Jun 02, 2020
தமிழகம்

தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா சிறப்பு நிவாரணம் 1000 இன்று முதல் விநியோகம்: 15ம் தேதி வரை வழங்கப்படும்

சென்னை: தமிழகம் முழுவதும் 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரண தொகையாக ரேஷன் கடைகளில் இன்று முதல் ரூ.1000 வழங்கப்படுகிறது.  ஊரடங்கு காரணமாக  அனைத்து குடும்ப அரிசி அட்டைதாரர்களுக்கும் தலா ரூ.1,000 நிவாரணம் மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான அரிசி, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் சர்க்கரை விலையின்றி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி தலா ரூ.1000 மற்றும் ரேஷன் பொருட்கள் வழங்கும் பணிகள் இன்று (2ம் தேதி) முதல் வருகிற 15ம் தேதி வரை நடைபெறுகிறது.  கொரோனா வைரஸ் தொற்று பரவும் ஆபத்து இருப்பதால், ரேஷன் கடைகளில் கூட்டத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரேஷன் கடை ஊழியர்களை வைத்து நேற்று அனைத்து வீடுகளுக்கும் நேரில் சென்று டோக்கன் வழங்கும் பணிகளில் கூட்டுறவு துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். அந்த டோக்கனில், கடை பெயர், குடும்ப அட்டைதாரரின் பெயர், கார்டு எண், தெரு, தேதி, கிழமை, நேரம், டோக்கன் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் இடம் பெற்றுள்ளது.  அதன்படி, பொதுமக்கள் இன்று காலை 9 மணியில் இருந்து மாலை 6 மணி வரை, தங்களுக்கு வழங்கப்பட்ட டோக்கனில் தெரிவித்த தேதி, நேரத்தில் அந்தந்த ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று, கொரோனா வைரஸ் சிறப்பு நிவாரண தொகையான ரூ.1000 மற்றும் ஏப்ரல் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

மேலும், ரேஷன் கடைகளில் கூட்டத்தை தவிர்க்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. அதே நேரம் ரேஷன் கடை ஊழியர்கள் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முககவசம் மற்றும் கையுறைகள் அணிந்து பாதுகாப்புடன் இருந்து கொள்ள வேண்டும். இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.  டோக்கனில் குறிப்பிட்ட தேதி, நேரத்தில் வராமல் தாமதமாக வந்தால் அவர்களை திருப்பி அனுப்பி, பின்னர் வேறொரு நாளில் வழங்கவும் கூட்டுறவு துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.