Jan 26, 2020
விமர்சனம்

கைலா - விமர்சனம்

ஆதரவற்ற  மாணவர்களை வைத்து, ஆஸ்ரமம் நடத்தி வருகிறார் கவுசல்யா. மிகப் பெரிய தொழிலதிபர் பாஸ்கர் சீனுவாசன், அந்த ஆஸ்ரமத்துக்கு பல கோடி ரூபாய் நன்கொடை அளிக்கிறார். அதன்மூலம் முறைகேடு செய்ய நினைக்கும் அவர், தனக்கு உடன் படாத கவுசல்யாவை மிரட்ட உதவி யாளர்களை அனுப்பி வைக்கிறார். அப்போது கவுசல்யாவும், அவரது மகள் கைலாவும் படுகொலை செய்யப்படுகின்றனர். பிரமாண்டபங்களாவில் பேய் நடமாட்டம் இருப்பதாக நம்பும் பொதுமக்கள் பீதியடைகின்றனர்.

அதுபற்றி ஆய்வு செய்து எழுத வரும் தானா நாயுடு, போலீஸ் மற்றும் பொதுமக்களிடம் தகவல்சேகரிக்கிறார். பேய், ஆவி, பிசாசு போன்றவை இருக்கிறதா என்று சந்தேகம் எழுப்புகிறார். அப்போது மர்மமான முறையில் கொலைகள் நடக்கிறது. அவர்களை பேய் கொன்றுவிட்டதாக நம்பி போலீஸ் விசாரிக்க தொடங்குகிறது. இதை யறிந்து அதிர்ச்சி அடையும் தானா நாயுடு, கொலையாளியை கண்டுபிடித்தாரா என்பது கிளைமாக்ஸ்.

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் கதையை தேர்வு செய்த டைரக்டர் பாஸ்கர் சீனுவாசன், அதை திரைமொழியில் சொல்வதற்கு தடுமாறி இருக்கிறார். நடிப்பில் எளிதான பாடிலாங்குவேஜை வெளிப்படுத்தி இருக்கும் அவர், டைரக்‌ஷனில் ரசிகர்களை பயமுறுத்த தவறிவிட்டார். பேய் பற்றி துப்பறியும் தானா நாயுடு, கேரக்டருக்கான நியாயத்தை செய்துள்ளார். சிறுமி கைலா நல்ல தேர்வு.

பரிதாபத்துக்குரிய கேரக்டரில் வரும் கவுசல்யா, தன் மகளை கொன்றுவிடுவார்களோ என்ற பயத்தில், மெழுகு வர்த்தி வெளிச்சத்தில் கடிதம் எழுதுகின்ற காட்சியில் சிறப்பாக நடித்துள்ளார். படத்தில் வரும் காட்சிகளின் பதற்றத்தை, பரணி செல்வத்தின் கேமரா மேலும் நன்றாக படமாக்கி இருக்கலாம். ஷ்ரவன் பின்னணி இசை, ஓகே ரகம்தான். பிலிம் மேக்கிங்கில் இன்னும் கவனம் செலுத்தி, விசாரணை என்கிற பெயரில் போலீசார் பேசும் வசனங்களை குறைத்திருந்தால், கைலா மிரட்டி இருப்பாள்.