Jan 30, 2023
தமிழகம்

விவசாயத்துறையில் புதிய முயற்சி அரசு பண்ணையில் 5 ஆயிரம் முருங்கை நாற்று தயார்-தோட்டக்கலைத்துறை அதிகாரி தகவல்

உடுமலை : மடத்துக்குளம் வட்டாரத்தில் விவசாயத்துறையில் புதிய முயற்சியாக, சங்கராமநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் விவசாயிகள் நடவு செய்யும் வகையில், 5 ஆயிரம் முருங்கை நாற்றுகள் தயார் நிலையில் உள்ளது என தோட்டக்கலைத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் வட்டாரத்திற்கு 2022-23ம் நிதியாண்டில் 5  ஹெக்டருக்கு முருங்கை நாற்றுகள் வழங்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் வட்டாரம் சங்கராமநல்லூர் அரசு தோட்டக்கலை பண்ணையில் உற்பத்தி  செய்யப்பட்ட பிகேஎம்-1 ரகம் முருங்கை நாற்றுகள் 1 ஹெக்டருக்கு 1000  நாற்றுகள் வழங்கப்படும். தற்போது நாற்றுகள் தயார் நிலையில் உள்ளதால்  தேவைப்படும் விவசாயிகள் உடனடியாக பெற்று நாற்றுகளை நடவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார் கூறியதாவது: அரசு தோட்டக்கலைத்துறை மூலம் கொய்யா சாகுபடிக்கு மானியம் அளித்து வருகிறது. கொய்யாவில் வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, போன்ற தாதுக்களும், உயிர்ச்சத்துக்களும் உள்ளது. விதையில் இரும்புச்சத்து நிறைய உள்ளது.  கொய்யா இலை சாறு மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுவதாக கூறப்படுகிறது. அனைத்து மண் வகையிலும் பயிர் வளர்ந்தாலும் வடிகால் வசதி மிகவும் முக்கியம். மூன்று ஆண்டுக்கு ஒரு முறை செடி ஒன்றுக்கு மூன்று கிலோ ஜிப்சம் இடுவதன் மூலம் மண்ணின் களர் உவர் தன்மையை குறைக்கலாம்.

பயிரிடும் முறை: ஜூன் முதல் டிசம்பர் வரை நடவு பருவமாகும். 45 செ.மீ நீளம் 45 செ.மீ அகலம் 45 செ.மீ உயரம் என்ற அளவில் குழிகளைத் தோண்டி 10 கிலோ தொழு உரம் ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இவற்றுடன் மேல் மண்ணையும் கலந்து இட வேண்டும். பின்னர் செடிகளை குழிகளின் சரி மத்தியில் நட வேண்டும். பயிர் தேவைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும். கொய்யாவின் மகசூலை மேம்படுத்த யூரியா 1 சதம் மற்றும் துத்தநாக சல்பேட் 0.5 சதம் இரண்டும் கலந்த கலவையை மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் மரங்களின் மேல் இலை வழி உணவாக தெளிக்க வேண்டும்.

அவரை வகை பயிர்கள் மற்றும் குறைந்த வயதுடைய காய்கறி பயிர்களை கொய்யா காய்ப்புக்கு  வரும் வரை ஊடுபயிராக பயிர் செய்யலாம். செப்டம்பர் அக்டோபர் மற்றும் மார்ச் மாதங்களில் பொதுவாக கவாத்து செய்ய வேண்டும். மேலும் ஒரு பருவத்தில் காய்ப்பு முடிந்தவுடன் வறண்ட மற்றும் உபயோகமில்லாத குச்சிகளை நீக்க வேண்டும். கொய்யா பதியன் இட்டு நடவு செய்த இரண்டாம் வருடத்தில் இருந்து காய்க்க ஆரம்பித்து விடும்.

25 டன் மகசூல்: பூக்கள் பூக்கும் காலத்திலிருந்து ஐந்து மாதங்கள் கழித்து கனிகளை அறுவடை செய்யலாம். ஒரு எக்டருக்கு  ஒரு வருடத்திற்கு 25 டன்கள் வரை கொய்யா மகசூல் கிடைக்கும். மடத்துக்குளம் வட்டாரத்தில் கொய்யா சாகுபடிக்கு கொய்யா பதியன்கள் 1 எக்டருக்கு  555 செடிகள் மற்றும் இடு பொருட்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளது. இதற்காக ஒரு ஹெக்டருக்கு ரூபாய் 17600 மானியத் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

முருங்கை சாகுபடி: முருங்கைக்காய் மரங்களில் வளராமல் செடிகளில் வளர்வது செடி முருங்கை எனப்படுகிறது. இந்த செடி முறை நான்கு அல்லது ஐந்து மாதங்களில் காய்க்க தொடங்குவதால்  விரைவில் விவசாயிகளுக்கு வருமானம் கிடைக்கும். அதேபோல் ஒரு முறை விதைத்தால் மூன்று ஆண்டுகள் வரை காய்ந்து விவசாயிகளுக்கு பலன் தரும். விவசாயிகளுக்கு அதிக லாபம் தரும் இந்த செடி முருங்கையை முறையாக சாகுபடி செய்வதன் மூலம் அதிக லாபம் பெற முடியும். செடி முருங்கை எல்லா வகை மண்ணிலும் வளரும்.

