Aug 14, 2022
சுயத்தொழில்

11 வயது சிறு தொழிலதிபர்!

நன்றி குங்குமம் தோழி

சொந்தமாக தொழில் செய்ய நிறுவனம் அமைத்து, ஆட்களை வேலைக்கு நியமித்துதான் செய்ய வேண்டும் என்றில்லை. வீட்டில் இருந்தபடியே இணையதளத்தின் பேராதரவு மூலமாகவும் தொழில் செய்யலாம் என்பதை நிரூபித்துள்ளார் 11 வயது நிரம்பிய அடுத்த தலைமுறையை சேர்ந்த சனாயா சம்பத். குஜராத்தை பூர்வீகமாக கொண்டிருக்கும் இவர் தற்போது கேரளாவில் வசித்து வருகிறார். இவர் தான் படித்த 300 புத்தகங்களை ஆன்லைன் மூலம் விற்பனை செய்து வருகிறார்.

“எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே என் அம்மாவும் அப்பாவும் எனக்குப் புத்தகங்களை படித்துக் காட்டுவார்கள். கொஞ்சம் வளர்ந்ததும் நானே புத்தகங்களைப் படிக்க தொடங்கினேன். புத்தகங்களைப் படிக்கப் படிக்க அதிலிருந்து உருவாகும் கற்பனைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. வாசிப்பின் மூலம் எனது பேச்சுத்திறனும், மொழித்திறனும் விரிவடைந்தது. நான் முதல் முறையாக வாசித்த புத்தகத்தின் பெயர் ‘‘தி ஹங்கரி கேட்டர்பில்லார்” புத்தகம்’’ என்று மழலை மாறாமல் பேசும் சனாயா இணையம் அவருக்கு எவ்வாறு பல விஷயங்களை அள்ளிக் கொடுத்துள்ளது என்பது குறித்து பேசினார்.

‘‘கொரோனாவில் எல்லா பள்ளிகளிலும் ஆன்லைன் முறையில் பாடங்கள் எடுக்க ஆரம்பிச்சாங்க. பாடங்களை படிப்பது, அதற்கான நோட்ஸ் எடுப்பது, ேதர்வு எழுதுவது, அதனை போஸ்ட் செய்வதுன்னு இணையம் சார்ந்த பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். என்னுடைய நண்பர்கள் பலர் அவர்களுடைய திறமைகளை சமூக வலைத்தளத்தில் வெளிப்படுத்தி வந்தனர். எனக்கும் அவர்களைப் போல ஏதாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. ஆனால் என்ன செய்வது எனத் தெரியவில்லை. ஆன்லைன் வகுப்புகள் போக, மீதமிருக்கும் நேரத்தில் என் தம்பிக்கு கதை புத்தகங்களை வாசித்துக் காட்டுவேன்.

அப்போதுதான் என்னிடம் 250க்கும் அதிகமான புத்தகங்கள் இருப்பதை உணர்ந்தேன். இந்த புத்தகங்களை ஒரு முறை படித்துவிட்டால் அப்படியே அடுக்கி வைத்திடுவோம். அதன் பிறகு திரும்பவும் படிப்போம் என்று சொல்ல முடியாது. சில சமயங்களில் ஒரு சில கதைகள் நம்மை வெகுவாக பாதித்திருக்கும். அந்த கதைகளை மட்டும் திரும்ப படிக்க வேண்டும் என்று தோன்றும். வீட்டில் என் அலமாரியை மட்டுமே அலங்கரித்து இருந்த இந்த புத்தகங்கள் மற்றவர்களின் அலமாரியை அலங்கரித்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றியது.

இது குறித்து கூகுளில் தேடினேன். பலர் தாங்கள் வாசித்த புத்தகங்களை மறுவிற்பனை செய்வது தெரிந்தது. மேலும் பலர் பழைய புத்தகங்களை வாங்க ஆர்வமாக இருப்பதையும் கண்டுபிடித்தேன். இதனால் என்னிடம் இருக்கும் அனைத்து புத்தகங்களையும் குறைந்த விலையில், இன்ஸ்டாகிராம் மூலமாக விற்க முடிவு செய்தேன். இதை பெற்றோரிடம் தெரிவித்த போது அவர்களும் ஆர்வமளிக்க ‘ட்வைஸ் சோல்ட் டேல்ஸ்’ @twicesoldtales ஆன்லைன் புத்தகக்கடை உதயமானது’’ என்றவரை தொடர்ந்தார் அவரின் அம்மா அமீ சம்பத்.

