Aug 03, 2021
சுயத்தொழில்

தன்னம்பிக்கைத் தரும் தையல் தொழில்! மாதம் ரூ.15 ஆயிரம் சம்பாதிக்கலாம்…

நன்றி குங்குமம் தோழி

சிறு தொழில்


பொருளாதாரச் சுதந்திரம் எல்லாப் பெண்களுக்கும் அவசியம் தேவைப்படுகிறது. பெரும்பாலான பெண்கள் தங்களின் எல்லாத் தேவைகளுக்காகவும் ஆண்களைச் சார்ந்தே வாழ வேண்டியிருக்கிறது. அதனால், வீட்டு வேலை நேரம் போக மற்ற நேரங்களில் சுயமாக வேலை செய்து சம்பாதிக்க ஏற்ற தொழில் இந்தத் தையல் தொழில் என்பதுடன் அத்தொழில் குறித்துப் பேசுகிறார் சென்னை ஆதம்பாக்கத்தில் ‘ஹரினி’ஸ் லேடிஸ் சாய்ஸ்’ என்ற பெயரில் தையலகம் மற்றும் பயிற்சி அளித்து வரும் கங்கா பாலசுப்பிரமணியன்.

‘‘மனிதனின் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்று ஆடை. அதனால் வருமானத்திற்கு வாய்ப்புள்ள தையல் தொழிலைக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தேன். தையல் தொழில் மூலம் குடும்பத்திற்கு வருமானத்தை ஈட்டுவதோடு, முன்னேறத் துடிக்கும் பெண்களுக்கும் அதனைக்
கற்றுக்கொடுத்து அவர்களின் வருமானம் பெருகவும் வழி செய்து வருகிறேன்.

தையல் தொழிலைக் கற்றுக்கொண்ட புதிதில் உறவினர்கள் மற்றும் எனது தோழிகளுக்குத் தைத்துக்கொடுத்து அவர்களின் நன்மதிப்பைப் பெற்றேன். இதனைக் கேள்விப்பட்ட அக்கம்பக்கத்தினரும் என்னைத் தேடி வந்து துணிகளைத் தைக்கக் கொடுத்தனர். நேர்த்தியான வேலையால் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அவர்கள் சொல்லும் குறிப்புகளையும் எதிர்பார்ப்புகளையும் கேட்டு மனதில் வாங்கிக்கொண்டு அதற்கு ஏற்ப தைத்துக்கொடுத்ததால் அவர்களின் பாராட்டுத் தொழில் மீதும் என் மீதும் எனக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.

அனைவரின் பாராட்டுக்களும் மேன்மேலும் இயங்குவதற்கான உத்வேகத்தைக் கொடுத்தது. இதனால் குடியிருப்பு பகுதி
யிலும் குடும்பத்திலும் நன்மதிப்பைப் பெற்றேன். வருமானமும் பெருகியது. என்னுடைய பல வாடிக்கையாளர்கள் உங்களுக்குத் தெரிந்த இந்தத் தையல் தொழிலை எங்களுக்குச் சொல்லித்தாருங்கள் எனக் கேட்டனர்’’ என்றவர் அவர்களும் ஒரு தொழிலைக் கற்றுக்கொண்டு முன்னேற வேண்டும் என்பதற்காக ஒரு தையல் பயிற்சி வகுப்பை துவங்கியுள்ளார்.

‘‘ைகத் தொழில் செய்ய விரும்பும் பெண்கள் பெரும்பாலும் பட்டப்படிப்பு ஏன் படிப்பறிவுக் கூட இல்லாமல் இருக்கிறார்கள். தங்கள் மூலம் குடும்பத்திற்கு ஏதாவது ஒரு வருமானம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பதற்காகவே என்னிடம் பயிற்சிக்கு வந்தனர். படிக்காதவர்களுக்கும் அவர்களுக்குப் புரியும் வகையில் அளவெடுக்கும் முறைகள், துணிகளின் வகைகள், தையல் வகைகள் பெண்களின் ரசனைகள், புதிய உத்திகள் குறித்துக் கற்றுக்கொடுத்து வருகிறேன். இதுவரை ஏராளமான பெண்கள் என்னிடம் தையல் கற்றுச் சென்றுள்ளனர். அவர்களில் பலர் தையல் தொழில் தொடங்கி நன்றாக தொழில் செய்து வருகின்றனர்.

