Oct 23, 2021
தமிழகம்

பவானி தொகுதி மக்களுக்கு ஜாக்பாட் தடுப்பூசி செலுத்தி கொண்டால் வீட்டுமனை, தங்க காசு பரிசு

பவானி: பவானி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் இன்று நடக்கும் முகாமில் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களுக்கு குலுக்கல் முறையில் வீட்டுமனை, தங்ககாசு போன்ற பரிசுகள் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து பவானி தாசில்தார் முத்துகிருஷ்ணன் கூறியதாவது: கொரோனா தடுப்பூசி மாபெரும் சிறப்பு முகாம் தமிழகத்தில் இன்று 2ம் கட்டமாக நடைபெறுகிறது. பவானி சட்டமன்றத் தொகுதியில் தடுப்பூசி போட்டு கொள்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையில் முதல் பரிசாக ஒரு கிராம் தங்கக் காசு 4 பேருக்கும், இரண்டாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மதிப்புள்ள வெள்ளி விளக்குகள் நால்வருக்கும், மூன்றாம் பரிசாக ரூ.500 மதிப்புள்ள புடவைகள், ரூ.500 மதிப்புள்ள வேஷ்டிகள் தலா 10 பேருக்கும் வழங்கப்படும். ஆறுதல் பரிசாக 4 பேருக்கு ரூ.400 மதிப்புள்ள ரீசார்ஜ் கூப்பன்கள் வழங்கப்படும். சிறப்பு பரிசாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் ஏழை, எளியோர் 10 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு தலா 2 சென்ட் வீட்டுமனை வழங்கப்படும் என்றார்.