 “சனாயாவிற்கு முதல் முறையாக என் தம்பிதான் ஒரு புத்தகத்தை வாங்கி அதை அவளுக்கு வாசித்தும் காட்டினார். கதையின் ஆரம்பம் முதல் முடிவு வரை முழு ஆர்வத்துடன் ஒரே இடத்தில் அமர்ந்து மெய் மறந்து கேட்டு ரசித்தாள். அப்போது தான் அவளுக்கு புத்தகங்கள் பிடித்திருப்பது தெரிந்தது. பின்னர் அவள் அடிக்கடி எங்களை கதை சொல்லுமாறு கேட்க ஆரம்பித்தாள். ஆனால் எனக்குக் குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கதை சொல்லத் தெரியவில்லை.

அதனால் குழந்தைகளுக்கான வண்ண புத்தகங்களை வாங்கி அதை அவளுக்கு படித்துக் காட்டுவேன். எவ்வளவு குறும்புத்தனம் செய்தாலும், புத்தகம் வாசிக்கும் போது மட்டும் அமைதியாக அமர்ந்துவிடுவாள். நான் வாசித்துக் காட்டும் புத்தகங்களை எழுதப் படிக்க தெரிவதற்கு முன்பே அவள் மனப்பாடமாக சொல்ல ஆரம்பித்தாள். இப்போது வாசிப்பைத் தவிர சனாயா கூடைப்பந்து விளையாட்டிலும் ஆர்வம் காட்டுகிறாள். அவளுக்கு என்ன பிடிக்கும் என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருப்பாள். வாசிப்பையும், கூடைப்பந்தையும் தாண்டி இசை வகுப்புகள் அல்லது நடன வகுப்புகளில் அவளுக்கு ஆர்வமில்லை. அதை செய்ய மாட்டேன் என உறுதியாக தெரிவித்துவிட்டாள். அவளுக்கு பிடித்த விஷயங்களை மட்டும் ஆர்வமாக கற்றுக் கொள்கிறாள்.

சனாயா Twice Sold Tales ஆரம்பித்தபோதும், ஏதோ விளையாட்டாகச் செய்கிறாள் சில நாட்களில் அதன்மீதான ஆர்வத்தை இழந்துவிடுவாள் என்று நினைத்தோம். ஒவ்வொரு புத்தகத்தையும் ஆர்டரின் பெயரில் அனுப்பும் போது அதனுடன் தன் கைப்பட எழுதிய கடிதம், அவளே வரைந்த புத்தக குறிப்பையும் சேர்த்து அனுப்புவாள். இவற்றை பிரின்ட் எடுத்து அனுப்பலாம்ன்னு சொன்ன போதும் கைப்பட எழுதி அனுப்பும் போது படிக்கிறவங்களுக்கும் மேலும் படிக்க வேண்டும் என்று ஒரு ஆர்வம் ஏற்படும் என்பாள்’’ என்றார் அமீ.

“நான் இதுவரை 90 புத்தகங்களை விற்றுள்ளேன். நான் விற்கும் புத்தகங்கள் அனைத்துமே 500 ரூபாய்க்கு குறைவாகத்தான் இருக்கும். என்னைப் பொறுத்தவரை புதிய புத்தகங்களை வாங்குவதைவிட, பழைய புத்தகங்களை வாங்கும் போது விலையும் குறைவு, சுற்றுச் சூழலுக்கும் பாதிப்பும் ஏற்படாது. நிறையப் புத்தகங்களை படிக்கும் வாய்ப்பும் கிடைக்கும். இதுவரை நான் சம்பாதித்த பணத்தில் கொஞ்சம் என் படிப்பிற்காக சேமித்துள்ளேன். மீதி பணத்தை புத்தகங்களுக்காக செலவிடுகிறேன். நண்பர்களும், இன்ஸ்டாகிராமில் அறிமுகமானவர்களும்
அவர்களுடைய பழைய புத்தகங்களை எனக்கு அனுப்புவார்கள்.