சேலையில் இருக்கும் பார்டர் அல்லது பூக்களின் நிறத்திற்கு ஏற்பதான் முன்பு ஜாக்கெட் தைத்துக் கொண்டு இருந்தோம். அது அந்தக் காலம். ஆனால் இன்று எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. ஜாக்கெட்டுக்கு ஏற்ப தான் புடவையே தேடுகிறார்கள். அல்லது புடவைக்கு ஏற்ப பல டிசைன்கள் மற்றும் எம்பிராய்டரி கொண்டு ஜாக்கெட்டுகளை தைக்கிறார்கள்.

டிசைனர் சேலைகள் எவ்வளவு பிரபலமோ, அதே அளவுக்கு டிசைனர் ஜாக்கெட்டுகளும் பிரபலமாகி வருகின்றன. ஜாக்கெட்டில் ஜர்தோசி வேலைப்பாடுகள், பூ வேலைப்பாடுகள், டிசைன்கள் செய்து கொடுத்து ஒரு ஜாக்கெட்டுக்கு ரூ.5000 வரை இன்றைக்கு தைக்கும் கூலி வாங்குகின்றனர்’’ என்றவரின் தனித்தன்மையே மணப்பெண்ணுக்கு தைக்கும் ஆடைகள்தான்.

‘‘வாடிக்கையாளர் தங்கள் தேவைகளைச் சொன்னாலே போதும். அதற்கேற்ப வடிவமைத்து கொடுப்பது தான் என்னுடைய வேலை. முதலில் அவர்களின் விருப்பம் என்ன என்று தெரிந்துகொள்ள வேண்டும். அதன் பிறகு அவர்கள் என்ன மாதிரி உடை அணிய வேண்டும் அதாவது லெஹங்காவா, கவுனா, புடவைக்கான பிளவுசா என்று தேர்வு செய்ய வேண்டும்.

அடுத்து, அதில் என்ன மாதிரியான வேலைப்பாடு ஆரிவொர்க், எம்பிராய்டரி, ஜர்தோசி, சமிக்கி... போன்ற தனித்தன்மையான வேலைப்பாடுகளை 3000 முதல் 12000 வரை அவர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ப செய்து தரலாம். மணப்பெண் மட்டும் இல்லாமல் அவர்களின் நெருங்கிய உறவினர்களுக்கும் உடைகளை வடிவமைத்து தருகிறேன். தீம் முறையில் திருமணம் வடிவமைப்பார்கள். அதற்கு ஒரே மாதிரியான நிறத்தில் உடையை வடிவமைத்து தரச் சொல்வார்கள். அது போலவும் செய்து தருகிறேன்.

அதுமட்டுமின்றி பள்ளி சீருடைகள், சிறு குழந்தைகளுக்கான கவுன் மற்றும் பாவாடை சட்டை போன்ற அனைத்து ஆடைகளையும் தைத்துக் கொடுக்கிறோம். சில வாடிக்கையாளர்கள் புகைப்படங்களைக் கொண்டு வந்து அதில் உள்ளது போலவே எனக்கும் தைக்க வேண்டும் எனக் கேட்பார்கள். அதற்கு ஏற்றார்போல் அவர்களுக்கு வடிவமைத்து தருகிறேன். சுடிதார், டிசைனர் பிளவுஸ், லெகங்கா, பாவாடை சட்டை என துவங்கி பள்ளி சீருடை, கவுன், குர்தீஸ், அனார்கலி, நைட்டி... என பெண்களுக்கான அனைத்து உடைகளும் தைத்து தருகிறோம்’’ என்று மனதுக்கு பிடித்தமான தொழில் செய்யும் போது மனநிறைவு ஏற்படுவதாக கூறும் இவர் தையல் முறைகள் குறித்தும் விவரித்தார்.

‘‘ஜாக்கெட், சுடிதார் போன்ற நுட்பம் நிறைந்த தையல் வேலைகள் மேற்கொள்ளக் கண்டிப்பாகப் பயிற்சி வேண்டும். அந்தந்த ஊர்களில் பல்வேறு நிறுவனங்கள் வாயிலாக இப்பயிற்சியை முறையாகக் கற்றுக் கொடுக்கின்றனர். நுணுக்கமான தையல் தெரியாதவர்கள் கூடத் தலையணை உறை, டர்க்கி டவல் மற்றும் சிறிய டவல்களும் தைத்து விற்பதன் மூலம் நிரந்தரமான ஒரு வருமானத்தைப் பார்க்கலாம்.