இருப்பினும் மணல் கலந்து செம்மண் பூமி அல்லது கரிசெல் பூமி மிகவும் ஏற்றது. ஜூன்-ஜூலை, நவம்பர்- டிசம்பர் நடவு செய்ய ஏற்ற பருவங்கள் ஆகும். ஒரு ஏக்கருக்கு 200 கிராம்  விதைகள் தேவைப்படும். நிலத்தை நன்கு உழவு செய்து  சமன் செய்த பின்பு 2.5மீ x2.5மீ இடைவெளியில் 45 செ.மீ x45 செ.மீ x45 செ.மீ நீளம் அகலம் ஆழம் உள்ள குழிகள் எடுக்க வேண்டும்.

குழிகளை ஒரு வாரம் ஆறப் போட்டு விட்டு, பிறகு குழி ஒன்றிற்கு நன்கு மத்திய தொழு உரம் 15 கிலோ மற்றும் நேர்மை ஆகியவற்றை சம அளவில் கலந்து குழிகளை நிரப்ப வேண்டும். மூடப்பட்ட குழிகளின் மத்தியில் சுமார் 3 செமீ ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும். ஒரு குழியில் ஒன்று அல்லது இரண்டு விதைகளை விதைக்கலாம். விதைத்த 7 முதல் 10 நாட்களுக்குள் விதைகள் முளைக்கும். விதைகளை பாலித்தீன் பைகளில் விதைத்து 30 நாட்கள் வயதுடைய செடிகளை நடுவதற்கு பயன்படுத்தலாம்.

விதைப்பதற்கு முன் மூடிய குழிகளில் நீரூற்ற வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் மீண்டும் நீர் பாய்ச்ச வேண்டும். முருங்கையில் நல்ல விளைச்சல் பெற செடி ஒன்றுக்கு 45 கிராம் தழைச்சத்து,16 கிராம் மணிச்சத்து, 30 கிராம் சாம்பல் சத்து ஆகியவற்றை விதைத்த மூன்றாவது மாதத்தில் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும். மேலும் ஆறாவது மாதத்தில் தழைச்சத்து மட்டும் ஒரு செடிக்கு 45 கிராம் என்ற அளவில் இடவேண்டும். விதைத்த இரண்டு மாதங்கள் வரை நிலத்தை களையின்றி பராமரிக்க வேண்டும். செடிகள் மூன்றடி உயரம் வளர்ந்த பிறகு மாதம் ஒரு முறை அல்லது தேவைப்படும்போது களை எடுக்க வேண்டும். செடிகள் 1 மீட்டர் உயரம் வளர்ந்தவுடன் நுனியை கிள்ளி விட வேண்டும்.

 இவ்வாறு செய்வதனால் பக்க கிளைகள் அதிகமாக தோன்றும். தனிப்பயிராக முருங்கை சாகுபடி செய்யும் போது ஊடுபயிராக தக்காளி வெண்டை போன்ற குறுகிய கால பயிர்களை பயிர் செய்யலாம்.ஓராண்டு கழித்து  காய்ப்பு முடிந்து பிறகு செடிகளை தரைமட்டத்திலிருந்து சுமார் ஒரு மீட்டர் உயரத்தில் வெட்டி விட வேண்டும். இதனால் புதிய குருத்துகள் வளர்ந்து மீண்டும் நாள் முதல் 5 மாதங்களில் காய்க்கத் தொடங்கும். இதேபோல் ஒவ்வொரு காய்ப்புக்கு பிறகு செடியை வெட்டிவிட்டு மூன்று ஆண்டுகள் வரை மறுதாம்பு  பயிராக பராமரிக்கலாம். ஒவ்வொரு முறையும் கவாத்து செய்த பிறகு   பரிந்துரை செய்யப்பட்ட தழை, மணி,சாம்பல் சத்து உரங்களோடு மக்கிய தொழு உரம் இட்டு நீர் பாய்ச்ச வேண்டும்.  

பூச்சி மேலாண்மை: முருங்கையில் கம்பளி பூச்சிகள் இலைகளைத் தின்று சேதம் விளைவிக்கும். வளர்ச்சி பெற்ற கம்பளி புழுக்களை மருந்து தெளித்து அழிப்பது மிகவும் கடினம். எனவே வளர்ந்த புழுக்களை கட்டுப்படுத்த நெருப்பு பந்தங்களை கொண்டு புழுக்களின் மேல் தேய்க்க வேண்டும். விதைத்த ஆறு மாதங்களில் காய்கள் அறுவடைக்கு வரும். ஒரு ஆண்டில் ஒரு மரத்திலிருந்து சுமார் 220 காய்கள் வரை அறுவடை செய்யலாம்.

ஆண்டொன்றுக்கு 1 ஏக்கருக்கு 20 முதல் 25 டன்கள் வரை காய்கள் கிடைக்கும். மேலும் கொய்யா,  முருங்கை நாற்றுகள் தேவைப்படும் விவசாயிகள் சிட்டா, அடங்கல், உரிமைச்  சான்று, ரேஷன் கார்டு, ஆதார், பேங்க் பாஸ்புக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2  ஆகியவற்றுடன் மடத்துக்குளம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை  அணுகலாம். மேலும் விவரங்களுக்கு துங்காவி உள்வட்ட விவசாயிகள் தாமோதரனை  96598 38787 என்ற எண்ணிலும், மடத்துக்குளம் உள்வட்ட விவசாயிகள் நித்யராஜை  84890 95995 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.