May 29, 2020
தமிழகம்

வெங்கட்ரமணன் வீதியில் விதிமீறி செல்லும் வாகனங்களால் போக்குவரத்து நெரிசல்: பொதுமக்கள் வேதனை

பொள்ளாச்சி:  பொள்ளாச்சி  வெங்கட்ரமணன் வீதியில் விதிமீறி செல்லும் வாகனங்களால், போக்குவரத்து  பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்தனர். பொள்ளாச்சி நகரில்  மார்க்கெட் ரோடு, ராஜாமில் ரோடு, நியூஸ்கீம் ரோடு, உடுமலை ரோடு தேர்நிலை,  பாலக்காடு ரோடு பஸ்நிலைய பகுதி, கோவை ரோடு, வெங்கட்ரமணன் வீதி உள்ளிட்ட  இடங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் வாகன போக்குவரத்து தொடர்ந்துள்ளது. ஆனால், இந்த வழித்தடங்களில் அடிக்கடி விதிமுறை மீறி செல்லும் வாகனங்களால்  போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதில் வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த வெங்கட்ரமணன் வீதி ஒரு வழிப்பாதையாக உள்ளது.

தெப்பக்குளம் வீதி மற்றும் மார்க்கெட் ரோட்டிலிருந்து வரும் வாகனங்கள், வெங்கட்ரமணன் வீதி வழியாக பாலக்காடு ரோட்டை சென்றடைவதால். அப்பகுதி எப்போதும் பரபரப்புடன் இருக்கும். மேலும், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள்  விதிமுறை மீறி செல்வதை தவிர்க்க, போலீஸ் சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. ஆனால், வெங்கட்ரமணன் வீதியில் வரும் கனரக வாகங்கள் பெரும்பாலும், உடுமலை ரோட்டிற்கு செல்வதற்காக விதிமுறை மீறி செல்வது  தொடர்ந்துள்ளது. இதில் நேற்று, எச்சரிக்கை பலகையை மீறி வெங்கட்ரமணன் வீதியிலிருந்து உடுமலை ரோட்டிற்கு விதிமுறை மீறி சென்ற லாரிகளால் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனால், இருசக்கர வாகன ஓட்டிகள்  மற்றும் ஆட்டோ உள்ளிட்ட வாகன ஓட்டுனர்கள் அவதிப்பட்டனர். மேலும், அந்த  இடத்தில் வாகனங்களை சீராக செல்ல வழிவகை செய்வதற்காக, போக்குவரத்து  போலீசார் நிறுத்தப்படாமல் இருந்ததால், தொடர்ந்து கனரக வாகன ஓட்டிகள்  விதிமுறை மீறி இயக்கி சென்றதால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்தது. எனவே, வெங்கட்ரமணன் வீதியில்  போக்குவரத்து நெரிசலை தவிர்க்க போக்குவரத்து போலீசார் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.