பாவாடை போன்றவை தயாரிக்கும் வேலை எளிதானது. காரணம் இதன் கட்டிங் மற்றும் தைப்பது ஈஸி. தைத்த பின் நாடா கோர்க்காமல், தைக்கும்போதே நாடாவுடன் தைத்தால், பாவாடையின் இடுப்பு பகுதி தரம் குறையாமல் இருக்கும். குறைந்தபட்ச இன்ச் 36க்குக் குறையாமல் இருந்தால் நல்லது. 26 இன்ச் இடுப்புள்ளவர்கள்கூட எளிதில் நாடாவைச் சுருக்கிக் கட்டிக்கொள்ள முடியும். பெண்களின் இடுப்பு பருமனுக்கேற்ப அதிகபட்சம் 44 இன்ச் வரை வைத்துத் தைக்கலாம்.

பாவாடையின் கீழ்ப் பகுதியில் சன்னமாக ஒரு லேஸ் வைத்துத் தைத்தால் எடுப்பாக இருக்கும். சின்ன டிசைனில்மெஷின் எம்ப்ராய்டரி செய்தால் மதிப்பு கூடும். பாவாடையின் உள்புறம் இரண்டு தையல்கள் முடிந்தால் ஓவர் லாக் அடித்தால் தரம் நன்றாக இருக்கும். இன்றைய நவீனக் காலத்தில் பாவாடையில் அழகிய எம்ப்ராய்டரிகள் போட்டு உடுத்துவது ஃபேஷன் ஆகிவிட்டது. முடிந்தால் அந்தச் சேலை பார்டர் நிறத்தில் லேஸ் வைத்துத் தைத்துக்கொடுத்தால் வாடிக்கையாளர்களின் மனதை கொள்ளை கொள்ளலாம்’’ என்றார் கங்கா.

மேலும் அவர் கூறுகையில், ‘‘சுடிதார் ஜாக்கெட் தைக்கும்போது சில விசயங்களைக் கவனத்தில்கொள்ள வேண்டும். என்னதான் அழகாகத் தைத்தாலும், உட்புறம் கொடுக்கும் லைனிங் துணி தரமில்லாவிட்டால், சுடிதாரின் உழைப்பும், அணியும் சவுகரியமும் குறைந்துவிடும். தரமாகத் தயாரிப்பதுதான் தொழிலின் வெற்றிக்கு முக்கியமானது ஆகும்.

சுடிதார் தைப்பதற்கு அடிப்படையும் முக்கியமானதும் கட்டிங் செய்யும் முறைதான். தைக்க வேண்டிய துணியோடு தைக்கப்பட்ட சுடிதாரின் புகைப்படம் இணைக்கப்பட்டிருக்கும். சிலர் அதே போல் வேண்டும் என்பார்கள். சிலர் அவர்களே ஒரு டிசைன் கொடுப்பார்கள். எதுவாக இருந்தாலும், சுடிதாரின் மாடல் மாறாமல் தைக்க வேண்டும். முக்கியமாக வாடிக்கையாளரின் அளவுக்கு ஏற்ப உடைகளை தைக்க வேண்டும். சுடிதாரில் 50க்கும் மேற்பட்ட டிசைன்கள் உள்ளதால், அதற்கேற்ப அளவுகளை அறிந்துகொண்டு, துணிகளை வெட்டி தைத்து, அயர்னிங் செய்தால் நல்லதொரு சுடிதார் தயார்.

மற்றவர்களிடமிருந்து நான் வேறுபட்டு தெரிவதற்கு காரணம், துணி ெகாடுத்த நான்கு மணி நேரத்தில் அவர்கள் விரும்பும் வகையில் துல்லியமாக தைத்து கொடுத்திடுவேன். விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு வீட்டிற்கே கொண்டு போய் கொடுக்கிறோம். வெளிநாட்டில் தங்கி இருக்கும் இந்தியர்கள் ஆண்டுக்கு ஒரு முறை வரும் போது பல்க் ஆர்டர்கள் தருவார்கள். அதையும் நான் அவர்களின் நேரத்திற்கு ஏற்ப செய்து தருகிறேன். வாடிக்கையாளர்களாய் இருக்கிறார்கள்.

அவர்கள் அந்த ஆண்டிற்கான மொத்த ஆடைகளை தைத்து கொண்டு சென்றுவிடுவார்கள். எந்த ஒரு தொழிலும் வெற்றிபெற வேண்டுமென்றால் மனதின் ஆர்வமும், அதைச் செயல்படுத்தக் கடின உழைப்பும், வாடிக்கையாளர்களைத் திருப்திப்படுத்த, வித்தியாசமான சிந்தனையும் இருந்தால் தொழிலில் வெற்றிக்கனியை  பறித்துவிடலாம்’’ என்றார் கங்கா பாலசுப்பிரமணியன்.

தோ.திருத்துவராஜ்