May 29, 2020
தமிழகம்

இந்திய விண்வெளித்துறை சார்பில் மதுரையில் விழிப்புணர்வு கண்காட்சி: ராக்கெட், செயற்கைகோள் மாதிரிகள் காட்சிக்கு வைப்பு!

மதுரை: இந்திய விண்வெளித்துறை சார்பில் மதுரையில் 3 நாட்கள் நடைபெறும் விழுப்புணர்வு கண்காட்சி தொடங்கியுள்ளது.  இந்தியாவின் வளர்ச்சிக்கு விண்வெளித்துறையானது மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்நிலையில், மதுரை விரகனூரில் உள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியில் இந்திய விண்வெளித்துறை சார்பாக 3 நாட்கள் கண்காட்சியானது தொடர்ந்து நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த கண்காட்சியில் இதுவரை இந்தியா கண்டறிந்துள்ள, விண்ணில் ஏவப்பட்ட செயற்கைக் கோள்கள் மற்றும் ராக்கெட்டுகள் குறித்து முழு தகவல்களும், அதனுடைய மாதிரிகளும் வைக்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக இதுவரை இந்தியா விண்ணில் ஏவியிருக்கக்கூடிய ராக்கெட், செயற்கைகோள் உடைய முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து விளக்கப்பட்டுள்ளது. மேலும் செயற்கைகோள்களில் பயன்படுத்திய இன்ஜின்கள் மற்றும் அதன் உதிரி பாகங்களை தற்போது மாதிரியாக வைக்கப்பட்டிருக்கிறது. முக்கியமாக சந்திரயான், மங்கள்யான் செயற்கைகோள் மாதிரி வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடம் இந்திய விண்வெளித்துறையின் சாதனைகளை கொண்டு சேர்ப்பதற்காக இந்த கண்காட்சியானது நடத்தப்பட்டிருக்கிறது. 3 நாட்கள் இந்த கண்காட்சியானது தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் பல்வேறு புதிய தகவல்கள் கொடுக்கப்படுகிறது. ராக்கெட் செயற்கைகோள்களின் முக்கியத்துவம் என்ன? என்பது குறித்து விரிவான தகவல் வைக்கப்பட்டிருக்கிறது. இதுமட்டுமல்லாமல் மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விண்வெளித்துறை சார்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது. மேலும் கருத்தரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு செயற்கைக்கோளும் விண்ணில் ஏவப்படும் போது அங்கு எடுக்கப்பட்டுள்ள காட்சிகள் எல்.இ.டி. திரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த கண்காட்சியானது மாணவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தொடர்ந்து, விண்வெளித்துறையின் சாதனைகளை சாதாரண மக்களிடத்தில் கொண்டு செல்வதற்கான அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்று தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இந்திய விண்வெளித்துறையின் சார்பில் விழிப்புணர்வு கண்காட்சியானது நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.