Feb 25, 2021
தமிழகம்

உயிரோடு இருக்கும் போதே இறந்ததாக பதிந்து பணப்பலன்களை அபகரித்ததாக கலெக்டரிடம் பரபரப்பு புகார்

விருதுநகர் : விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் அய்யனார் நகரை சேர்ந்த அழகம்மாள்(60) மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: பாவாலி ஊராட்சியில் தூய்மை பணியாளராக அழகம்மாள், அவரது கணவர் பெருமாள் வேலை செய்துள்ளனர். பெருமாள் இரண்டு ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்த போது இறந்துள்ளார்.

பெருமாளுக்கான பணப்பலன்கள் தருவதாக கூறி பல ஆவணங்களில் கையெழுத்து பெற்றுள்ளனர்.
ஆனால், இன்று வரை பணப்பலன் கிடைக்கவில்லை. மேலும் தூய்மை பணியாளராக பணியில் இருந்த அழகம்மாளையும் பணியில் இருந்து நிறுத்தி உள்ளனர். இந்நிலையில் தற்போது வரை பணப்பலன் கிடைக்காததால் கணவர் பெருமாள் மற்றும் அழகம்மாள் இருவரும் இறந்து விட்டதாக அப்போதைய  ஊராட்சி தலைவர் மற்றும் அப்போதைய கிளார்க் ராஜா இருவரும் சேர்ந்து தங்களது பணத்தை அபகரித்து விட்டதாக  அழகம்மாள் தெரிவித்தார்.

மேலும் பாவாலி ஊராட்சியில் தற்போது பணியில் உள்ள தூய்மை பணியாளர்கள் நல்லு(50), சுந்தரம்மாள்(45) தங்களது ஊதிய நிலுவைத்தொகை ரூ.45ஆயிரம் மற்றும் ரூ.35 ஆயிரத்தை அபகரித்து விட்டதாக மனு அளித்தனர்.தற்போது ஊராட்சி செயலாளர் (பொ) சதானந்தம் கூறுகையில்,`` பெருமாள் ஓய்வு பெற்ற பிறகு தினசரி ஊதியத்தில் பணியாற்றி இருக்கிறார்.

நிரந்தர ஊழியருக்கு மட்டும் ஊதியத்தில் மாதம் ரூ.30 குழு காப்பீடு திட்டத்தில் பிடித்தம் செய்யப்படும். தற்காலிக ஊழியர்களுக்கு பிடித்தம் செய்வதில்லை. அதனால் பணப்பலன் கிடைத்திருக்காது. அழகம்மாள் இறந்ததாக கூறி பணப்பலன் எதுவும் எடுக்க வாய்ப்பில்லை. ஒருவர் இறந்தால் அவரின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் நிலையில் அபகரித்து விட்டதாக கூறுவது, புரிதல் இல்லாமல் சிலரின் தூண்டுதலால் நடக்கலாம்’’ என்றார்.