஷிரபலா  தைலம் சேர்த்தும், கச்சூராதி சூரணத்துடன் நாராயண தைலம் சேர்த்தும் வைக்கலாம். பிச்சு சிகிச்சைக்கு க்ஷிரபலா  தைலம், நாராயண தைலம், யஷ்டிமது தைலம் பயன்படுத்தலாம்.

ரஸ துஷ்டியானது கப தோஷத்தினால் ஏற்பட்டிருப்பின் தாழ்வு மனப்பான்மை,  மறதி அதிகரித்தல், சோர்வு, உடல்எடை அதிகரித்தல், இனிப்புகள் மீது அதிக விருப்பம், அளவிற்கதிகமாக உண்ணுதல், காரணமின்றி அழுதல், சோர்வு ஆகிய அறிகுறிகள் காணப்படும். அப்போது கஷாய மருந்துகளான புனர்னவாதி கஷாயம், கல்யாணக கஷாயம், வாரனாதி கஷாயம், சித்ரக கிராந்தியதி கஷாயம், அர்த்தவில்வம் கஷாயம், சப்தசார கஷாயம், கந்தர்வஹஸ்தாதி கஷாயம், குலத்தாதி கஷாயம், சுகுமார கஷாயம் ஆகியவையுடன் சூரண மருந்துகளான திரிகடுக சூரணம், சட்தரண சூர்ணம், ஹிங்குவசாதி சூரணம், அஷ்ட சூரணம், வைஸ்வானர சூரணம் ஆகியவை கொடுக்கலாம்.

சந்திர பிரபா வடி, புனர்நவாதி மண்டூரம், பிப்பல்யாதி லோஹம், சிவ குடிகா, ஹிங்குவசாதி குடிகா, மஹா தன்வந்த்ரம் குடிகா நெய் மருந்துகளானவை வாரனாதி கிருதம், சுகுமார கிருதம், சப்தசார கிருதம், மிஷ்ரக ஸ்நேஹம் லேகிய மருந்துகளான தசமூல ஹரிதகி, கோமூத்ர ஹரிதகி, சுகுமார லேஹ்யம், கல்யாணக குலம் ஆகியவை நல்ல பலனளிக்கும். அரிஷ்ட ஆஸவ மருந்துகளான தசமூலாரிஷ்டம், குமார்யாஸவம், தன்வந்தரரிஷ்டம், ஜீரகாரிஷ்டம் ஆகியவையும் கொடுக்கலாம்.இவ்வாறு, ஆயுர்வேத மருத்துவத்தில், இந்த PMS பிரச்சனைக்கு பக்கவிளைவுகள் இல்லாத நிரந்தரத் தீர்வினை பெண்கள் பெற்று பயனடையலாம்.

தொகுப்பு: உஷா நாராயணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்