நான் அவற்றை என் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விற்று, புத்தகத்தின் உரிமையாளருக்கும் ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்புவேன். இப்போது இணையம் விற்பனை பற்றி படித்து வருகிறேன். என்னுடைய சிறு தொழிலை எப்படி மேம்படுத்துவது எனத் தினமும் தேடித் தேடிப் பல தகவல்களை சேகரித்துவருகிறேன்.  எனக்கு இந்திய வரலாறு படிக்கப் பிடிக்கும். எழுதவும் பிடிக்கும். சில கதைகளை நானே எழுதியும் உள்ளேன். எதிர்காலத்தில் சூழ்நிலை அமைந்தால் நான் எழுதிய கதைகளை புத்தகங்களாக வெளியிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது’’ என்றார் சனாயா.

“இன்று வளர்ந்து வரும் தொழில்நுட்பம் ஒரு பக்கம் அச்சத்தைக் கொடுத்தாலும் மறுபக்கம் அதனால் பல நன்மைகளும் இருக்கிறது என்பது உண்மைதான்’’ என்று பேசத் துவங்கினார் சனாயாவின் அம்மா. ‘‘முதலில் சனாயா இணையத்தில் புத்தகங்கள் விற்க ஆரம்பித்ததும், பலரும் குழந்தையை சமூக வலைத்தளத்தில் அனுமதிப்பது ஆபத்தை விளைவிக்கும் என்றனர். எங்களுக்கும் அந்த தயக்கம் இருந்தது. ஆனால் சனாயாவிடம் நானும் என் கணவரும் அடிக்கடி இணையத்தில் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் அதை எப்படி அணுக வேண்டும் என்று சொல்லித்தருவோம். தெரியாதவரிடமிருந்து தேவையில்லாத மெசேஜ் வந்தால் உடனே சனாயா அதை எங்களிடம் தெரிவிப்பாள்.

நாங்கள் அதை எப்படி கையாள வேண்டும் என்று கற்றுக்கொடுப்போம். இன்ஸ்டாகிராம் பக்கத்தை முழுவதுமாக சனாயாதான் கையாளுகிறாள். ஆனால் நாங்களும் அதை கண்காணித்து வருகிறோம். சனாயாவும் இந்த சவால்களை தைரியமாக எதிர்கொள்கிறாள். அவளுக்கு இந்த வயதிலேயே சேமிக்கும் பழக்கம் உருவாகியுள்ளது. தன்னுடைய வாடிக்கையாளர்களுடன் தன்மையாகவும் நேர்மையாகவும் நடந்துகொள்கிறாள். இது எங்களுக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் கொடுத்தாலும், இவளுடைய நேரம் ஆன்லைனில் கழிவது கொஞ்சம் வருத்தமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புத்தகங்களுடன் புகைப்படங்களை பதிவேற்றுவது, ரீல்ஸ் உருவாக்குவது என அவள் எப்போதுமே பிஸியாக இருக்கிறாள்.

இதெல்லாம் செய்தால் தான் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய பக்கத்தை மக்கள் பார்ப்பார்கள் என சோசியல் மீடியா மார்க்கெட்டிங் பற்றி பேசுகிறாள். தனக்கு என்ன வேண்டும் என்பதில் தெளிவாக இருந்து அந்த பாதையில் சனாயா தைரியமாக பயணிப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. எதிர்காலத்தில் இது போல இவளது அனைத்து முயற்சிகளுக்கும் துணையாக இருக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரே நோக்கம்” என முடிக்கிறார்.

இன்று பல பெற்றோர்கள் பள்ளி புத்தகங்களை தாண்டி குழந்தைகள் மற்ற புத்தகங்களைப் படிப்பதை நேர விரயமாக நினைக்கிறார்கள். இசை, நடனம், கராத்தே என அனைத்து வகுப்புகளிலும் சேர்த்து, குழந்தைக்கு உண்மையில் எதில் ஆர்வமிருக்கிறது என்பதை தெரிந்துகொள்ளாமல் தங்களுடைய எண்ணங்களை அவர்கள் மீது திணிக்கிறார்கள். குழந்தைக்கு அவர்கள் சுயமாகச் சிந்திக்கவும் கற்றுக்கொள்ளவும் சுதந்திரம் கொடுத்தால், பெரியவர்களை விடப் பல மடங்கு கடின உழைப்பை கொடுத்து அவர்கள் முன்னேறுவார்கள்.  சாதிக்க வயது தடையில்லை என்பதை சனாயா போன்ற குழந்தைகள் மீண்டும் மீண்டும் நமக்கு நினைவூட்டுகிறார்கள்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்

படங்கள்: ஜி.சிவக்குமார்