Jul 07, 2022
சுயத்தொழில்

கிரியேட்டிவிட்டி இருந்தால் கை நிறைய சம்பாதிக்கலாம்!

நன்றி குங்குமம் தோழி

தமிழில் முதல் முறையாக ஓவியங்கள் வரையக் கற்றுக்கொடுக்கும் யுடியூப் சேனலை ஆரம்பித்தவர் வித்யா. இப்போது அதிலிருந்து கொஞ்சம் ப்ரேக் எடுத்திருக்கும் இவர், கிரியேட்டிவிட்டியை மூலதனமாக வைத்தால் இன்று பல துறைகளில் சாதிக்கலாம் என்கிறார். இன்ஸ்டாகிராமில் Bumblebee digital (பம்பல்பீ டிஜிட்டல்) எனும் பக்கத்தில் தனது டிஜிட்டல் ஓவியங்களை பகிர்ந்து வரும் இவர், நம் வாசகர்களுக்கு டிஜிட்டல் டிசைன் துறையில் எப்படி வருமானம் ஈட்டுவது எனும் டிப்ஸையும் கொடுக்கிறார்.

‘‘என் சொந்த ஊர் காஞ்சிபுரம். பொறியியல் படிப்பை முடித்து மூன்று வருடங்கள் ஐ.டி கம்பெனியில் வேலை செய்தேன். குழந்தை பிறந்த சமயத்தில் ஐ.டி நிறுவனத்திலிருந்து ப்ரேக் எடுத்தேன். அப்போதுதான் எனக்கு ஐ.டி வேலை எவ்வளவு சலிப்பூட்டியுள்ளது என புரிந்தது. திரும்ப வேலைக்குப் போக பிடிக்கவில்லை. அதனால் வேலையை விட்டு வீட்டில் இருந்தேன். ஆனாலும் வீட்டிலும் சும்மா இருக்க பிடிக்கவில்லை. பொழுதுப்போக்கிற்காக ஓவியங்கள் வரைய ஆரம்பித்தேன். அதை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டேன். அதைத் தொடர்ந்து டிஜிட்டல் ஓவியங்களையும் வரைய ஆரம்பித்தேன். என் இன்ஸ்டா பக்கத்தினை பார்த்து சாதாரண பொதுமக்கள் முதல் நிறுவனங்கள் என என்னை பின்பற்ற ஆரம்பித்தார்கள். இப்போது க்ராஃபிக் டிசைனிங், இலஸ்ட்ரேஷன், கேரிகேச்சர், காமிக்ஸ் என பல துறைகளிலும் ஃப்ரீலான்சராக வேலை செய்து வருகிறேன்.

தமிழில் முதல்முறையாக ஓவியங்கள் வரைய யுடியூப் சேனல் ஆரம்பித்தது நான் தான். அப்போது அந்த சேனலுக்கு 25,000 சப்ஸ்க்ரைபர்ஸ் இருந்தனர். ஆனால் ஃப்ரீலான்சிங், வேலை, குழந்தைகள் என யுடியூப் சேனலுக்கு சரியாக நேரம் ஒதுக்க முடியவில்லை. பென்சில் ட்ராயிங்கில் ஆரம்பித்து இப்போது ஐபேடை கம்ப்யூட்டருடன் கனெக்ட் செய்து வரைகிறேன். இதெல்லாமே நானே என் சொந்த முயற்சியிலும் ஆர்வத்திலும் கற்றுக்கொண்ட கலைதான். டிஜிட்டல் ஓவியத் துறையில் என்னவெல்லாம் கேட்கிறார்களோ அதெல்லாம் செய்து வருகிறேன். நான் முறையாக கற்றுக்கொண்டது கிராஃபிக் டிசைனிங் மட்டும்தான். இதற்கெல்லாம் வகுப்புகள் இருப்பதே எனக்கு தெரியாது. ஆனால் ஓவியம் சார்ந்த பல துறைகளும், அதற்கான வேலைவாய்ப்புகளும் இன்று வேகமாக வளர்ந்து வருகிறது. அதற்கான சம்பளமும் இங்கு அதிகம்.

எனக்கு வீட்டிலிருந்து ஃப்ரீலான்சராக வேலை செய்தாலே மாதச் சம்பளத்தைவிட அதிக வருமானம் கிடைக்கிறது. இதற்காக காலை முதல் இரவு வரை முழு நேரமும் வேலை செய்வதில்லை. வேலை இருக்கும் போது மட்டும் அதற்கான நேரத்தை ஒதுக்கி வேலை செய்தாலே போதும். என்னுடைய நேரத்தை எப்படி செலவிட வேண்டும் என்பதை நான் மட்டுமே முடிவு செய்வேன். குறிப்பிட்ட நேரத்திற்குள் வேலையை முடிக்கவேண்டுமே தவிர, அலுவலகத்தில் வேலை செய்வது போல 8 மணி நேரம் தொடர்ந்து சீட்டில் இருக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வரையத் தெரிந்தவர்கள் மட்டுமே இந்த துறையில் வேலை செய்யமுடியும் என்பதும் கிடையாது. வரையத் தெரியாதவர்களுக்கு கூட கலர் காம்பினேஷன், கலர் ஸ்டைலிங்கில் ஆர்வமிருக்கும். அவர்களுக்கு கிராஃபிக் டிசைனிங் சரியான துறையாக இருக்கும்.

நன்றாக வரையத் தெரிந்தவர்கள், க்ரியேட்டிவாக ஒரு உருவத்தை தாமாகவே வரைபவர்கள், கேரக்டர் டிசைனிங், டிஜிட்டல் பெயின்டிங் போன்ற வகுப்புகளில் சேர்ந்து அந்த துறைகளில் முன்னேறலாம். இந்த வகுப்புகள் ஆன்லைனில் கூட கிடைக்கும். அழைப்பிதழ்கள் உருவாக்குவது, காலண்டர், ஸ்டிக்கர்ஸ், லோகோ, போஸ்டர்கள், விளம்பரங்கள் என டிசைனைச் சார்ந்து இன்று பல துறைகள் இயங்கி வருகின்றன. இந்த துறையில் கால்பதிக்க சில டிசைனிங் சாஃப்ட்வேர்களை தெரிந்து கொள்ள வேண்டும். அடோப் போட்டோஷாப்பை முழுமையாக கற்றுக்கொண்டாலே மேற்கொண்டு படித்துவிடலாம். நீங்கள் கற்றுக்கொண்டு உருவாக்கும் கலையை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டாலே அதை பார்த்து பலர் உங்களைத் தொடர்பு கொண்டு வேலை கொடுப்பார்கள்.

இந்த துறையில் திறமையை பொருத்துதான் சம்பளமும். அனுபவம், நீங்கள் வேலை செய்த வருடங்கள் போன்ற வரையறைகள் எதுவுமே சம்பளத்தை நிர்ணயிக்காது. ஃப்ரீலான்சர் வேலையில், ஒரு நிறுவனத்திற்கு உங்களுடைய டிசைன் பிடித்துப் போனால், மறுபடியும் உங்களிடம்தான் அந்த வேலையை ஒப்படைப்பார்கள். அந்த நிறுவனத்திற்கான லோகோவில் தொடங்கி, போஸ்டர்கள், சோசியல் மீடியா பதிவுகள் வரை டிசைன் சம்பந்தமான அனைத்து வேலையும் உங்களிடம்தான் வரும்.

ஆனால், நீங்கள் கொடுக்கும் டிசைனில் பல திருத்தங்கள் செய்துதர வேண்டி வரும். உங்களுக்கு பிடித்த வேலை, கிரியேடிவ்வான வேலை என்றாலுமே, உங்கள் நிறுவனம் கேட்கும் விவரங்களை மட்டுமே பயன்படுத்தி வேலை செய்ய வேண்டும். ஆனால் நிறுவனத்தின் தேவையையும், உங்கள் கிரியேட்டிவிட்டியையும் பேலன்ஸ் செய்து வேலை செய்தால் மிகவும் எளிதான துறை இது.

மொபைல் கேம்ஸ் செயலிகளில் கேரக்டர் டிசைனிங் செய்வது இன்று வளர்ந்து வரும் துறையாகும். அதே போல வீடியோக்களில் மோஷன் கிராஃபிக் டிசைனிங்கும் இன்று டிமான்டிலிருக்கும் துறை. பொதுவாக கிராஃபிக் டிசைனிங் கற்பவர்கள் அதைத் தொடர்ந்து மோஷன் கிரா ஃபிக் டிசைனிங்கும் கற்றுக்கொள்வார்கள். அந்த துறையில் நுழைய ஒரு சிறிய சாவிதான் கிராஃபிக் டிசைனிங். வகுப்புகளுக்கு செலவு செய்ய முடியாது என்ற பட்சத்தில், பல ஆன்லைன் வகுப்புகள் மிகக் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதுவும் முடியாத போது, யுடியூபில் இலவசமாகவே அனைத்து டிசைனிங் சாஃப்ட்வேர்களையும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் உங்களுக்கு கற்றுக்கொடுக்க ஒருவர் இருக்கும் போது, உங்களுடைய பலம் பலவீனங்களை அறிந்து அதற்கேற்றப்படி கற்றுக்கொடுப்பார்கள்.

மோஷன் கிராஃபிக் டிசைனிங் கற்றுக்கொண்டு அதில் நல்ல தேர்ச்சி பெற்றதும், 2டி அனிமேஷன் போன்ற வீடியோக்களை உருவாக்கும் துறைகளுக்கு செல்லலாம். இதெல்லாமே அதிகப்படியான வருமானத்தை ஈட்டித்தரும் துறைகளாகும். ஆனால், நீங்கள் உங்களை என்றுமே அப்டேட்டாக வைத்துக்கொள்ள வேண்டும். புதிய சாஃப்ட்வேர்களை கற்று, மாறி வரும் ட்ரெண்டிற்கு ஏற்ற மாதிரி உங்கள் கிரியேட்டிவிட்டியையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு டிசைன் செய்வது சுலபம். ஏற்கனவே முடிவு செய்த நிறங்கள், விவரங்களின் அடிப்படையில் நாம் டிசைன் செய்து கொடுத்தால் போதும்.

கிரியேட்டிவிட்டியை அடிப்படையாக வைத்து பல வகையில் வருமானம் ஈட்டலாம். அதே போல ஒரு நிறுவனத்தில் முழு நேரம் வேலை செய்வதைவிட, ஃப்ரீலான்சராக வேலை செய்யும் போது, உங்கள் முயற்சிக்கான முழு வருமானமும் உங்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் பலர் ஃப்ரீலான்சிங் செய்ய பயப்படுகிறார்கள். காரணம் மாத வருமானம் நின்றுவிடுமோ என்ற அச்சம். ஆனால் உங்கள் திறமை மீது கொஞ்சம் நம்பிக்கையும், கூடுதலான முயற்சிகளும் எடுத்தால், நிச்சயம் ஃப்ரீலான்சராக வேலை செய்து அதிக வருமானத்தை ஈட்டமுடியும்” எனக்கூறும் வித்யா, எதிர்காலத்தில் தமிழில்  டிசைனிங் சாஃப்ட்வேரை இலவசமாக யுடியூபில் கற்றுக்கொடுக்க வேண்டும் என ஆசைப்படுகிறார். மேலும்,  நண்பர்களுடன் இணைந்து ஒரு முழு வெப்சைட் செய்து கொடுக்க வேண்டும் என UI/UX கற்று வருகிறார்.

தொகுப்பு: ஸ்வேதா கண்ணன்